
-மஞ்சுளா சுவாமிநாதன்
சதுர்த்தி பொழுதில் வெளியான ஓர் ஆன்மீக மலரை வாசித்தேன், என்ன இது நாம் எழுத ஒன்றுமே மிச்சம் வைக்காமல் விநாயகர் மற்றும் சதுர்த்தி பற்றி சகலமும் இந்த இதழில் உள்ளதே என்று ஒரு சின்ன கலக்கம் ஏற்பட்டது. ஆனால் படிக்கப் படிக்க சலிக்காதது விநாயகர் கதைகள் மற்றும் சிறப்புகள் என்று எண்ணி நானும் எழுதலானேன்.
அழகான யானை முகத்துடன், புஷ்டியான கைகள், கால்கள், தொந்தி, கனிந்த அன்பான வதனம், கையில் கொழுக்கட்டை, வாகனமாக மூஞ்சூர், என்று பார்த்தவுடனே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனை வரையும் ஈர்த்து விடுவார். விநாயகரை மட்டுமே அனைத்து ஹிந்துக்களும் பேதமில்லாமல் போற்றுகிறார்கள், அதற்கு காரணம் அவரது எளிமை. அவர் நம்மிடமிருந்து எதையும் எதிர்பார்ப்பதில்லை. அனைத்து பூஜைகளிலும் முதல் பூஜை விநாயகருக்கே, ஆனால் அவர் தனக்கென்று பெரிதாக கோபுரம் கட்ட வேண்டும் என்று நினைக்கவில்லை. சின்னதாக ஒரு சந்நிதி வைத்துவிட்டால் கூட போதும் . இவ்வளவு ஏன், பெரும்பாலான இடங்களில் அரசமரத்தடியில் இருந்தே நமக்கு ஆசி வழங்குகிறார்.
பிள்ளையார் என்றும் அழைக்கப்படும் இந்த பிள்ளை சாமி ஏழை எளியவர்களுக்கெல்லாம் கடவுள். நினைத்த மாத்திரத்தில், ஒருவர் களிமண்ணிலோ, மஞ்சள் பொடியிலோ, சாணியிலோ கூட பிள்ளையார் பிடித்து பூஜை செய்து விடலாம். அவருக்கு பூஜை செய்ய வாசனைப்பூக்கள் தேவையில்லை, எங்கும் சாதாரணமாக கிடைக்கக்கூடிய அருகம்புல், எருக்கம்பூ, இலைகள், மற்றும் தும்பைப்பூ போதும்.
பிள்ளையார் சந்நிதியில், இரண்டு கைகளையும் மறித்து நெற்றிப் பொட்டில் குட்டிக்கொள்ள வேண்டும். இப்படியே இரண்டு கைகளையும் மறித்துக் காதுகளைப் பிடித்துக் கொண்டு, முட்டிக்கால் தரையில் படுகிற மாதிரி தோப்புக் கரணம் போடவேண்டும். இவை எதற்கு என்றால், யோகசாஸ்திரம் வழியாக நமது நாடிகளில் ஏற்படும் சலனங்களால் நம் மனதையும் நல்லதாக மாற்றும் வழியை நமது முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். நாம் இந்த தோப்புக் கரணத்தை மனதில் நம்பிக்கையுடன் செய்தால் நமது மனம் சலனங்கள் இன்றி தெளிவு பெறும். நம்முடைய ஞாபக சக்தி பெருகும்.
சுதந்திர போராட்டம் இந்தியாவில் களைகட்டிய காலம் அது. மக்கள் திரள் திரளாக எங்கும் கூடி ஆங்கிலேயர்களை எதிர்த்தனர். இதனால் பயந்து போன அவர்கள், மக்கள் காரணமில்லாமல் பொது இடங்களில் கூடுவதற்கோ, பேசுவதற்கோ தடை விதித்தனர். தகவல் தொழில்நுட்பம் பெரிதும் வளராத காலம் என்பதால், கட்டுப்பாடுகளுக்கு இணங்கி இந்திய மக்கள் வீட்டிலேயே முடங்கிப் போனர். பால கங்காதர திலகர் இந்த நிலையை மாற்ற நினைத்தார். இந்திய மக்களை ஏதாவது ஒரு பொது விஷயத்திற்காக வீட்டிலிருந்து வெளிக் கொண்டுவர நினைத்தார். அதற்கு அவர் எடுத்த ஆயுதமே கணேசர். வட மாநிலங்களில் பெரும்பாலும் கணேசர் என்றே அழைக்கப்படுவார் நம் ஆனைமுகத்தான் .
திலகர் 1893 ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தில் கணேச சதுர்த்தி உற்சவத்தை நிறுவினார். பத்து நாட்கள் விமரிசையாக மக்கள் கொண்டாடும் ஒரு பண்டிகையாக சதுர்த்தியை மாற்றினார். பெரிய, பெரிய விநாயகர் சிலைகளை தெரு தோறும் வைத்து வழிபடும் வழக்கத்தைக் கொண்டுவந்தார். இதன் காரணமாக மக்கள் உற்சாகத்தில் திரளாக கூடினர். சுயாட்சி பற்றிய விழிப்புணர்வையும் இந்த உற்சவத்தின் மூலம் மக்களிடம் சேர்த்தார். திலகராலேயே இன்று இந்தியா முழுவதும் பல வண்ணங்களில், பல வடிவங்களில், சிறிதும் பெரிதுமாக மக்கள் தெரு தோறும் சதுர்த்தி அன்று விநாயகரை வழிபடுகிறார்கள். ஒரு நாள் பண்டிகையாக இல்லாமல் ஒரு உற்சவமாக, பிள்ளையாரை கடலில் கரைக்கும் வரை கேளிக்கையுடன் மக்கள் கொண்டாடத் துவங்கினர்.
***************************
* தேங்காய் துருவலைச் சிறிது நெய்யில் வதக்கி விட்டு, பூரணம் செய்தால் சீராக வரும் கொழுக்கட்டை தெரியாது சுவை, மனம் கூடும்.
* வேக வைத்த கடலைப் பருப்பு, காய்கறிகள், பயறு வகைகளில் பூரணம் செய்து கொழுக்கட்டை சொப்புகளில் வைக்கலாம்.
* மாவு கிளறும்போது நீருடன் ஒரு ஸ்பூன் பால் சேர்த்தால், கொழுக்கட்டை பிரியாமல் இருக்கும்.
* அரிசியுடன் சிறிதளவு உளுந்தம் பருப்பு கலந்து அரைத்தால், சொப்பு வெடிக்காமலும், தெரியாமலும் இருக்கும்.
* மாவு கிளற, கொதிக்கும் நீரில் சிறிது எண்ணெய் விட்டால் மாவு கெட்டியாகாது
* கொழுக்கட்டை மாவு கிளறியதும், கையில் எண்ணெய் தடவிக்கொண்டு சொப்பு பிடித்தால் சீராக வரும், கையிலும் மாவு ஒட்டாது.
* ராகி, கம்பு போன்ற சிறுதானியங்களை மாவாக அரைத்தும் கொழுக்கட்டை செய்யலாம்.
–ஆர். பத்மப்ரியா, திருச்சி
***************************
பிள்ளையாருக்கு விசேஷமாக 16 பெயர்கள் உண்டு. அஷ்டோத்திரம், சகஸ்கரநாமம் என்றெல்லாம் சொல்ல முடியாதவர்கள் இந்த 16 பெயர்களைச் சொல்லி வழிபடுவதால் பூரணமான நலன்களைப் பெறலாம்.
அவை: சுமுகச்ச, ஏகதந்தச்ச, கபிலோ, கஜகர்ணிக, லம்போதரச்ச, விகடோ, விக்நராஜோ, விநாயக, தூமகேதுர், கணாத்யகஷ, பாலசந்த்ரோ, கஜானன, வக்ரதுண்ட, சூர்ப்பகர்ணோ, ஹே ரம்ப, ஸ்கந்தபூர்வஜ.
இன்பமயமான வாழ்வுக்கு – வில்வ இலை.
விரும்பிய பொருளை அடைய – கரிசலாங்கண்ணி இலை.
வாக்கு வன்மை பெற்று சிறக்க – அரசமர இலை.
தீயசக்திகள் நம்மை விட்டு அகல – மருத இலை .
அகலாததுயரம் அகன்றிட – அகத்திக்கீரை இலை.
உயர்ந்த பதவிகள் பெற – நாவல் மருத்துவ இலை.
சவுபாக்கியங்கள் கிடைத்திட – வெள்ளை அருகம்புல்.
ஞானம் பெருகி அறிவு வளர – ஜாதிமல்லி இலை,.
பிள்ளையார்பட்டியில் இவற்றைச் சமர்பித்து வழிபட அவனருள்
கிடைப்பது திண்ணம்.
-மகாலட்சுமி சுப்பிரமணியன் காரைக்கால்.
***************************
* திருநீறு கொண்டு பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கி வந்தால், உஷ்ணத்தால் ஏற்படும் நோய்கள் தீரும்.
* குங்குமம் கொண்டு பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால், செவ்வாய் தோஷம் நீங்கும்.
* சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால், புத்திரப் பாக்கியம் கிடைக்கும்.
* வாழைப்பழத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால், வம்ச விருத்தி ஏற்படும்.
* வெண்ணெய் கொண்டு பிள்ளையார் செய்து வழிபட்டால், கடன் தொல்லை நீங்கும்.
* வெல்லத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால், உடலின் உள்ளேயும், வெளியேயும் உள்ள கட்டிகள் கரையும்.
* வெள்ளெருக்கு இலையில் பிள்ளையார் உருவத்தை வரைந்து வைத்து
வணங்கினால், பில்லி மற்றும் சூனியம் போன்ற தீவினைகள் அகலும்.
* புற்று மண்ணால் பிள்ளையார் செய்து வழிபாடு செய்தால், விவசாயம்
செழிக்கும்.
* உப்பு கொண்டு பிள்ளையார் பிடித்து வைத்து வழிபட்டால், எதிரிகளின் தொல்லை நீங்கும்.
* சாணத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
* சர்க்கரையில் பிள்ளையார் செய்து வழிபட, சர்க்கரை நோயின் வீரியம் குறையும்.
-ஆர். பிரசன்னா, ஸ்ரீரங்கம்.
***************************
பிள்ளைகளின் ஃபேவரைட் தெய்வம் என்பதால்தான் அவர் பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறாரோ எனத் தோன்றும். பரீட்சை சமயத்தில் கேள்விகள் ஈஸியாக வர வேண்டுமே என்று தோப்புக்கரணம் போடுவோம். ரிசல்ட் வருவதற்கு முந்தைய நாள் பயத்தோடு பிள்ளையாரைச் சுற்றுவோம். தேங்காய் உடைக்கிறேன் பாஸ் பண்ணி விடு என்று சிலர் டீல் பேசுவார்கள்.
டெஸ்ட்டா? க்ளாஸ் டீச்சர் லீவு போட வேண்டுமே என்று பிள்ளையாரை வேண்டிக் கொள்வார்கள். மழையா?? விநாயகா, அரை நாள் லீவு விட்டால் ஜாலியாய் வீட்டுக்குப் போகலாமே என்று கணபதியைக் கெஞ்சுவார்கள்.
இவ்வளவு ஏன், கிரிக்கெட் மேட்ச்சில் இந்தியா ஜெயிக்க வேண்டுமே என்றும் பிள்ளையாரை வேண்டுபவர்கள் உண்டு.
புதுக் கடையோ, புது உணவகமோ புது வீடோ, கணபதி ஹோமம் இல்லாமல் தொடங்க மாட்டார்கள்.
பண்டிகைகளுக்கு பட்சணம் செய்யும் போது கூட முதலில் பிள்ளையார் மாதிரி செய்து தான் தொடங்குவார்கள்.
நினைத்த காரியம் நிறைவேற வீட்டில் கூட 108 , 1008 என்று கொழுக்கட்டை செய்து ஆனைமுகனுக்குப் படைப்பார்கள்.
கர்நாடக சங்கீதத்தில் கீதம் பகுதியில் முதலில் வருவதும்… ஸ்ரீ கணநாத என்னும் பாடல்தான்.
மும்பை மக்கள் எங்கேயாவது பயணம் போகும்போது " கணபதி பப்பா மோரியா" என்று சொல்லி வேண்டிக்கொண்டுதான் பயணத்தைத் தொடங்குவார்கள்.
– பிரசன்னா வெங்கடேஷ், நவி மும்பை
***************************
நாங்கள் எங்கள் இல்லத்தில் கணேஷ் சதுர்த்தியை (மகாராஷ்டிர முறையில்) பத்து நாள் விழாவாக கடந்த 22 ஆண்டுகளாக கொண்டாடி வருகிறோம். ஒவ்வொரு வருடமும் எங்கள் கணபதியை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு வலியுறுத்தும் விதமாக ஒரு மையக்கருத்தையும் ( தீம்) கணபதி அலங்காரத்துடன் எழுதி வைப்போம்.
எங்கள் பகுதியில் உள்ள குழந்தைகளுடன் என் இரண்டு பிள்ளைகளும் இணைந்து மராத்தியில் கணபதி பகவானுக்கான ஆரத்தி பாடல்களைப் பாடி வணங்குவர். என் கணவரும் உற்சாகத்துடன் தன் கற்பனைக் குதிரையை ஓட விட்டு ஒவ்வொரு வருடமும் அருமையாக விநாயகப் பெருமானை அலங்கரித்து மகிழ்வார். எங்கள் நண்பர்களும் தங்களால் முடிந்த பிரசாதங்களை எங்கள் கணபதி பெருமானுக்குப் படைத்து எங்கள் இல்லத்தில் எழுந்தருளும் முதற்கடவுளின் ஆசியைப் பெருவர்.
இந்த வருடமும் எங்கள் பகுதி குழந்தைகளும் ஆர்வத்துடன் கணேஷ் சதுர்த்தியை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். பத்து நாட்கள் முடிந்தவுடன் 'கண்பதி பாப்பா மோரியா, அடுத்த வருடம் சீக்கிரம் வா' என்று கணபதிக்கு விடை கொடுக்கும்போது குழந்தைகளின் குரலிலேயே ஒரு தவிர்க்க முடியாத சோகம் வந்துவிடும். இதுவே அவர்களின் பக்திக்கு ஒரு சான்றாய் உள்ளது.
–ஜெயஸ்ரீ எம். சாரி, நாந்தேட்.