
– ஆர்.மீனலதா, மும்பை
இவ்வுலகில் கவலை இல்லாதவர்களே கிடையாது. மனிதர்களாகப் பிறந்த நாம், ஏதாவது ஒன்றிற்குக் கவலைப்படுவது வழக்கம். ஆனால், தேவையில்லாமல் அநாவசியமாகக் கவலைப்பட்டால் ஆரோக்கியம் பல வழிகளில் பாதிக்கப்படுமென்பது மறக்கப்படுகிறது.
அறிஞர் அரிஸ்டாட்டில்,
'எதிர்பார்ப்புகள் அநாவசிய
ஏமாற்றத்திற்குக் காரணமாவதினால், எதிர்பார்ப்பதைத் தவிர்த்தல்
அவசியம்' எனக்
கூறியிருப்பதை
நினைவு கூறுவது
அவசியம்.
அநாவசியக் கவலைகளைத் தவிர்க்க…
பயணம்… அதுவும் தனியாகச் செல்கையில் பல்வேறு ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவது தவிர்க்க இயலாதது. ஒரு பக்கம் புது இடம்; மனதை கொள்ளைகொள்ளும் இயற்கைக் காட்சிகள்; போகிற இடத்தில் கிடைக்கின்ற வித்தியாசமான உணவு, மாறுபட்ட கலாசாரமென இருந்தாலும், மறுபக்கம் தெரிந்தோ தெரியாமலோ எதிர்கொள்ளும் எதிர்பாராத நிகழ்வுகள் பல உண்டு. அதாவது, ஃப்ளைட் கேன்சலாவது; பொருட்கள் தொலைந்துபோவது; தங்கும் இடம் மிகவும் சாதாரணமாக இருப்பது; இடைஞ்சல்கள்… இத்யாதி…! இத்யாதி!
சங்கடங்களைத் தவிர்த்து பயணத்தில் நல்லதொரு அநுபவம் கிடைக்க மனப்பக்குவம் வேண்டும். எவ்வாறு?
தொலைக்காட்சி பெட்டிக்கு முன்பாக அமர்ந்து பிடித்த டிரிங்கைத் தனியாக ரசித்துக் குடிப்பது மாதிரி, பயணத்தின்போது தெரிந்த, பிடித்த மலையேற்றம், போட் சவாரி போன்றவற்றைத் தனியாக மேற்கொண்டு ரசிக்கலாம். தெரியாத சிலவற்றையும் முயற்சி செய்யலாம். ஓவர் ஸ்மார்ட் தேவையில்லை.
எத்தனையோ முன்னேற்பாடுகளைக் கவனித்து பயணத்தை மேற்கொண்டிருந்தாலும், வழியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், ப்ளேன் தாமதமாவது போன்றவை எரிச்சலை ஏற்படுத்தும். அச்சமயம் மூச்சை நன்கு உள்ளே இழுத்து வெளியே விட்டு, 'இது பெரிய விஷயமில்லை' என்று சொல்லியவண்ணம், அனைவருடனும் இயல்பாகப் பயணத்தை மகிழ்ச்சியாக மேற்கொள்வது அவசியம்.
வழக்கமான வாழ்வினைத் தவிர்த்து, செல்லுமிடத்தின் புதுக் கலாசாரத்தை அனுபவிப்பது புத்துணர்ச்சி தரும். ஒருசில விஷயங்கள் பொறுமையை சோதித்தாலும், புது விஷயங்களைத் தெரிந்துகொண்ட திருப்தி கிடைக்கும். பிடிக்காதவற்றை விட்டு விடலாம். நிர்ப்பந்தம் கிடையாது.
மனச்சோர்வு அடைகையில் தனக்குத்தானே, 'இது vocation. என்னுடைய வழக்கமான செயல்களை விட்டு ரிலாக்ஸ் ஆக இருக்கவே இப்பயணத்தை மேற்கொண்டுள்ளேன்' எனச் சொல்லிக்கொள்வது தேவை. லிஸ்ட் போட்டுக்கொண்டு வந்தபடி, பார்க்க வேண்டிய இடங்களைப் பார்க்க இயலாமல் போகலாம். எது முடிந்ததோ அதை மட்டும் செய்தால் போதும். ரிலாக்ஸேஷன் கிடைத்துவிடும்.
வீடு மற்றும் அலுவலகத்தின் ஸ்ட்ரெஸை ரிலீஸ் செய்ய, செல்கின்ற இடத்தை ரசிக்க, அங்குள்ள சுத்தமான காற்றை சுவாசிக்க பக்குவம் அவசியம். அநேக இடங்களைப் பார்த்து விடலாம் என ஓடி ஓடிச் செல்வது ஸ்ட்ரெஸை அதிகரிக்கும். அந்த இடத்தில் கிடைக்கும் மாறுதலான உணவை ருசி பார்த்து ஓய்வெடுக்கலாம்.
தெரியாத இடங்களுக்குச் செல்ல நேர்கையில், கூகுள் மேப் இருந்தாலும், வழிகாட்டியின் துணையை வைத்துக் கொள்ளலாம். உள்ளூரிலுள்ள அல்லது பக்கத்திலுள்ள இடங்களைக் காணச் செல்கையில், அங்குள்ள போக்குவரத்தில் பயணித்தோ, முடிந்த வரை நடந்தோ சென்று பார்ப்பது இயற்கையழகை ரசிக்க வழி வகுக்கும்.
விருப்பப்படி சாப்பிடலாம்; உடற்பயிற்சி செய்யலாம்; செய்யாமலும் விடலாம்; அந்தந்த இடத்தின் Souvenier கிடைத்தால் வாங்கிக்கொள்ளலாம். Selfieஐ மொபைலில் எடுத்து ஷேர் செய்யலாம். நம்முடைய பயணமென எண்ணி வினாடிக்கு வினாடி எஞ்சாய் செய்யலாம்.