காதல் முகவரி!

காதல் முகவரி!
Published on

தொடர்கதை
அத்தியாயம் – 3

– சுசீலா அரவிந்தன்
ஓவியம் : தமிழ்

ரு வாரம் முழுவதும் ஒரே யோசனையாகவே இருந்தாள் வெண்ணிலா. ஏதோ ஒரு ஆத்ம நிறைவு, ஆதவனின் குரல் தனக்குள் இருந்த தனிமையைப் போக்கியதாக உணர்ந்தாள். மீண்டும் மீண்டும் ஆதவனின் குரலைக் கேட்க ஏங்கினாள்.

தன் தோழி கோமதியிடம் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருந்தாள். ஆதவன் அருகாமையிலேயே இருக்க வேண்டும் எனக் கூறினாள்.

"ஐயோ, நம்ம ஊரு நெலம தெரியாம பேசாதடி வெண்ணிலா. ஊர் கட்டுப்பாட்டை மீறி நாம ஒண்ணுமே செய்ய முடியாது. அப்படி ஏதாவது செய்ய போறோம்னு நெனைக்கிறது தெரிஞ்சாலே நம்மள உசுரோட விட மாட்டாக."

பரம்பரை பரம்பரையாக அவங்க உங்க அப்பாவுக்குக் கூலியாளுங்க. ஏற்கெனவே அவங்க தாத்தா வேற ஒரு கதையச் சொல்லி ஊரையே கலங்கடிச்சி வைச்சிருக்காரு. இதுயெல்லாம் நடக்காதுடீ."

ஆணித்தரமாக மறுக்கும் கோமதியின் கைகளைப் பிடித்துக்கொண்டு கண்ணீர் உகுத்தாள் வெண்ணிலா.

"டிசும்மா இரு. உங்க அம்மா வேற போறப்பவும் வரப்பவும் நம்மளயே உத்து உத்து பாக்குறாங்க. யோசிச்சு ஏதாவது செய்வோம். இப்போதைக்கு அமைதியாய் இரு" என்றவாறே, தன் தோழியை ஆதரவாகக் கட்டிப்பிடித்துக்கொண்டாள்.

நாட்கள் மாதங்களாய் உருண்டோடின. மாதம் ஒருமுறை ஊருக்கு வருவதை வழக்கமாக்கிக் கொண்டான் ஆதவன். வரும்போதெல்லாம் வெண்ணிலாவுக்கான பிரைல் புத்தகங்களை எடுத்து வருவான்.

ஓவியம் : தமிழ்
ஓவியம் : தமிழ்

கோமதியிடம், 'பொன்னியின் செல்வன்'னைத் தந்து வெண்ணிலாவுக்குப் படித்துக்காட்டச் சொல்வான்.

ஒரு நாள் வெண்ணிலா தனது மனதில் உள்ளதையெல்லாம் கொட்டி பிரைல்லில் ஒரு கடிதம் எழுதி புத்தகத்தினுள் வைத்து ஆதவனிடம் கொடுக்கச் சொன்னாள்.

"உள்ளிருக்கும் இதயம் வெண்ணிலாவுது" என்றபடியே கோமதி புத்தகத்தை ஆதவனிடம் தர,

ஒன்றும் புரியாமல் வாங்கிச் சென்ற ஆதவன், அந்த பிரைல் எழுத்துகளைப் படிக்க முடியாததால், குழம்பியவாறே அன்றைய பொழுதைக் கழித்தான்.

மறுநாள் கல்லூரிக்குக் கூட செல்லாமல் தனது நண்பன் இசைமணியை சந்திக்கச் சென்றான். கைகளில் தனக்கான பிரத்யேகக் கைத்தடியுடன் பள்ளிக்குப் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்த இசைமணியிடம் கடிதத்தைக் கொடுத்து படித்துக்காட்ட சொன்னான் ஆதவன்.

கடிதத்தில் வெண்ணிலா ஆதவனை திருமணம் செய்துகொண்டு வாழ விரும்புவதாகச் சொல்லி இருந்தாள். ஆதவனின் பதில் வேறு மாதிரியாக இருந்தால் தனது உயிரை மாய்த்துக் கொள்வதாகவும் ஆணித்தரமாக எழுதி இருந்தாள். ஆதவனின் குரல் ஏதோ ஓர் நிறைவை தன்னுள் ஏற்படுத்துவதாகச் சொல்லி இருந்தாள்.

கடிதத்தின் சாராம்சத்தை புரிந்துகொண்ட ஆதவன், சற்று நேரம் பிரம்மை பிடித்தவாறு நின்றிருக்க, இசைமணி ஆதவனின் தோளை ஆதரவாய் தட்டிக்கொடுத்தான்.

பௌர்ணமியின் பால் வெளிச்சம். மொட்டை மாடியில் ஆதவனும் இசைமணியும்

''ஆதவா, என்னோட இயற்பெயர் என்னன்னு உனக்குத் தெரியுமா?"

''இன்னொரு பெயரா? அது என்ன நண்பா?''

"எனக்கு பொறந்தவுடன் வைச்ச பேரு தாமரைக்கண்ணன். வெவரம் தெரியத் தெரிய என் பெயரே எனக்குப் பிடிக்கலை. நமக்குப் பார்வை இல்லையே என நெனைச்சி பல நாள் அழுதிருக்கேன். அப்புறம் மனசை ஒருநிலைபடுத்தி கஷ்டப்பட்டு படிச்சி, ஆசிரியரான பின்பு மொதல்ல என் பெயரை, 'இசைமணி'ன்னு மாத்திக்கிட்டேன். ஏன் தெரியுமா ஆதவா? காதுகள்தான் எனக்கு கண்கள். என்னைப் போன்றவர்களுக்கு அகப்பார்வை மட்டுமே சாத்தியம். ஒலியை மட்டுமே கேட்டு எங்களுக்குள் ஓர் உலகில் வாழ்கிறோம்.

வெண்ணிலாவும் அப்படித்தான். அவளுக்கு உன்னால் மட்டுமே நல்லதோர் வாழ்க்கை தர முடியும்.

இந்த உலகினைப் பார்க்கும் ஆசை மட்டும் எங்களைப் போன்றோர்க்கு கடைசி வரை நிறைவேறாமல் போகும். எனவே, எங்களின் ஆசைகளை எப்போதும் எங்கள் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்றால் மட்டுமே ஆவல் கொள்வோம். வெண்ணிலாவின் ஆசை நிறைவேறக்கூடிய ஆசைதான். தயவு செய்து அவளை திருமணம் செய்துகொள் ஆதவா" எனக் கூறிய நண்பனை அதிர்ச்சியுடன் நோக்கினான் ஆதவன்.

"இசைமணி, எங்க கிராமத்தைப் பற்றி இன்னும் உனக்கு சரியா புரியலை. ஜாதிப் பிரச்னைன்னா அவங்க மொதல்ல தூக்குறது அருவாதான். இப்பகூட வெண்ணிலா சந்தோஷமா இருக்கா அப்படின்ற ஒரே காரணத்திற்காகத்தான் என்னை அவங்க வீட்டுக்கு வர அனுமதிக்கிறாங்க. இதுல காதல் கல்யாணமுன்னு ஆசை இருக்கிறதுன்னு தெரிஞ்சாலே அவ்ளோதான்."

"அடே ஆதவாதிருமணமாகி நீங்க ஏன் அந்த ஊர்ல இருக்கணும்? வெண்ணிலாவோட இந்த ஊருக்கு வந்து ஜாம் ஜாமுனு வாழலாமே. அப்புறம் ஊர் என்ன செய்யும்? கொஞ்ச நாளுல மறந்துட்டு அவங்க அவங்க வேலையைப் பார்க்க போயிடுவாங்க. நீ படிச்சிட்டு இருக்கிற கல்லூரியிலேயே உனக்கு வேலை தயாராக இருக்கு. பிறகு என்னப்பா…" என இசைமணி கூறவும்

"இதெல்லாம் சாத்தியமா நண்பா?" என சந்தேகத்துடன் கேட்கும் ஆதவனை அணைத்துக் கொண்டு, "கண்டிப்பா நல்லபடியா முடியும். மனச போட்டுக் குழப்பிக்காதே" என்றவாறு,

"பதில் என்ன எழுதட்டும் சொல் நண்பா" என ஆர்வத்துடன் பேப்பரும் ஸ்டைஸீமு (எழுதுகோல்)மாய் வந்தமர்ந்தான் இசைமணி.

"வெண்ணிலாவை பார்க்கும் போதெல்லாம் மனசுக்குள் வெகுகாலம் பழகிய புரிதல் தோன்றும் நண்பா. இடையில் சாதி என்று ஒன்று இருக்கிறதே என நினைத்து மேற்கொண்டு யோசிக்கக் கூட மாட்டேன். ஆனா, நீ சொல்றதும் சரிதான். என்னைப் போல் புரிந்துக் கொள்பவர்களால் மட்டும்தான் வெண்ணிலாவுக்கு நிரந்தர அன்பைத் தர முடியும். நன்றி இசைமணி. பதிலை ரெண்டு வரி கவிதையா எழுதிடேன்" என்றவன் தொடர்ந்தான்.

'விண் வெண்ணிலாவைக் காணவே

மாலையில் மேகத்துள்

மறைந்து கொள்கிறான்

ஆதவன்

தன் வெண்ணிலாவைக் காணவே

ஊருக்கு வந்து செல்கிறான்!'

"அடஇப்ப புரியுது, ஏன் அடிக்கடி ஊருக்கு ஓடிபோறேனு" கலகலவென சிரித்தான் இசைமணி.

(தொடரும்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com