பனிக்கால பராமரிப்பு!

பனிக்கால பராமரிப்பு!
Published on

ஆரோக்கியம்!

தொகுப்பு :
எஸ்.மாரிமுத்து,
சென்னை

குளிர்க்காற்று வீசும் நேரம், பனி பெய்யும் நேரங்களில் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். கட்டாயம் போக வேண்டிய அவசியம் ஏற்பட்டால் தலையில் மப்ளர், கம்பளி, ஸ்வெட்டர், காலுறைகள் அணிந்து கொண்டு செல்வது பாதுகாப்பானது.

காலை, மாலை நேரங்களில் இஞ்சி டீ, புதினா டீ, துளசி டீ, மிளகு, ஏலம் தட்டிப்போட்ட டீ என தினம் ஒரு டீயை குடித்தால் உடம்பு சுறுசுறுப்பாக இருக்கும். மற்ற நேரங்களில் தேவைப்பட்டால் பிளாக் டீ, லெமன் டீ குடிக்கலாம்.

சளி தொந்தரவு உள்ளவர்கள் வெதுவெதுப்பான நீரில் துளசி இலைகளைப் போட்டு வைத்து, இலைகளை எடுத்து மென்று சாப்பிட்டுவிட்டு அந்த நீரைக் குடிக்கலாம். சளி கரைந்து வெளியே வந்துவிடும்.

சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரையே பயன்படுத்துங்கள். வெளியிடங்களில் உள்ள நீரைத் தவிர்ப்பது நல்லது. கொதிக்கும் நீரில் சீரகத்தைத் தட்டிப் போட்டு அதை ஆற வைத்து குடியுங்கள்.

காலையில் வெறும் வயிற்றில் வெந்நீரில் எலுமிச்சை சாறை விட்டு அதில் சிறிது தேன் கலந்து குடிக்கலாம். பாலில் மஞ்சள் தூள், பனங்கற்கண்டு பொடி கலந்து குடிக்கலாம்.

குளிர்காலத்தில் ஜீரண சக்தி குறைவாக இருக்கும். ஆகவே, எளிதில் செரிக்கக்கூடிய ஆரோக்கிய உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து சூடு செய்து சாப்பிடும் பழக்கத்தை விட்டு விடுவது நல்லது.

சளியினால் மூச்சு விட சிரமப்படுபவர்கள், ஆஸ்துமா தொந்தரவு உள்ளவர்கள் மூச்சுப் பயிற்சி செய்வதுடன் நிறையத் தண்ணீரைக் குடிப்பது நல்லது.

இதமான வெயில் வந்தவுடன் முதியவர்கள் நடைப்பயிற்சி செய்வதையும் இளைஞர்கள் ஜாக்கிங் செய்வதையும் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள், மார்பிள் டைல்ஸ் குளிர்ச்சியைத் தாங்க முடியாதவர்கள் அவசியம் வீட்டுக்குள் நடக்கும்பொழுது வழுக்காத அதற்குரிய காலணிகளைப் பயன்படுத்துவது அவசியம்.


காலை, இரவு உணவுகள் ஆவியில் வேக வைத்த, எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவாக இருப்பது சிறப்பு. டிபன் வகைகளுக்கு தேங்காய்ச் சட்னியை குறைத்து, புதினா, கொத்துமல்லி, கறிவேப்பிலை சட்னி, எல்லா காய்கறிகளையும் போட்டு சமைத்த பாசிப் பருப்பு சாம்பார் போன்ற எளிதில் செரிக்கக்கூடியவைகளையே செய்து சாப்பிடலாம்.

காலை, பகல் உணவு இடைவேளையில் சத்தான கீரை, கலோரி குறைவான காளான் சூப், நாக்குக்கு விறுவிறுப்பான தக்காளி சூப், கேரட் சூப் போன்றவற்றில் எதையாவது ஒன்றைத் தயாரித்து அதில் மிளகுப் பொடியைத் தூவி அனைவரும் குடிக்கலாம்.

மதிய உணவில் தூதுவளை சட்னி, தூதுவளை ரசம், கொள்ளு மசியல், கொள்ளு ரசம் ஆகியவற்றை வாரத்துக்கு இரண்டு முறையாவது சேர்த்துக் கொள்ளவும். இவை உடல் சூடு குறையாமல் பாதுகாக்கும்.

இஞ்சி சட்னி, பிரண்டை சட்னியை மாதம் ஒரு முறையாவது சாப்பிட, செரிமானக் கோளாறுகளை நீக்கும். ஈஸ்னோபிலியா தொந்தரவு உள்ளவர்கள், சளி உள்ளவர்கள் ஆடாதொடை இலையில் சூப் போல செய்து பருகினால் நல்ல பலன் கிடைக்கும்.

அழகு

பனிக்காலத்தில் சருமம் வறண்டு போகும். உதடுகள் வெடிக்கும். கை, கால்களில் சுருக்கம், நிறத்திலும் மாற்றம் ஏற்படும். இதற்குக் காரணம் சருமத்துக்கு ஈரப்பதத்தையும் எண்ணெய் பசையையும் வழங்கும் சில சுரப்பிகள் பனிக்காலத்தில் மந்தமாகும். வீசும் குளிர்காற்று சருமத்தின் மிருதுத் தன்மையை மாற்றிவிடும்.

பனிக்காலம் முதலில் அட்டாக் செய்வது நம் உடலிலுள்ள ஈரப்பதத்தைத்தான். இதற்குத் தீர்வு தரமான மாய்சரைஸர் க்ரீமும், கோல்டு க்ரீமும்தான். தினம் குளித்தவுடன் அல்லது முகம் கழுவியவுடன் இவற்றை உபயோகிக்க வேண்டும்.

வறண்ட சருமம் உள்ளவர்கள் வாழைப் பழத்தை மசித்து அதில் பாலாடை மற்றும் தேன் கலந்து முகத்தில் பூசி, கால் மணி நேரம் கழித்துக் கழுவினால் சரும சுருக்கம் நீங்கும்.

பப்பாளிப் பழத்தை மசித்து முட்டையின் வெள்ளைக் கரு மற்றும் தயிரோடு சேர்த்து முகத்தில் பூசி, கால் மணி நேரம் கழித்து கழுவினால் முகச் சுருக்கங்கள் நீங்கி, சருமம் மிருதுவாகும்.

சந்தனத்தோடு வெள்ளரி விதைகளைக் கலந்து அரைத்து முகத்தில் பூசி, பத்து நிமிடங்கள் கழித்துக் கழுவ வேண்டும். இதை வாரம் இரண்டு முறை செய்து வந்தால் முகம் ஜொலிக்கும்.

மக்காச்சோள மாவில் தயிர் கலந்து, அதைக் கை, கால்களில் தடவி, கால் மணி நேரம் கழித்து நீரில் கழுவி வந்தால் சருமம் மின்னும்.

குளிக்கும் முன்பு தேங்காய் எண்ணெய்யால் உடலை மசாஜ் செய்துவிட்டு சில நிமிடங்கள் கழித்துக் குளித்தால், உடல் வறட்சி, சருமங்களில் வெடிப்பு போன்றவற்றைத் தடுக்கலாம். சோப்புக்கு பதிலாக கடலை மாவு, பாசிப் பருப்பு கலந்து பூசிக்கொள்ளலாம்.

இரவு தூங்குவதற்கு முன்பு உதடுகளில் வெண்ணெய் அல்லது பாலாடைக் கட்டியை தடவலாம். இதனால் வெடிப்புகளைத் தடுக்கலாம்.

நல்லெண்ணெயை வெதுவெதுப்பான சூட்டில் உதடுகளில் தடவினாலும் வெடிப்புகள் மறையும்.

பன்னீர், கிளிசரின் இரண்டையும் கலந்து கை விரல்களிலும், பாதங்களிலும் இரவில் பூசிக் கொண்டால் சருமம் வறண்டு, வெடிப்புகள் ஏற்படுவது தவிர்க்கப்படும்.

தேங்காய் எண்ணெயில் மஞ்சள் தூள், தேன், நெய் சிறிதளவு கலந்து களிம்பு போல பூசினாலும் பாத வெடிப்புகள் மறையும்.

தேங்காய் எண்ணெயுடன் பத்து துளிகள் விளக்கெண்ணெய் கலந்து சூடாக்கி மண்டையில் அழுத்தித் தடவி, சூடான நீரில் நனைந்த டவலை பத்து நிமிடங்கள் ஒத்தடம் கொடுத்து தலைமுடியை கழுவினால் பொடுகு வராது. முடியும் உதிராது.

கால் விரல் இடுக்குகளில் லேசாகப் பவுடர் போடுவது, வாஸலின் தடவுவதால் சேற்றுப் புண், பூஞ்சைகள் வராது.

குளிர் காலத்தில் ஆரோக்கியம்

lகுளிர் காலத்தில் ஜலதோஷம் பிடிக்காமல் இருக்க, குளிக்கும் வெந்நீரில் சிறிது நீலகிரித் தைலம் அல்லது விக்ஸ் போட்டுக் குளிக்கலாம்.

lகுளிர் காலத்தில் தினமும் காலையில் சிறிது இஞ்சி, மிளகு தட்டிப் போட்ட டீயும், இரவில் மிளகு, மஞ்சள் போட்டு காய்ச்சிய பாலும் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். சளி, இருமல் கிட்டவே வராது.

lஉணவில் இஞ்சி, கொத்துமல்லியை சேர்ப்பது மிகவும் நல்லதாகும். காரணம், இவை குளிர்காலத்தில் உடம்பை சூடாக்கும் தன்மை கொண்டவை.

lதக்காளி, கேரட், பீட்ருட் இவற்றை பச்சையாக உண்டு வந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். குளிர் காலத்தில் எளிதாக தொற்று, சளி, இருமல், மூச்சுத் திணறல் போன்றவை ஏற்படாது.

lவெங்காயம், பூண்டு, வெந்தயம் போன்றவற்றை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் குளிர்கால தொல்லைகள் ஏற்படாது. அது மட்டுமின்றி, நோய் எதிர்ப்பு சக்தியும் கூடும்.

lசமையலில் அடிக்கடி மிளகு அல்லது ஓமத்தைச் சேர்த்து வந்தால் பல உடல் உபாதைகளைத் தடுக்கலாம்.

lதினமும் காலை, மாலை டீ அருந்தும்போது ஓரிரு துளசி இலைகளைப் போட்டுக் கொதிக்க வைத்துக் குடித்தால் குளிர்கால உபாதைகளில் இருந்து தப்பிக்கலாம்.

lபனிக்காலத்தில் உடற்சூடு குறையாமலிருக்க பாதாம் பருப்பு, வேர்க்கடலை, அரிசி, கோதுமை, முந்திரிப் பருப்பு ஆகிய உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

lபெண்கள் உடலில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடுகு எண்ணெய் ஆகிய எண்ணெய்களில் ஒன்றைத் தேய்த்து மசாஜ் செய்து பின்பு குளிக்க வேண்டும்.

lகுளிர் காலத்தில் உடலில் எண்ணெய் பசை அதிகம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

lபன்னீர், கிளிசரீன் இரண்டையும் கலந்து தூங்கச் செல்லும்போது பாதங்களிலும் கைவிரல்களிலும் தேய்த்துக் கொண்டால் சருமம் மிருதுவாகும்.

lகுளிர்காலத்தில் பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டால் எலுமிச்சைச் சாற்றை தடவி ஊற வைத்துக் கழுவ வேண்டும்.

lஏலக்காயை தூள் செய்து வெண்ணெயுடன் கலந்து உட்கொண்டால் சளி நீங்கும்.

lசுக்கைப் பொடி செய்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் விக்கலுடன் சளி போய்விடும்.

lகருந்துளசி கிடைத்தால் சாறு எடுத்துப் பிழிந்து தினசரி சளி போகும் வரை அருந்தவும்.

lகுளிர்காலத்தில் வெளியே செல்லும்போது காதுகளில் பஞ்சை வைத்துக்கொண்டு வெளியே சென்றால் ஈரக் காற்றினால் ஏற்படும் தொந்தரவுகளைத் தடுக்கலாம்.

lகூடியமட்டும் ஸ்வெட்டர், மப்ளர் அணிந்து செல்லலாம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com