ஒரு வார்த்தை!

ஒரு வார்த்தை!
Published on

பெங்களூருவின் பிஷப் காட்டன் பெண்கள் பள்ளி மிகவும் பிரபலமானது மட்டுமல்ல; பாரம்பரியமானதும் கூட! ஒழுக்கம் மற்றும் கல்விக்குப் பெயர் போனது. வசதியான, பிரமுகர்களின் செல்லப் பிள்ளைகளுக்குத்தான் பெரும்பாலும் அட்மிஷன் கிடைக்கும்.

அந்தப் பள்ளி, ஸாரி… கான்வென்ட்டின் மாணவிகள் 'பால்ட் வின்ஸ்' என்ற வேறொரு பள்ளி மாணவியருடன் கேங்-வார் நடத்திய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. யூனிஃபார்ம் அணிந்த யுவதிகள் குடுமிப் பிடிச் சண்டை போடுவதையும், மட்டைகளால் ஆக்ரோஷமாகத் தாக்கி உருள்வதையும் நாள் முழுக்க டீ.வி.களில் விலாவாரியாகக் காட்டி விவாதித்தனர்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பெண்ணின் காதலன் (அவனும் பள்ளி மாணவன்தான்!) பக்கத்துப் பள்ளி மாணவியை வெளியே கூட்டிக் கொண்டு போய்விட்டான். (ரெட்டைவால் குருவி ஸ்டைல்!) அது வாட்ஸ் அப் சேட்டில் வெளியாகிவிட, ஓர் இளைஞனுக்காக, இரண்டு மாணவிகள் அடித்துக் கொள்ளவே, கும்மாங்குத்துத் தெருச் சண்டையாகிவிட்டது. பலமாக மோதிக் கொண்டதில், மொத்த பேரும் கூண்டோடு அள்ளப்பட்டு, போலீஸ் தலையிட்டு சமரசம் செய்திருக்கிறது.

"Bring your parents tomorrow´ என்று ஒரு வார்த்தையை ஆசிரியர் சொல்லிவிட்டாலே, ஏதோ வானமே இடிந்து தலைமீது விழுந்துவிட்டது போல நடுக்கம் வந்து விடுமே… நமக்கெல்லாம்… அது அந்தக் காலம்!

இப்போது போலிஸ் வந்து வழக்குப் பதிவு செய்து, டீ.வியில் உருட்டோ உருட்டு என்று உருட்டினாலும் கெத்தாக நிற்கின்றன பிள்ளைகள்!

பெங்களூரு என்ன புடலங்காய்? இங்கே மதுரை பேருந்து நிலையத்தில் அரசுப் பள்ளி மாணவிகள் இரண்டு பிரிவாகப் பிரிந்து தாக்கிக் கொள்ளவில்லையா? அப்புறம் அந்த ஆவடி பெண்கள் கல்லூரியில்… வடிவேலு சொல்வது போல "என்ன அடி?"

சும்மா, 'பேரன்டிங் சரியில்லை: பணத்துக்குப் பின்னாலேயே போய் பிள்ளைகளைக் கவனிக்கிறது இல்லை" என்றும், "டீச்சர்ஸ் மொதல்ல மாதிரி இல்லீங்க… ஸ்கூல் ஸ்டான்டர்டே போச்சு!" என்றும், பழியைத் தூக்கிப் போடாமல் கொஞ்சம் மாத்தி சிந்திச்சா என்ன?

இந்தக் காலத்துப் பெண்கள், நவீன யுகத்தின் வார்ப்புகள். விநோதமான புதிர்த்தன்மையும், வியக்க வைக்கும் எனர்ஜியும் கொண்டவர்கள். கிட்டத்தட்ட வத்திக்குச்சிகள் போல!

கடந்த மூன்று வருடமாக, லாக்-டவுன் என்பதால் பள்ளிகள் சரிவர இயங்கவில்லை. உடற்பயிற்சியோ, மனசுக்கு ஊக்கம் தரும் மாணவிகளின் நட்போ, இணக்கமோ கிடைக்கவில்லை. திடீரென்று பரீட்சைகளும் பாடத் திட்டங்களும் தலைமேல் இறங்கிய வேகத்தை அவர்களால் தாள முடியவில்லை. அதன் வெளிப்பாடே உள்ளூர் ரெளடிகள் போல உஷ்ணமாக மோதிக் கொள்வது எல்லாம் நடக்கிறது.

அதே உத்வேகத்தை, ஆற்றலை, வேறொரு நல்ல தளத்துக்கு மடை மாற்றினால், அவர்கள் அதிசயங்களை நிகழ்த்துவார்கள். இந்த சம்பவத்தின் மூலம் பாடம் கற்றுக்கொண்டு, ஜஸ்ட் மூவ் ஆன் கேர்ள்ஸ்! ஐ…மின் ரெளடி பேபீஸ்!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com