
-கவிதா பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி
*******************
வில்வ மரம் சிவனின் இருப்பிடமாகக் கருதப்படும் இமயலையில் அதிகம் காணப்படுகிறது. இதில்லிருந்தே சிவபெருமானுக்கும் வில்வ மரத்திற்கும் இடையிலான தொடர்பை நாம் உணரலாம். சிவ அர்ச்சனையில் முக்கிய இடம் வில்வ இலைக்கு உண்டு. வில்வத்தினால் சிவனை அர்ச்சித்து வழிபடுவது பாவங்களைப் போக்கும் என்பது ஐதீகம். வில்வ மரத்தில் திருமால் வசிக்கிறார். எனவே வில்வம் இருக்கும் இடம் தேடி வந்து மகாலக்ஷ்மி வாசம் செய்வாள் என்பது ஐதீகம்.
வில்வத்திற்கு 'ஸ்ரீ விருட்சம்' என்ற மற்றொரு பெயரும் உண்டு.
வில்வத்தின் மூன்று இலைகள், சிவபெருமான் ஏந்தியுள்ள திரிசூலத்தின் வடிவத்தையும், சிவனினட் முக்கண்களையும் உணர்த்துவதாகக் கூறுவர். பிரதோஷ காலத்தில் சிவலிங்கத்தை வில்வம் கொண்டு 'ருத்ர த்ரிசதி' நாமார்ச்சனை செய்வதனால் கிடைக்கக்கூடிய பெரும்பலன் பற்றி காளஹஸ்தி புராணம் தெளிவாக எடுத்துரைக்கிறது.
கணபதி, மகாலட்சுமி, த்ரைலோக்ய கணபதி, மோஹன கணபதி, லட்சுமி கணபதி மந்திரங்களை வில்வ மரப் பலகையில் வரைந்து பூஜித்தால் வீட்டில் சகல செளபாக்யங்களும் உண்டாகும் என்பது ஆன்றோர் வாக்கு.
வில்வமரம் வளர்ப்பதனால் அசுவமேதயாகம் செய்த பலன் கிட்டும். அதோடு ஆயிரம் பேர்களுக்கு அன்னதானம் செய்த பலனும் கிடைக்கம். மேலும் கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும். காசி முதல் ராமேஸ்வரம் வரையுள்ள புண்ணிய சிவ தலங்களுக்குச் சென்று வழிபட்ட பலன் கிடைக்கும் என்று வில்வத்தின் சிறப்பு பற்றி புராணங்களில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. வில்வ இலைகளை பூஜைக்காகப் பறிக்கும்போது சிவநாமத்தை உச்சரித்துக்கொண்டே பறிக்க வேண்டும்.
வில்வ இலைகளை மாதப் பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பெளர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் பறிக்கக் கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
பூமியில் விழுந்த வில்வ இலைகள், பூச்சிஅரித்த வில்வ இலைகள் ஆகியவற்றை பூஜைக்குப் பயன்படுத்தக்கூடாது.
வில்வ மரத்தில் லட்சுமி வாசம் செய்வதாகவும் ஒரு கூற்று உண்டு. எனவே, வில்வ இலைகளை சிவன் காலடியில் சமர்ப்பித்து அர்ச்சனை செய்யும்போது எல்லா செல்வங்களையும் உன் திருவடிகளில் அர்ப்பணித்துவிட்டு உன்னைச் சரணடைகிறேன் என்று கூறி வழிபடுவதாக ஐதிகம்.
வில்வ இலைகள் சிவன் எனவும், முட்கள் சக்தி எனவும், கிளைகளே வேதங்கள் என்றும் வேர்கள் முப்பத்து முக்கோடி தேவர்கள் என்றும் போற்றப்படுகிறது. சிவ பூஜையின்போது வில்வத்தால் அர்ச்சனை செய்தால் தீய சக்திகள் அகலும்.
வில்வத்துக்கு தோஷம் கிடையாது என்பதால் சிறிது தண்ணீரை வில்வத்தின் மீது தெளித்தாலே போதுமானது என்பர். இப்படி தண்ணீர் தெளித்து விட்டு பூஜைக்குப் பயன்படுத்தலாம்.
-ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி
*******************
நல்ல மணவாழ்க்கை அமைய வேண்டும் என்று விரும்புபவர்கள் கட்டாயம் மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும்.
ஆன்மிகத்தில் ஒருமுறை பார்வதி விளையாட்டாக சிவனின் கண்களை மறைத்தார். அப்போது உலகமே இருளில் மூழ்கியது. இதற்கு பரிகாரமாக பார்வதி பூமிக்கு வந்து தவத்தில் ஈடுபட்டார். தன் இதயத்தில் ஆத்மலிங்கமாக சிவனை பூஜித்தார். பார்வதியை மீண்டும் கைலாயம் வரவழைக்க வேண்டும் என தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். சிவனும் அதை ஏற்று பூமிக்கு வந்து பார்வதியின் சகோதரரான திருமாலிடம் உனது தங்கையை தாரைவார்த்துக் கொடுக்கச் சொல்லி திருமணம் புரிந்தார்.
மாமரங்கள் அதிகம் நிறைந்த பகுதியில் திருமணம் நடந்ததால் மாங்காடு அம்மன் என்று அழைக்கப்பட்டார்.
மேலும் அம்மனுக்கு ஆதிகாமாட்சி என்றும் பெயரிடப்பட்டது. சிவனுக்கு தாரைவார்த்துக் கொடுத்த திருமால் வைகுண்ட பெருமாள் என்னும் பெயரில் கோவில் கொண்டார். காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு சென்று வழிபாடு செய்தால் நல்ல மணவாழ்க்கை அமையும். எனவே ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இந்து கோயிலுக்கு சென்று வழிபாடு செய்யுங்கள். உங்களுக்கு நல்ல மணவாழ்க்கை கிடைக்கும்.
-அமுதா அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி