தமிழக புராதன வைணவத் திருத்தலங்கள்!

தமிழக புராதன வைணவத் திருத்தலங்கள்!
Published on
பகுதி – 3
ஆலயம் ஒன்று; திவ்யதேசம் நான்கு!

-Dr. சித்ரா மாதவன்

'நகரேஷூ காஞ்சி' என்று போற்றப்படும் காஞ்சிபுரம் திருத்தலத்தில் அமைந்துள்ளது உலகளந்த பெருமாள் திருக்கோயில். மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் ஐந்தாவது அவதாரமான திரிவிக்ரமருக்கான பிரத்யேகத் திருக்கோயில் இது. பெருமாளின் 108 திவ்யத் திருத்தலங்களில் திருக்காரகம், திருப்பாடகம், திரு ஊரகம், திரு நீரகம் ஆகிய நான்கு திவ்ய தேசங்களும் இந்த ஒரே கோயிலில் அமைந்திருப்பது சிறப்பு. இத்தல மூர்த்திகளைப் போற்றி திருமழிசை ஆழ்வாரும், திருமங்கை ஆழ்வாரும் பாடியுள்ளனர்.

அந்தணச் சிறுவனாக அவதரித்த வாமனப் பெருமாள், மகாபலி மன்னனிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டார். மன்னனும் தானம் தர, ஓரடியில் மண்ணையும், அடுத்த அடியில் விண்ணையும் அளந்து, மூன்றாவது அடி எங்கே என்று வாமனர் கேட்க, தனது சிரசைக் காண்பித்தான் மகாபலி. மன்னன் சிரசின் மீது தமது திருப்பாதத்தை வைத்த வாமனர், அவனை பாதாள லோகத்துக்கு அதிபதியாக்கி அருள்கிறார். பாதாளத்தில் தள்ளப்பட்ட மகாபலி சக்கரவர்த்தியால் திருமாலின் உலகளந்த திருக்கோலத்தைக் காண முடியவில்லை. இதனால் வருந்திய மன்னன், பெருமாளின் திரிவிக்ரமத் திருக்கோலத்தைக் காட்டியருள வேண்டுகிறார். மகாபலியின் வேண்டுதலை ஏற்ற பெருமாள் இத்திருத்தலத்தில் நான்கு திருக்கோலத்தில் அவனுக்குக் காட்சி தந்து அருளியதாக தல புராணம்.

திரிவிக்ரமர் தரிசனம்: ந்தத் திருத்தல மூலவர் திரிவிக்ரமப் பெருமாள் 30 அடி உயரத்துடன் மிகவும் பிரம்மாண்ட திருமூர்த்தமாகக் காட்சி யளிக்கிறார். இவரது திருநாமம் பேரகாதன். இந்த மகாமூர்த்தி கருங்கல்லால் ஆன விக்ரகம் அல்ல, இது stucco என்று சொல்லப்படும் மென்மையான சுண்ணாம்பு கலந்த வேலைப்பாடுகளுடன் கூடிய சுவர் பூச்சாக செய்யப்பட்ட திருவுருவம். மேற்கு நோக்கிக் காட்சியளிக்கும் இப்பெருமான், இரண்டு கைகளையும் விரித்து, வலது கை ஆள்காட்டி விரலை மேல்நோக்கிக் குறித்த வண்ணமும், இடது கை இரண்டு விரல்களை மேல்நோக்கி வைத்து நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். வலது காலை மகாபலியின் சிரசின் மீது வைத்து, இடது காலை உயர்த்தி நிற்கும் திருக்கோலம் இந்த மூவுலகையும் அளக்கும் தோரணையில் நம்மை வியப்பில் ஆழ்த்துவதாக அமைந்துள்ளது.

இந்த வானளாவிய மூர்த்தியை உள்ளடக்கும் விதமாக, தாராளமான செவ்வக வடிவ கருவறையும், உயர்ந்த மேற்கூரையும் கொண்ட, ஶ்ரீகர விமானத்தின் கீழ் திரிவிக்ரமப் பெருமாள் எழுந்தருளியுள்ளார். விமானத்தின் மேலே ஏழு கலசங்கள் உள்ளன. உத்ஸவ மூர்த்தி நான்கு கரங்களோடு, நின்ற திருக்கோலத்தில், ஶ்ரீதேவி பூதேவி சமேதராக வீற்றிருக்கிறார்.

திருக்காரகம் சன்னிதி: கோயிலின் மூன்றாவது பிராகாரத்தில், 'காரகம்' என்கிற திவ்ய தேசம் அமைந்துள்ளது. இங்கே மூலவர் ரம்யா விமானத்தின் கீழ் கருணாகரன் என்கிற திருநாமத்துடன் ஆதிசேஷன் மேல் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். இச்சன்னிதி தாயார் பத்மாமணி. கருவறையில் நான்கு புஜங்களுடன் உத்ஸவ மூர்த்தி நின்ற திருக்கோலத்தில் ஶ்ரீதேவி, பூதேவி சமேதராய் அருள்கிறார்.

திருப்பாடகம் சன்னிதி:ந்த திவ்ய தேசமும் கோயிலின் மூன்றாவது பிராகாரத்திலேயே அமைந்துள்ளது. புஷ்பக விமானத்தின் கீழ் கார்வண்ணப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். இவருக்கு, 'நவநீதசோர்' அதாவது வெண்ணைத் திருடன் என்கிற பெயரும் உண்டு. தாயார் திருநாமம் கோமலவல்லி. உத்ஸவ மூர்த்தி ஶ்ரீதேவி, பூதேவி சமேதராக விளங்குகிறார். இக்கோயிலில் ஆரணவல்லித் தாயாருக்கு தனிச் சன்னிதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

திரு ஊரகம் சன்னிதி:ருவறைக்கு வலதுபுறம் ஆதிசேஷருக்கு தனிச் சன்னிதி உள்ளது. மகாபலி சிரசின் மீது பெருமாள் தமது திருப்பாதத்தை வைத்தத் தருணம், மகாபலியால் திரிவிக்கிரமரின் விஸ்வரூபத்தைம காண இயலாமல் போனது. இதனால் மனம் வருந்திய மகாபலிக்கு விஸ்வரூப திருக்காட்சி அருள வேண்டி, சிறிய ஆதிசேஷன் உருவம் கொண்டதாக ஒரு ஐதீகம். 'ஊரகம்' என்றால் பாம்பு. இங்குள்ள பிரதான திரிவிக்ரம மூர்த்தியை பேரகம் என்றும், இந்தச் சன்னிதியை ஊரகம் என்றும், இந்த இரண்டும் சேர்ந்து ஒரு திவ்ய தேசமாகக் கருதப்படுகிறது. இப்பெருமானை வழிபட்டு வணங்கினால் புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.

திரு நீரகம் சன்னிதி: ந்தத் திருக்கோயிலில் மூன்று பிராகாரங்கள் உள்ளன. அதில் இரண்டாவது பிராகாரத்தில், 'நீரகாதன்' என்ற ஜெகதீஸ்வரர் சன்னிதி அமைந்துள்ளது. இதுவும் ஒரு திவ்ய தேசம். இங்கே நின்ற திருக்கோலத்தில் நான்கு புஜங்களுடன் ஜெகதீஸ்வர விமானத்தின் கீழே நீரகாதப் பெருமாள் அருள்பாலிக்கிறார். தாயார் நிலமங்கை நாச்சியார்.

விசேஷ திருக்கண்ணமுது பிரசாதம்: க்கோயிலில் பிரசாதமாகத் தரப்படும் திருக்கண்ணமுது மிகவும் விசேஷம். பச்சரிசி, பயத்தம் பருப்பு, நெய், காய்ச்சாத பால், வெல்லம் சேர்த்து வேகவைத்து குழைவாகச் செய்யப்படும் பாயசம் இது. 'இப்பாயசத்தில் இடப்படும் ரகசியப் பொடியே அதன் பாரம்பரிய சுவைக்குக் காரணம்' என்கிறார்கள். 'தீர்த்தப் பரிமளம்' எனப்படும் இந்தப் பொடி லவங்கம், ஜாதிக்காய், ஜாதிபத்திரி, ஏலக்காய், பச்சைக் கற்பூரம் ஆகிய வாசனைப் பொருட்களை இடித்து, சலித்து தயாரிக்கப்படுகிறது. இதுதவிர, இக்கோயிலில் வழங்கப்படும் துளசி தீர்த்தத்திலும் இப்பொடியே கலந்து கொடுக்கப்படுகிறதாம்!

ராஜகோபுரம்: தினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜயநகர காலத்து மூன்று நிலை ராஜகோபுரம், ஏழு கலசங்களுடன் மேற்கு நோக்கிக் காட்சி தருகிறது. ஆலய புண்ணிய தீர்த்தம், 'நாக தீர்த்தம்' என்று அழைக்கப்படுகிறது.

கல்வெட்டுகள்: கோயிலில் பதினைந்து புராதன கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் கி.பி. 864ஆம் ஆண்டைச் சேர்ந்த பல்லவப் பேரரசன் மூன்றாம் நந்திவர்மன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டே மிகவும் பழைமையானதாகும். கி.பி. 1110ஆம் ஆண்டைச் சேர்ந்த சோழ மன்னன் முதலாம் குலோத்துங்கன் காலத்து கல்வெட்டு, கோயில் பராமரிப்புக்காக நிலங்கள் அளித்ததைக் கூறுகிறது. மேலும், குலோத்துங்கனின் மனைவி கம்பமாதேவியார் கேட்டுக்கொண்டபடி, இக்கோயிலுக்கு வரிகள் இன்றி ஒரு கிராமத்தையே எழுதி வைத்ததாகவும், அந்த கிராமத்தின் மூலம் வரும் வருமானத்தில் கோயில் திருவிழாக்கள் நடத்த வேண்டி அந்தக் கல்வெட்டு கூறுகிறது.

பிற்கால சோழர்களான முதலாம் ராஜாதிராஜன் மற்றும் மூன்றாம் ராஜராஜன் காலத்து கல்வெட்டுகளும், அதில் அவர்கள் இக்கோயில் பராமரிப்புக்குத் தந்த கொடைகள் பற்றிய விவரமும் உள்ளன.

இவ்வாலயப் பெருமாள், 'திரு ஊரகத்து நின்றருளின பரமசிவன்', 'திரு ஊரகத்தாழ்வார்' மற்றும் 'திரு ஊரகத்து எம்பெருமான்' போன்ற திருநாமங்களால் வெவ்வேறு காலக்கட்டத்தில் அறியப்படுகிறார் என்றும் இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com