
என்னை எதற்குமே தொந்தரவு செய்ய மாட்டார்கள்.
– ஜீனித் நிஷா
பொறுமை, சமைக்கும் விதம். அவர் சமையலுக்கு ருசியே அவர் சமைக்கும் மனப்பான்மை.
– அன்பு பாலா
அவர்கள் செய்யும் உணவு வகை மிகவும் பிடித்திருக்கிறது என்று சொல்லி விட்டால் போதும். அதை அதிக ருசியுடன் செய்து, பக்கத்தில் இருந்து பரிமாறி நான் ரசித்து சாப்பிடுவதை ரசித்து, அதை அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் ஆகியோரிடம் கூறி மகிழ்வார்கள்.
– ஸ்ரீவித்யா பிரசாத்
நான் செய்த பாக்கியத்தினால் எனக்கு கிடைத்த மாமியார், யாரைப் பற்றியும் புரளி பேசமாட்டார். ஏழை-பணக்காரர் என்ற பாகுபாடுகள் அவரிடம் கிடையாது! பழக இனிமையானவர்!
– வசந்தா கோவிந்தன்
வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கும் வெள்ளந்தி மனது. தான் பேசும் பேச்சு, எதிராளி மனதைப் புண்படுத்தி விடக்கூடாது என்ற நல்லெண்ணம். மகன்கள், பேரன்களிடம் அதீதப் பாசம் கொண்டவர். எது நடந்தாலும், எங்கள் குல தெய்வமான கோமதி அம்பாள் பார்த்துப்பாள் என்று பக்தியுடன் கூறும் அவரது மனம்.
– ஜெயா சம்பத்
என்னிடம் இருக்கும் சின்ன திறமையையும் ரசித்து அதை உறவுகளிடம் கூறி பெருமைப்படுவதைப் பார்த்து நானும் மகிழ்வேன். அம்மா வீட்டு உறவுகளோடு அன்பாக பழகி அனைவரின் மனதில் இன்றும் வாழ்பவர். கண்ணு என்று பாசத்தோடு அழைக்கும் அந்த அன்புக்கு நான் எப்போதும் அடிமையே…
– பானு பெரியதம்பி
என் மாமியார் அவர் பெற்ற பையனுக்கு எதிரி. எனக்கு தோழி.
– ராதா ஜனனி பூர்ணசந்திரன்
"என்ன குழம்பு வச்சிருக்கே?" என்பார் முகத்தில் கோபம் தெரிய என் மாமியார்!
"ஏம்மா நல்ல இல்லையா?" என்பேன் பயத்தோடு!
"என் ஆயுசுல இந்த மாதிரி நான் செஞ்சதே இல்லடி கண்ணு!" என்பார் சிரித்தபடி!
அவர் என் மாமியார் இல்லை… புகுந்த வீட்டு அம்மா.
– ஆ.கலைமலர், தாரமங்கலம்
என் மாமியாரிடம் எனக்குப் பிடித்த விஷயம் அவரது திட்டமிடுதல். சிறு வயதில் பல கஷ்டங்களுக்கு நடுவே அவரது எளிய, அழகான திட்டமிட்ட வாழ்க்கையே அவரது வெற்றிக்குக் காரணம். அதை எனக்கும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
– ராதிகா ரவீந்திரன்
என் கணவரை பற்றிய குறைகளை கொட்டும் ஒரே பாதுகாப்பான இடம் எனக்கு என் மாமியார்தான். அந்த அளவுக்கு எங்கள் இருவர் மீதும் ஒரே அளவு பாசத்தை காண்பிப்பார்.
– பிரேமகுமாரி ஜம்புலிங்கம்
ரசத்தில் உப்பு போட மறந்தால்கூட 'ரசம் அருமை. அதில் சிறிது உப்பு சேர்த்தால் அருமையாக இருக்கும்' என்று மனம் புண் படாமல் பேசும் விதம் பிடிக்கும்.
– உஷா முத்துராமன், திருநகர்
யாரையும் குறை கூறாமல், யார் மனதையும் வார்த்தைகளால் நோகடிக்கா மனசு. மருமகள்கள் அனைவரையும் ஒன்று போலவே நடத்துவார். எல்லாம் நல்லப்படியாக நடக்கும் என பாஸிடிவ் பேச்சு,
– ராதா நரசிம்மன்
தைரியம், தன்னம்பிக்கை.
– சாந்தி மாரியப்பன்
ஊருக்கு போய் வீட்டினுள் நுழைந்தவுடன் வாம்மா, வா என்று பெயர் சொல்லி வாய் நிறைய அழைப்பது. மொத்த குடும்பத்தையும் தன் குரலாலேயே கண்ட்ரோலில் வைத்திருந்தது. தான் ரொம்ப மடியாக இருந்தாலும், மருமகள்கள் மீது அதை திணிக்காதது. இவை எல்லாம் எனக்கு என் மாமியாரிடம் மிகவும் பிடித்த விஷயங்கள்.
– சுஜாதா கணேஷ்
பத்திரிகைகளுக்கு எழுதுவதை ஊக்குவித்து, என் படைப்புகள் பிரசுரமானதை அனைவரிடமும் பெருமையாக காண்பிப்பார். கணக்குவழக்குகளை திறம்பட நிர்வகிப்பதை அவரிடம்தான் கற்றுக் கொண்டேன். நகைகள், பட்டுப்புடைவை அணிந்து கம்பீரமாக இருப்பார். உறவுகளை ஞாபகம் வைத்துக்கொண்டு நலம் விசாரிப்பார். மொத்தத்தில் படிக்காதமேதை.
– மகாலக்ஷ்மி சுப்ரமணியன்
என் மாமியாரிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் அவரின் தன்னம்பிக்கையும் ஆளுமைத்திறனும். குடும்பத்தின் மூத்த மருமகளான அவர் கூட்டுக் குடும்பத்தின் தூணாக இருந்தார். தன் குழந்தைகளையும் மைத்துனர்களின் குழந்தைகளையும் ஒரேமாதிரி நேசித்தார். பல இன்னல்களைச் சந்தித்தபோதும் மனம் தளராமல் குடும்பத்தைத் தன் ஆளுமைக்குள் வைத்து வழி நடத்தினார். அந்தத் தைரியமும் தன்னம்பிக்கையும் இல்லை என்றால் குடும்பம் சிதறி இருக்கும். வெளிப்பார்வைக்கு இறுக்கமானவறாகத் தெரிந்தாலும் உள்ளுக்குள் நகைச்சுவை உணர்வு அதிகம் இருந்ததால் அது எந்த நிலையையும் சமாளிக்க உதவியது.
– ஹேமலதா சீனிவாசன்
அபார ஞாபக சக்தி; நம்மை எத்தனை நாட்கள்/ மாதங்கள் கழித்துப் பார்த்தாலும் மிகச் சரியாகக் கேட்பார்: "நீ அன்னிக்குவந்த போது இந்தப் புடைவைதானே கட்டிண்டு வந்தே?" என்று. அப்புறம் வாய் நிறைய ஸ்லோகங்கள் பார்க்காமல் சொல்லுவார்.
– ஆர். பிருந்தா
யாரையும் விட்டுக் குடுக்கமாட்டார்கள். மகளானாலும், மருமகளானாலும்.
கடின உழைப்பாளி.
– உஷா பாஸ்கர்
'நம்மை மாமியர் வெறுக்கிறாரோ?' என்று தவறாக நினைத்து கொண்டிருந்தேன்… இறப்பதற்கு முதல் நாள் சாப்பிட மறுத்தவரிடம், என் நாத்தனார்,
"இது உன் மருமகள் செய்த சமையல்!" என்று ஊட்டிவிட, "அதான் சூப்பரா இருக்கு!" என்று பாராட்டி, சாப்பிட்டாராம். அதை இன்று நினைத்தாலும் நெகிழ்வேன்!
– கீதா கிருஷ்ணரத்னம், காட்டாங்குளத்தூர்
தன்னம்பிக்கையோடு விடாமுயற்சியும் இருப்பதைக் கண்டு நான் பலமுறை ஆச்சாியப்பட்டு இருக்கிறேன். தாலாட்டு பாட்டு பாடலை அவா்களே (இட்டு கட்டி) பாடுவது அா்த்தமுள்ளதாக இருக்கும்.
– சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்
எனக்குக் கிடைத்த மாமியார் ஒரு வரம்! நாங்க சென்னையிலும் அவங்க கிராமத்திலும் இருந்ததால் அதிகம் பழக வாய்ப்பில்லை. வருடம் ஒரு முறை அங்கு செல்லும்போது, என் தாயைவிட அதிக அன்பையும் பாசத்தையும் என்மீது பொழிந்தவர். என்னை ஒரு வேலை செய்ய விடாமல் அவரே சமைத்து அன்புடன் பரிமாறுவார். இப்போ அவர் மறைந்துவிட்டாலும் என் நெஞ்சில் நிறைந்திருக்கிறார்.
– ஜெயகாந்தி மஹாதேவன்
கடந்த மே மாதம் மறைந்த என் மாமியார், அடாது இடர்வரினும் விடாது ஆரம்பித்த வேலையை முடித்து விடுவதில் வல்லவர். அடிக்கடி எங்களுக்குள் சொற்போர் நடக்கும். சோப்பு குமிழி போல ரொம்ப நேரம் தாக்கு பிடிக்காது. அரைமணி கழித்து, சத்துமாவு கஞ்சி தயாரித்து, ரெண்டு தம்ளரில் ஊற்றி எடுத்துப் போய் நீட்டி, 'அத்தை… இந்தாங்க கஞ்சி. குடிங்கன்னு' அதட்டுப் போடுவேன். அவர் சிரித்துக்கொண்டே வாங்க, இருவரும் ஒற்றுமையாக குடிப்பதைப் பார்த்து என் கணவர் கிண்டலாக சிரிப்பார். நாங்க கண்டுக்கவே மாட்டோமே! அத்தையின் இந்த வெள்ளேந்தி குணம் எனக்கு மிகவும் பிடிக்கும்.
– கோமதி சிவாயம்
என் மாமியாரின் வயது 90 முடிந்து 91 ஆரம்பித்தாகிவிட்டது. ஆச்சாரம் ஜாஸ்தி. வெங்காயம், பூண்டு, மசாலா நோ. இன்றும் தன் வேலையை
தானே செய்து கொள்வதுடன் எனக்கும் சமையலறையில் சின்னச்சின்ன உதவிகள் செய்து கொடுப்பார் அதுவும் முகம் சுளிக்காமல். என் சமையலை நன்கு பாராட்டுவதுடன் தன் மகள்களிடமும் வேணி மாதிரி வராது என்று பெருமையாக பேசுவார். இந்த வயதிலும் என்னை கவனித்துக்கொள்வார். 'கால்வலின்னு சொன்னியே இப்ப எப்படி இருக்கு ரொம்ப நடமாடாதே' என்று கரிசனம் காட்டுவார். காலையில் எழுந்து குளித்து, தன் துணியை தானே துவைத்து, சுவாமி நமஸ்காரம் செய்து, தலைவாரி நீட்டாக இருந்து எங்களுக்கு எப்போதும் ரோல் மாடலாக இருக்கிறார்.
– கிருஷ்ணவேணி
எப்போதும் எதையும் பக்குவமாக பேசி சரி செய்யும் பொறுமை… அதை வார்த்தையால் சொல்ல முடியாது. எனக்கு சாமி கொடுத்த வரம் என் மாமியார்.
– கவிதா சரவணன்
எனது மாமியார் (லேட்) கடைசிவரை வேலை பார்த்தவர். மிகுந்த உழைப்பாளி. சமையலில் எக்ஸ்பர்ட். மூன்று மாடுகள் வைத்து உழைத்து பிள்ளைகளுக்கு சேமித்தவர். சுவாமி பக்தி மிகுதி அரவணைத்துப் போவார். குழந்தைகளுக்கு கதை சொல்வதில் மிகவும் கெட்டிக்காரர்.
– வசந்தா மாரிமுத்து
மாமியாா் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். மருமகள்
என நினைக்காமல் தன்னுடைய மகள் போலவே நடத்துவதில் எனது தாயைவிட ஒருபடி மேலே என்றே புகழ்வேன். இது வெறும் வாா்த்தையல்ல. உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வரும் வாா்த்தைகள். எங்கள் இருவா் ஒற்றுமையைப் பாா்த்து அனைவருக்கும் பொறாமை. மேலும் மனைவியை மந்திாியாகவும், மகனை நண்பனாகவும், மருமகளை மகளாகவும், பாா்த்துவரும் மாமனாா், இதைவிட எனக்கு வேறு பாக்கியம் உண்டா, இல்லை, இல்லவே இல்லை.
– ச.சிவசங்காி சரவணன், செம்பனாா்கோவில்
என் மாமியார்(லேட்) யாருக்கு என்றாலும் உதவி செய்யும் குணம் உடையவர். எனக்கு சமையலறையில் சிற்சில உதவி செய்து தருவார்கள். தனக்கென்று காசு சேர்த்தது கிடையாது. மகனை மிகவும் பிடிக்கும். கடவுள் நம்பிக்கை உடையவர்.
– கலைமதி சிவகுரு
என் மாமியார் மிகவும் அழகானவர். வைணவ ஆச்சாரத்தை கடுகு அளவும் பிசகாமல் கடைபிடித்தவர். எனக்குத் திருமணமான புதிதில் (1979) எலுமிச்சம்பழ ரசம் (சாற்றமுது) விறகடுப்பிலும் ஈயச்சொம்பிலும் அவர் செய்தது இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது.
– சுதா திருநாராயணன்
எனக்கு மாமியார் கிடையாது. அந்த இடத்தை என் மாமனார் பிடித்துக்கொண்டார். அவர் எனக்கு ஒரு தாய் என்றே சொல்லலாம். எனக்கு ஸ்டவ்வில் குக்கரில் சமைத்துதான் பழக்கம். ஆனால், இங்கே விறகு அடுப்பில் சமையல். சாதம் வடிக்க வேண்டும். நன்கு பழகும் வரை அடுப்பு கிட்ட போக விடவில்லை. எங்களுக்குள் கோபதாபங்கள் வந்தாலும் சட்டென்று மறைந்து விடும்.
எதிர் வீட்டு அக்கா கிண்டலடிப்பார்கள் "இந்தியா, பாகிஸ்தான் மாதிரி சண்டை போட்டுட்டு இருந்தீங்க. அதுக்குள்ள சமாதானம் ஆகிட்டீங்களே" என்று. அவர் என்னை குறை சொன்னாலும் அடுத்தவர் என்னை குறை சொல்ல சம்மதிக்க மாட்டார். வெள்ளந்தியான. வேஷமில்லாத அந்தப் பாசம் என்னைக் கவர்ந்தது. அதனால்தான் இறுதி காலத்தில், அருவருப்பு பார்க்காமல் சில பணிவடைகள் என்னால் செய்ய முடிந்தது. அவர் பெயர் மாதவன். இரண்டாம் உலகப்போர் படைவீரர் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன்.
-ஜானகி பரந்தாமன்
உடல் நலமில்லாத தன் கணவருக்குப் பதி சேவை செய்வதில் அவரைப்போல் ஒருவரைப் பார்க்க முடியாது. தப்பெனில் கிழித்துத் தொங்கவிட்டு பின்னர் மறக்கும் சுபாவம் கொண்டவர். டெட்டி ஃபியர் போன்ற சருமம் கொண்ட அவர் எனக்கொரு ரோல் மாடல் மாமியார்.
-வித்யா
என் மாமியாரிடம் பிடித்தது அவரது நகைச்சுவை உணர்வு. அளவாக தேவையானவற்றை மட்டும் பேசும் இயல்பு, வேலைகளை முடித்துவிட்டு
தமிழ், மலையாளம் இரண்டிலும் வாசித்து வந்தது … இப்படி நிறைய.
என் கணவரை நான் நன்றாகப் பார்த்துக்கொள்கிறேன் என்ற சான்றிதழையும் வழங்கிவிட்டார்.
-ஸ்ரீவித்யா
மலர்ந்த முகத்துடன் அனைவரையும் உபசரிக்கும் குணம். நாங்கள் ஐந்து மருமகள்கள். எங்கள் எல்லோரையும் பாராபட்சம் இல்லாமல், குறைகள் ஏதும் சொல்லாமல் வழி நடத்திய விதம் மிகவும் பிடிக்கும். நாங்களும் இன்று வரை (மாமியார் மறைந்தாலும்) அன்பு மாறாமல் நடந்து கொள்ள முடிகிறது.
-வாணி கணபதி
என் மாமியாரிடம் எனக்கு பிடித்த விஷயம் எத்தனை கோபம் இருந்தாலும் மறந்துவிட்டு உடனே எல்லாரிடமும் சகஜமாக பழகுவார். ஜாதி மதம் பேதம் இல்லை. எல்லாரும் சமம்.
-ராம ராஜகோபாலன்
மாமியார் தற்போது உயிருடன் இல்லை. அவரிடம் எனக்குப் பிடித்தது
1. அவரது சமையல். 2. எவ்வளவு நேரம் ஆனாலும், விடாமல் சொல்லும் சஷ்டி கவசம், துளசிக்கு தண்ணீர் விடுதல். 3. அவரது பீரோவில் அந்தந்த புடைவைக்குள் மேட்சிங் பிளவுஸ்களை மடிப்பு கலையாமல் அடுக்கி வைக்கும் அழகு. 4. வீட்டை பராமரிக்கும் விதம். 5. பாத்திரங்கள் எல்லாம் இன்று வாங்கியது போல் மிகவும் பளபளப்பாக இருக்கும். 6. எங்கு வெளியே போய்விட்டு வந்தாலும், புடைவையாகட்டும், நகையாகட்டும், அந்தந்த இடத்தில் உடனே வைத்து விடுவார். அவர் மறைந்து விட்டாலும், அவரது பழக்க வழக்கத்தை இன்று வரை கடைபிடித்து வருகின்றேன்.
-ஜகதாம்பாள்
என் மாமியார் இப்போது உயிருடன் இல்லை. மிகச்சிறிய வயதில் திருமணமானபோது சகலமும் எனக்கு பொறுமையாக சொல்லிக்கொடுத்தார்… மேலும் யாராவது ஒன்று சொன்னால் (கூட்டுக்குடும்பம்) எதற்கெடுத்தாலும் அழுதுவிடுவேன். பல மணி நேரம் அழுதுகொண்டே இருப்பேன். அப்போதெல்லாம் 'அழுகிறதெல்லாம் வேலைக்கு ஆகாது. மனசைத் திடப்படுத்திக்கோ… கண்ணீர் விடவே கூடாது. அந்த கண்ணீருக்கு மத்தவங்ககிட்ட மதிப்பை எதிர்பார்க்க முடியாது' என்பதை ஆணித்தரமாக என் மனதில் பதிய வைத்தவர் அவர்தான். அது இன்றுவரை உண்மை என உணர்கிறேன். அவரது கடைசி காலங்களில் நான் கவனித்த ஒன்று மிக அருமையாக டைரி எழுதுவது… நிறைய சிறுவர், ஆன்மீக குட்டிக் கதைகளை எழுதி வைத்திருந்தவர், தன் இறப்புக்குப் பின்னால் தன் மகன், மகள் வருந்தி எழுதுவது போல தனக்கான இரங்கல் செய்தியை தானே எழுதி வைத்திருந்ததை அவர் இறந்த பின்பு பார்த்தபோது கண்கள் குளமாயின…
– தி.வள்ளி
என் மாமியார் வெள்ளந்தியான கிராமப்புற அம்மா. சமையல் பிரமாதமாக செய்வார் இவர் சமையல்தான் மகன்களுக்கு பிடிக்கும். அவர் இறந்தாலும் அவர்கள் நினைவுகள் எந்த நிகழ்விலேயும் வரும்.
-பரிமளா ராமனுஜம்
என் மாமியார் சிக்கனமாக இருப்பார், தேவைக்குச் செலவு செய்வார். குறைந்த மசாலா பொருட்களைப் பயன்படுத்தி, சுவையாக சமைப்பவர். வீட்டை எப்போதுமே சுத்தமாக வைத்திருப்பார்.
-உமா ஈசன்
கம்பீரமும் கண்டிப்பும் கலந்த அன்பு… எனக்கு மிகவும் பிடித்த குணம்…. அவர்களின் முன்னேற்பாடுதான்… எந்த ஒரு விஷயத்தையும் கவனித்து செய்வார்கள். பக்தி நிறைந்த அந்த அன்பு கடவுள்கிட்ட உண்டு. இந்தக் குணங்களைப் பார்த்து வியந்து போனேன். முக்கியமா சேமிக்கும் குணம் கொண்டவர்.
-கணபதி லதா
நல்ல திறமைசாலி. நாசூக்காக எல்லாரிடமும் வேலை வாங்குவார். சுறுசுறுப்பு. நிமிஷமா கறிகாய் நறுக்குவார். பூரிக்கு எண்ணை வைத்து காய்வதற்குள் 10 பூரி இட்டு விடுவார். வேலைக்கார பெண் வருவதற்குள் கஞ்சி வைத்து அதை டம்ளரில் ஊற்றிக்கொண்டு அந்த கஞ்சி வைத்த பாத்திரத்தையும் தேய்த்து வைத்து விடுவார்.
–சாந்தி சீனிவாசன்