கல்லாதது கடலளவு!

கல்லாதது கடலளவு!
Published on
மினி தொடர் – 3
– நாராயணி சுப்ரமணியன்
மீன்கள் தண்ணீர் குடிக்குமா?

நீருக்குள்ளேயே வாழும் மீன்கள் தனியாகத் தண்ணீர் குடிக்கவேண்டுமா என்பதே முதல் கேள்வி. மீன்கள் எதற்காகத் தண்ணீர் குடிக்க வேண்டும்?
வெளியில் உள்ள நீர் மற்றும் உடலுக்குள் உள்ள திரவங்களைச் சமப்படுத்த வேண்டியிருந்தால், அந்தச் சூழலில் வாழும்போது மீன்கள் தண்ணீர் குடிக்கவேண்டும்.

ஒரு உருளைக்கிழங்கை வட்டமாக வெட்டி, சில துண்டுகளை உப்புத்தண்ணீரிலும் சில துண்டுகளை சாதா நீரிலும் போட்டுவைத்துவிடுங்கள். காலையில் எழுந்து பார்த்தால் உப்புநீரில் இருக்கும் துண்டு நீரை இழந்து சுருங்கியிருக்கும். சாதா நீரில் உள்ள துண்டு நீரை உறிஞ்சியிருக்கும். திரவங்களின் பொதுவான தன்மை அது.

இதை மீன்களின் சூழலுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், கடல்நீரில் இருக்கும் மீன்கள், உடலில் இருந்து வெளியேறும் நீரின் அளவைச் சமன் செய்ய, நீரைக் குடிக்கவேண்டும், குடிக்கும் நீரிலிருக்கும் கூடுதல் உப்பு உடலை பாதிக்காமல் இருக்க சரியான முறையில் உப்பையும் வடிகட்டி வெளியேற்றிவிடவேண்டும். ஆகவே கடல்மீன்கள் நீர் குடிக்கின்றன.

நன்னீர் மீன்களுக்கு அந்தப் பிரச்னையெல்லாம் இல்லை, உடலின் மேற்பரப்பின்மூலம் கொஞ்சமாக உறிஞ்சப்படும் நீரே அவற்றின் உறுப்புகள் இயங்கப் போதுமானது.

சுனாமி எப்படி உருவாகிறது?

சுனாமி என்ற சொல்லுக்கு ஜப்பானிய மொழியில், "துறைமுக அலை" என்று பெயர். தமிழில் இது ஆழிப்பேரலை என்று அழைக்கப்படுகிறது.
கடலுக்கடியில் உள்ள தரையில் ஏற்படும் நிலநடுக்கம், நிலச்சரிவு, எரிமலை வெடிப்பு ஆகியவற்றால் கடல் தரையில் மாற்றங்கள் ஏற்படும்.

இந்த மாற்றங்களால் கடல்நீர் மேல் நோக்கி தள்ளப்படும். இப்படி தள்ளப்படும்போது அதனால் உருவாகும் அலையின் உயரம் 30 சென்டிமீட்டர் மட்டுமே இருக்கும், ஆனால், அதில் உள்ள நீரின் அளவு மிகவும் அதிகம். இந்த அலை வேகமாகப் பயணிக்கக்கூடியது. மணிக்கு 800கிலோமீட்டர் வேகத்தில் இந்த அலை விரைவாகப் பயணித்துக் கரையை நோக்கி வருகிறது.

ஆழம் குறைவான கடற்கரைப் பகுதிகளில், உராய்வு காரணமாக, அலையின் வேகம் திடீரென்று குறையும், ஆனால், இதில் உள்ள நீர் மற்றும் பின்னால் வரும் அலைகளின் வேகம் உடனே குறையாது. அவை முண்டியடித்துக்கொண்டு மேலெழும்புகின்றன. இது உயரமான ஒரு அலையாகக் கடற்கரையைத் தாக்குகிறது. அதையே நாம் சுனாமி என்கிறோம்.

மீன்கள் எத்தனை காலம் வாழும்?

மீன்கள் சராசரியாக 3 முதல் 7 ஆண்டுகள்வரை வாழக்கூடியவை. இது மீனின் சராசரி அளவு, உணவுப்பழக்கம், அவை வாழும் சூழல், அவற்றின் உணவு ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்.

க்ரீன்லாந்து சுறா என்ற ஒருவகை சுறா இனம், அதிக வயது கொண்ட முதுகெலும்பு உயிரி என்ற பெருமையை சமீபத்தில் பிடித்துள்ளது. இந்த சுறா இனம் 400 ஆண்டுகள் வரை வாழுமாம்!

னினும் உலகில் உள்ள உயிரினங்களிலேயே அதிக வயதான விலங்கு என்ற பெருமை அதற்குக் கிடையாது. "மிங்" என்று பெயரிடப்படுள்ள ஒருவகை மட்டி சிப்பி இனம், 500 ஆண்டுகள் வாழ்ந்து அந்தக் கிரீடத்தைத் தட்டிப் பறித்துள்ளது! இதுபோன்று நீண்டநாட்கள் வாழும் தன்மை எதனால் வருகிறது என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள். குறிப்பாக சுறா மீன்களின் உடலில் பல சிறப்பம்சங்கள் உண்டு என்பது ஏற்கெனவே கண்டறியப்பட்டிருப்பதால், அதற்கும் அதிக வாழ்நாளுக்கும் தொடர்பு இருக்குமா என்பதையும் விஞ்ஞானிகள் ஆராயத் தொடங்கியிருக்கிறார்கள்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com