
1943ம் வருடம் ஹூப்ளி (கர்நாடகா)யில் ஆர்.ஹெச். குல்கர்னி என்ற இளம் டாக்டர் சந்த்கர் என்ற கிராமத்தில் ஒரு மருத்துவமனையில் வேலை பார்த்தார். இந்த கிராமத்தை சூழ்ந்து காட்டுப் பகுதிஉள்ளது. ஜூலை மாதம் நல்ல மழை பெய்த இரவில், குல்கர்னி புத்தகம் படித்துக் கொண்டி ருந்தபோது, அவர் வீட்டுக் கதவை பலமாக தட்டும் சத்தம் கேட்டு அவர் திறக்க, அங்கு நான்கு நபர்கள் கையில் தடியை வைத்துக்கொண்டு டாக்டரிடம் மராத்தியில் 'உடனே உங்கள் பையை எடுத்துக்கொண்டு எங்களுடன் வாருங்கள்' என்று கூறியதும், குல்கர்னி இவர்களை எதிர்க்க முடியாது என்று புரிந்துகொண்டு அவர்கள் பின் சென்றார்.
கார் ஒரு இருட்டான இடத்தில் நிறுத்தப்பட்டு, இவரை ஒரு வீட்டின் முன் நிறுத்தினார்கள். அங்கு ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண் கட்டிலில் படுத்திருந்தாள். இளைஞரான மருத்துவருக்கு ஒரே அதிர்ச்சி. அப்போது அந்த நால்வரும் அப்பெண்ணுக்குப் பிரசவம் பார்க்க வேண்டும் என்று கூற, அப்பெண்ணோ பிரசவ வலியில் துடிக்க, அவர் இதுவரை பிரசவம் பார்த்ததில்லை என்றாலும் அதைச் செய்ய முற்பட்டார்.
அப்பெண்ணிடம் அவள் அங்கு எப்படி வந்தாள் என்று கேட்க, அவளும் தான் ஒரு பெரிய மிராசுதரின் பெண், படிக்கும்போது ஒரு பையனைகப் காதலித்தேன், அவனோ என்னை கர்ப்பமாக்கிவிட்டு ஓடி விட்டான் என்று தன்னைப் பற்றிக் கூறி கதறி அழுதாள். அவளை சமாதானப்படுத்தி பிரசவம் பார்க்க, பெண் குழந்தை பிறந்தது. அப்பெண்ணோ "ஐயோ இது பெண். என்னை மாதிரி கஷ்டப்படும்," என்று கூறினாள்
பிறகு குல்கர்னி, அந்த இளம் பெண்ணிடம் ரூபாய் 100 கொடுத்து, " பூனேயில் நர்சிங் கல்லூரியில் என் நண்பர் உதவி செய்வார். நர்சிங் படி," என்று கூறி சென்றுவிட்டார்.
வருடங்கள் பல ஓடிவிட்டன. ஒரு மருத்துவ மாநாட்டிற்காக குல்க்ர்னி ஒளரங்காபாத் சென்றபோது, மாநாட்டில் சந்திரா என்ற துடிப்பான இளம் மருத்துவரின் பேச்சில் வியந்து அவளை பாராட்டினார். அவள் குல்கர்னியை வற்புறுத்தி வீட்டிற்குக் கூப்பிட, சந்திராவின் தாய் கண்ணீருடன் இவரை வணங்க அதிர்ச்சியான அவர், பிறகு அப்பெண்தான் பல வருடங்களுக்கு முன் பிரசவம் பார்த்த பெண்மணி என்பதை தெரிந்துகொண்டார்.
அப்பெண்மணியும் குல்கர்னியிடம் அறிவுரைப்படி பூனேயில் நர்சிங் படித்துத் தன் பெண்ணை மருத்துவப் படிப்பு படிக்க வைத்ததைக் கூற, குல்கர்னிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
அந்நாளில் குல்கர்னி ஏழை மக்களுக்கு இலவசமாகவே மருத்துவம் பார்ப்பார். அப்பெண்மணி, தன் மகள் சந்திராவும் அப்படியே செய்வதாக கூறினாள். தன்னை எப்படி உன் மகள் தெரிந்துகொண்டாள்? என்று குல்கர்னி கேட்க, "உங்கள் முழு பெயர் ராமசந்திர குல்கர்னி என்பதால், என் அம்மா எனக்கு சந்திரா என்று பெயர் வைத்தார். மேலும் உங்களைப் பற்றி அடிக்கடி கூறியதால், உங்கள் பெயரை வைத்து தான் கண்டுபிடித்தேன்," என்று சந்திரா கூறினான்.
அது சரி இந்த குல்கர்னி யார் தெரியுமா? இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தியின் தந்தைதான். சிறந்த சமூக சேவகியாக சுதாமூர்த்தி விளங்குவதில் ஆச்சரியமில்லை அல்லவா.
-ஜி. இந்திரா, ஸ்ரீரங்கம்
ஒரு ஊரில் சந்தனக்கட்டை விற்கும் வணிகன் இருந்தான். மாலை நேரத்தில் அந்த நாட்டு மன்னன் அவனுடைய கடை வழியாக செல்லும்பொழுது வணிகர் எழுந்து மன்னருக்கு வணக்கம் சொல்லுவார். அரசரும் அதை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளுவார்.
ஒருநாள் வழக்கம் போல் மன்னர் கடை வழியாக வரும்பொழுது வணிகர் வணங்கியதம், மன்னருக்கு அந்த வியாபாரி மீது ஏனோ வெறுப்பு தோன்றியது. பதில் வணக்கம் சொல்லாமல் சென்றுவிட்டார்.
அடுத்தநாள் மன்னர் அரசவையில் உள்ள குருவிடம் சந்தனக்கட்டை வியாபாரியிடம் தனக்கு தீடீரென்று ஏன் வெறுப்புணர்ச்சி தோன்றியது? அதன் காரணம் என்ன? என்று வினவினார். குரு இதற்கான விடை கூற 3 தினங்கள் அவகாசம் கேட்டார்.
அடுத்தநாளும் உலா சென்று வந்த மன்னரிடம், குரு இன்று எப்படி இருந்தது? எனக் கேட்க, "அவர் மீது இன்னும் வெறுப்பு அதிகமாயிற்று. அவரைக் கொல்ல வேண்டும் எனத் தோன்றியது எனக் கூறினார்.
அடுத்தநாள் மன்னர் கடைவழியாக வந்தபொழுது, சந்தனக் கட்டை வியாபாரி இருக்கும் கடை வந்தவுடன் அந்த வியாபாரி வழக்கம்போல் எழுந்திருந்து பணிவுடன் வணங்கினார். என்ன ஆச்சர்யம் மன்னருக்கு. அவன்மேல் கோபமே வரவில்லை. வெறுப்பும் நீங்கிவிட்டது!
அடுத்தநாள் குரு வந்தவுடன் மன்னர் குருவிடம் இந்த நிகழ்ச்சியை சொல்லி விளக்கம் கேட்டார்.
குரு விளக்கினார், "மன்னா! அந்த வியாபாரியிடம் சந்தனக் கட்டைகள் விற்காமல் நிறைய தேங்கி இருந்தன.
உங்களைப் பார்த்தவுடன், "நம் கடையில் சந்தனக் கட்டைகள் அப்படியே உள்ளன. மன்னரோ, அவருடைய அரண்மனையில் யாராவது இறந்துவிட்டால் தகனம் செய்ய நிறைய சந்தனக்கட்டைகள் வாங்குவார்களே, நமக்கும் வியாபாரம் நடக்குமே," என்ற எண்ணம் தோன்றியது. அதனால் உங்களுக்கு வணிகன் மேல் வெறுப்பு வந்தது! (உங்களை அறியாமலே)
நேற்று நான் போய் அவரிடமிருந்த எல்லா சந்தனக் கட்டைகளையும் வாங்கிவிட்டேன். உடனே அவர் மனிதில் இருந்த தீய எண்ணம் அகன்றது. உங்கள் மேல் மரியாதை கூடியது. உடனே உங்களுக்கும் அவர் மேல் ஏற்பட்டிருந்த வெறுப்புணர்ச்சி மறைந்துவிட்டது!
மன்னர் ஆச்சரியமடைந்தார். நாம் நினைக்கின்ற நல்ல நினைவுகள், தீய நினைவுகள் ஆகியவற்றின் அலைகள் வெளியே சென்று மீண்டும் நம்மிடேம வந்து விடுகின்றன. இதைத்தான் – மனம் போல் வாழ்வு என்பர் சான்றோர்களின். நல்ல நினைவுடன் பிறர் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போதும். துன்பங்கள் நம்மை விட்டு அகலும்!
– மாலதி நாராயணன்.