ஆடி ஸ்பெஷல்-வெரைட்டி ரைஸ்!

ஆடி ஸ்பெஷல்-வெரைட்டி ரைஸ்!
Published on
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!
குதிரை வாலி சர்க்கரைப்  பொங்கல்

தேவை: குதிரைவாலி அரிசி- இரண்டு  கப், பொடித்த வெல்லம்  – 2 கப், முந்திரி, திராட்சை – கால் கப், தண்ணீர்- 4 கப், ஏலக்காய் தூள்- 1/4டீஸ்பூன்.

செய்முறை:  வெல்லத்தை  கால் டம்ளர் தண்ணீர்  விட்டு கரைத்துக் கொண்டு வடிகட்டி  கொள்ளவும். அரிசியை கழுவி நன்கு  குழைய வேக விடவும். சாதம் குழைந்து வரும் போது  வெல்லப்பாகை ஊற்றி  நன்கு  கிளறி  சேர்ந்து வந்ததும் நெய்யில்  வறுத்த  முந்திரி, திராட்சை  சேர்த்துக் கலந்து  ஏலக்காய் தூள்  தூவி   இறக்க சுவையான  குதிரைவாலி  சர்க்கரை பொங்கல்  தயார்.

———————————————

சாமை அரிசி  கேரட் சாதம்

தேவை: சாமை அரிசி – 2 கப், கேரட்-3, பச்சை மிளகாய் – 6, கடலைப்பருப்பு – 1/2 தேக்கரண்டி,  உளுத்தம்பருப்பு- 2 கரண்டி, வறுத்து பொடித்த தனியா-அரை தேக்கரண்டி, கறிவேப்பிலை, மல்லி, உப்பு, பெருங்காயப்பொடி,
ம.தூள் – சிறிதளவு, தாளிக்க, கடுகு, உ பருப்பு, வறுத்த வேர்க்கடலை.

செய்முறை: சாமை அரிசியை உப்பு  போட்டு  வேக வைத்து  உதிரியாக ஆறவிடவும். வாணலியில்  நல்லெண்ணெய் ஊற்றி  காய்ந்ததும்  கடுகு, உ பருப்பு, பெருங்காயம் ,கறிவேப்பிலை  சேர்த்து  பொரிந்ததும்  பச்சை மிளகாய், துருவிய கேரட் சேர்த்து  நன்கு  வதக்கவும். பின் பொடித்த  தனியாப்பொடி சேர்த்து  நன்கு  கிளறவும் .தேவையென்றால் வறுத்த  முந்திரி, கொத்தமல்லி தூவி இறக்கவும்.  சுவையான, சத்தான  சாமை கேரட் சாதம் தயார்.

———————————————

சாமை குதிரைவாலி  வரகு பிஸிபேளாபாத்

தேவை: சாமை, வரகு, குதிரைவாலி-தலா- அரை கப், துவரம் பருப்பு-2 கப், புளிக்கரைசல்-முக்கால் கப், பெருங்காயப் பொடி, ம பொடி,- கால் டீஸ்பூன், வறுத்து  அரைக்க : கடலைப் பருப்பு-கால் கப், காய்ந்த மிளகாய்-8, தனியா-கால் கப், வெந்தயம், வறுத்த வேர்க்கடலை, வறுத்த முந்திரி, கொப்பரைத் தேங்காய்-1/4 கப்,

தாளிக்க: கடுகு, சீரகம், உ பருப்பு , கறிவேப்பிலை, காய்ந்த  மிளகாய்-2
தே.எண்ணெய், நெய்.

செய்முறை:   அரைக்க கொடுத்துள்ளதை வறுத்து , ஆறியபின் சற்று  கொரகொரப்பாக பொடிக்கவும். பருப்பை வேக வைத்துக்கொள்ளவும். சிறுதானியங்களை  அகலமான பாத்திரத்தில்  இட்டு நன்கு  வேகவிடவும். நன்கு  குழைய வெந்ததும், பருப்பு, ம.தூள், சேர்த்து  நன்கு  கிளறவும். வாணலியில்  நெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுத்துள்ளவற்றைத் தாளித்து சாதத்துடன்  சேர்க்கவும். வறுத்த  பொடி, உப்பு  போட்டு   நன்கு  கலந்து  புளிக்கரைசல் ஊற்றி  சேர்ந்து  வந்ததும்  இறக்கவும். தேவையென்றால் விரும்பிய காயும் சேர்த்து  செய்யலாம். அப்பளம், ஊறுகாய்  சேர்த்துப்  பரிமாறவும்.

———————————————

வரகு  ஃப்ரூட் தயிர் சாதம் 

தேவை: வரகரிசி – 2 கப், தயிர் – 2 கப், வெண்ணைய் – 2 டீஸ்பூன், உப்பு, விரும்பிய பழக்கலவை- மாதுளை முத்துக்கள், நறுக்கிய  அன்னாசி, நறுக்கிய  ஆப்பிள், விதை நீக்கிய கறுப்பு  திராட்சை – தேவைக்கு,உப்பு.

செய்முறை:  வரகரிசியை குழைய வேக வைத்துக்கொள்ளவும். பின் அதனுடன்  உப்பு, தயிர், வெண்ணெய்  சேர்த்து  நன்கு  கலந்துக்கொள்ளவும். சற்று  ஆறியதும்  பழங்களைச் சேர்த்து  நன்கு  கலந்து  பரிமாறவும். குளிர வைத்தும் பரிமாறலாம்.
– மகாலட்சுமி சுப்பிரமணியன், காரைக்கால்

———————————————

பதினெட்டாம் பெருக்குக்கு கலந்த சாதம் செய்வோம் அல்லவா-இதோ சில டிப்ஸ் …
  • தேங்காய் சாதம் செய்ய தேங்காயைத் துருவும்போது ஓடுவரை துருவக்கூடாது.
  • தேங்காய் பூவாக விழும்படி துருவ வேண்டும்.
  • தேங்காய் துருவலை நல்ல பொன் நிறமாக வறுத்துப் போடவேண்டும்.
  • வேர்க்கடலை, பொட்டுக்கடலை, முந்திரி வறுத்துப் போடலாம்.
  • பாதாம் பருப்பைத் துருவிப் போடலாம்.
  • கலந்த சாதத்திற்கு சாதம் உதிர் உதிராக வர, அரிசியைக் களைந்து போடும்போதே ஒரு ஸ்பூன் வெண்ணெயைப் போட்டால் போதும்.
  • கலந்த சாதத்திற்கு தாளிக்கும்போதே பெருங்காயப் பொடியைச் சேர்த்து விட்டால் வாசமாக இருக்கும்.
  • எலுமிச்சம் பழ சாதம் செய்ய எலுமிச்சம் பழத்தை தோல் வரை பிழியக் கூடாது. பிழிந்தால் சாதம் கசக்கும்.
  • எலுமிச்சம் பழம் நிறைய சாறு கிடைக்க, இளஞ்சூடான நீரில் போட்டு எடுத்தால் சாறு நிறையக் கிடைக்கும்.
  • எலுமிச்சம் பழ சாதம் பிசைய சாறு பிழிந்ததும் கொட்டையை வடிகட்டி எடுத்துவிட்டு, தாளிக்கும்போதே சாறில் உப்பும், மஞ்சள் பொடியும் கலந்துவிட்டு, அதை ஊற்றி பிறகு அந்தக் கலவையை சாதத்தில் விட்டு, கிளறினால் கசகசப்பு இல்லாமல் சூப்பராக இருக்கும்.
  • எலுமிச்சம் பழ சாதம் பிசையும்போது கடைசியில் வெறும் வாணலியில் சூடாக்கிய வெந்தயத்தை வறுத்து பொடித்துப் போட்டால் மணமாக இருக்கும். உடம்புக்கும் நல்லது.
  • புளியோதரை பிசையும்போது புளிக்காய்ச்சல் செய்ததும் மிளகாய் வத்தலைப் பிழிந்து வடித்து தோலியை எடுத்தபிறகு செய்தால் தோலி அகப்படாது.
  • புளியோதரைக்கு நிறைய பெருங்காயப் பொடி போட்டு தாளித்தால்தான் கமகமக்கும்.
  • புளியோதரைக்கு புளிக்காய்ச்சல் நல்ல வற்றினால்தான் சாதம் இரண்டு நாளானாலும் கெடாது.
  • கற்கண்டு சாதம் பிசையும்போது கற்கண்டை பொடி செய்து பாலிப் போட்டு சுண்ட வற்றக் காய்ச்சி சேர்த்தால் நன்றாக இருக்கும்.
  • தயிர் சாதம் செய்யும்போது பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லியை அரைத்துச் சேர்த்தால் சுவை சூப்பராக இருக்கும்.
  • சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி விட்டால் மணல் கடிக்காது.
  • சர்க்கரைப் பொங்கலில் பலாச்சுளையை நறுக்கிப் போட்டால் அருமையாக இருக்கும்.
    ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி
Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com