
– பொ. பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி
சீதபேதி கடுமையாக உள்ளதா?
ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து, தயிரில் கலந்து, 3 வேளை கொடுக்க குணமாகும்.
அடிக்கடி ஏப்பம் வருகிறதா?
வேப்பம்பூவைத் தூள் செய்து, 4 சிட்டிகை எடுத்து, இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.
மாதவிடாய்க் கோளாறுகள் இருக்கா?
உலர் திராட்சைப் பழத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து, காலையில் அருந்தினால் தீரும்.
நினைவாற்றல் பெருக வேண்டுமா?
வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து, பொடித்து, தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் பலன் தரும்.
வயிற்றுக் கடுப்பு ஏற்படுகிறதா?
புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.
பல் கூச்சம் இருக்கா?
புதினா விதையை வாயில் போட்டு, மென்றுக்கொண்டிருந்தால் மறையும்.
நுரையீரல் சம்பந்தமான நோய்கள் உண்டா?
வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றைச் சேர்த்து குடித்துவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
எறும்பு, பூச்சி கடியால் அவதியா?
பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால், வெங்காயத்தை நறுக்கி, அந்த இடத்தில் தேய்க்கவும்.
உடல் எடை சரியாக அமையணுமா?
கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும். எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க, உடல் இளைந்துக் காணப் படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.
வாய்ப் புண்ணா?
கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்.
தலைவலியா?
பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸியில் அரைத்து, தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர நீங்கும்.
வயிற்றுப் பொறுமலா?
வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி, அதனுடன் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து, அடிவயிற்றில் பூசினால் நீங்கும்.
கபம் கட்டியிருக்கா?
வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி, வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட நீங்கும்.
வயிறு உப்புசமா?
ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க குணமாகும்.
இடுப்பு வலியா?
சாதம் வடித்த கஞ்சியை எடுத்து, ஆறவைத்து, ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் நீங்கும்.
தாய்ப்பால் சுரக்கணுமா?
அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து, கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் நன்கு சுரக்கும்.