அலைபாயுதே!

ஓவியம் : ரமணன்
ஓவியம் : ரமணன்
Published on
கதை      : சகா
ஓவியம் : ரமணன்

எதிர்வீட்டு மகாலிங்கத்திற்கு ஷாக் அடித்துவிட்டது என்று கேள்விப்பட்டு மருத்துவமனைக்கு ஓடினேன் நான்.

அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்திருப்பார்கள். செயற்கை சுவாசத்தில் மூச்சுத் திணறிக் கொண்டிருப்பார் என்றெல்லாம் பிரம்மாண்டக் கற்பனைகளுடன் பதறியடித்துக் கொண்டு போனால் ஆசாமி படுக்கையில் உட்கார்ந்துகொண்டு சாத்துக்குடியை உறித்துக் கொண்டிருந்தார்.

"என்னய்யா சந்துரு, இப்பத்தான் வர்றதா நீ கடைசி ஆளா? உனக்கு சாத்துக்குடி சுளை கிடையாது போ!" என்றார் பொய்க் கோபத்துடன் அறுபத்தி இரண்டு வயதுக்காரர் நடந்து கொள்ளும் அழகைப் பார்த்தீர்களா?

ஒன்றும் புரியாமல் அவர் எதிரில் உட்கார்ந்தேன். "என்னமோ கரண்ட் ஷாக் அடிச்சுடுச்சுன்னு கேள்விப் பட்டேனேஆஸ்பத்திரி மாறி வந்துட்டேனா?"

"நான்தான்ய்யா அந்த சூப்பர்மேன். என்னை அதெல்லாம் ஏதாவது பண்ணிடும்ன்றே?" என்று விசமமாக சிரித்தார்.

"இந்த அயர்ன் பாக்ஸ்ஸோட பெரிய ரோதனை சந்துரு. தெரியாம கை பட்டுடுச்சு. தூக்கி ஒரே வீசு. நல்ல்வேளை சரியா பெட்டுல போய் விழுந்தேன். கையோட மயக்கம் வேற வந்திடுச்சு. எல்லோரும் பயந்து போய் இங்க தூக்கிட்டு வந்துட்டா. ராஜ உபசாரம் போ. கொஞ்ச நாள் இப்படியே இருந்திடலாமான்னு தீவிர யோசனைல இருக்கேன். என்ன சொல்றே?"

நொந்து போய் அவரையே வெறித்தென். இவர் எப்போதுமே இப்படித்தான் பேசுவார். குசும்பின் பிறப்பிடம். கோபம் வந்தால் தென்னை மரம் ஏறி உட்கார்ந்து கொள்ளுவார். சம்பந்தப்பட்ட குடும்ப அங்கத்தினர் மன்னிப்பு கேட்டால் மட்டுமே இறங்கி வருவார். சரியான வில்லங்கப் பேர்வழி.

"லேசா மயக்கம் வர்ற மாதிரி இருக்கும் சந்துரு. அப்போல்லாம் நான் எங்கேயோ பறக்கிறேன். நம்ம ஊரு தான் ஆனா வேற மாதிரி இருக்குது எல்லாம். பறக்கும் ரயில் நிஜமாகவே தண்டவாளம் இல்லாம காத்துல பறக்குது. மெரீனா மாதிரி நூறு பீச்சுகள் சென்னையில். டைம் ட்ராவல்ல எதிர்காலத்துக்குப் போயிட்டேனோன்னு ஒரு டவுட்டு."

அவரை அதிர்ச்சியோடு பார்த்தேன். நிஜம் சொல்லுகிறாரா? விளையாடுகிறாரா? கரண்ட் ஷாக்கின் பக்கவிளைவா இதெல்லாம்? சே, எனக்கு மட்டும் இந்த மாதிரி சக்தி இருந்தால்

"உடம்பெல்லாம் ஒரு உதறு உதறும் பாரு. உள்ளங்கால்ல இருந்து ஒரு வெப்பம் பரவி, ரத்தம்மெல்லாம் சூடாகி, உடம்பு நல்லா கொதிக்கும். அதான் இதுக்கு அறிகுறி. பாரு பாரு. அய்யோ உடம்பு வேகுதே. எங்கேயோ போறென்பறக்கிறேன்…"

உட்கார்ந்தபடியே மயக்கமானார்.

நான் அவசர உதவி அலாரதை தேடிக் கொண்டிருக்க மகாலிங்கம், "யோவ் சந்துரு. வருங்கால வருஷம் ஒண்ணு சொல்லு. பட்டனை அமுக்கணும்…" என்றார் கண்கள் மூடியவாறு

அவசரமாய் யோசித்தவன், 'இதென்ன இரண்டாயிரத்து இருபத்து ஒண்ணா. ரொம்ப தள்ளி வேணாம். ஒரு அஞ்சு வருசம் நகர்ந்து போய்ப் பார்ப்போம்இரண்டாயிரத்து இருபத்தி ஆறு' என்றேன்.

"இரு இரு, ம்போட்டாச்சு! அட! அட! வடபழனி முருகன் கோயில் என்னமா இருக்குது. டீவி பொட்டியா இது மனுசனை நேருல பார்க்கிற மாதிரி. ஏய் இரு இருஅப்படியா" என்றவர் கொஞ்ச நேரம் கண் மூடினார். அஞ்சு நிமிசம் கழிச்சு கண்ணை திறந்தவர் "வேணாம், வேணாம், இந்த சக்தி வேணாம்…" அலறினார்.

"அப்படி என்னதான் எதிர்காலத்துல பார்த்தீங்க?"

"கொரோனா பத்தாம் அலையை எதிர்கொள்ள தயாராகுங்கள் மக்களே'ன்னு நம்ம பிரதமர் அறைகூவல் விடறாருப்பா…"

அவரையே வெறித்தேன். அவர் சொன்னதை சத்தியமாக நான் நம்பவில்லை. நீங்கள்…?

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com