கைசிக மஹாத்மியம்!

கைசிக மஹாத்மியம்!
Published on

கே.சூர்யோதயன்

கார்த்திகை மாத வளர்பிறையில் வரும் ஏகாதசி தினம், 'கைசிக ஏகாதசி' என்று அழைக்கப்படுகிறது. வருடத்தில் மாதந்தோறும் ஏகாதசி தினம் வந்தாலும், கார்த்திகை மாத ஏகாதசி தினத்துக்கு மிகச் சிறப்பு உண்டு. கைசிக ஏகாதசி தினத்தில் செய்யப்படும் பெருமாள் வழிபாடு, எப்பேற்பட்ட பாவங்களையும் தொலைக்கும் என்று முன்னோர்கள் கூறிச் சென்றுள்ளனர்.

கைசிக ஏகாதசியின் பெருமையை விளக்கும் விதமாக, நம்பாடுவான் எனும் ஒரு பக்தரின் வரலாறு கூறப்படுகிறது. இந்த மகாத்மியம், 'கைசிக புராணம்' என்ற நாமம் தாங்கி, வாராஹ புராணத்தில் உள்ளது. அழைத்தவர் குரலுக்கு அலுக்காமல் ஓடிவரும் மகாவிஷ்ணுவின் பெருமையைப் போற்றிப் பாடுவதையே தொழிலாகக் கொண்டவர் நம்பாடுவான். இதையே தாம் பெற்ற பிறவிப் பயனாகவும் அவர் கருதி வந்தார். தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த அவர் பாடும் பாடல்களைப் பெருமாளும் மிகுந்த பரவசத்துடன் கேட்டு மகிழ்ந்தார்.
இவர் பாடிக்கொண்டே வீணை மீட்டும் அழகைக் காண்பதற்காகவே திருக்குறுங்குடி நம்பி துவஜஸ்தம்பத்தை சற்று நகர்த்தியதாக சரித்திரம் சொல்கிறது.

நம்பாடுவான் ஒவ்வொரு ஏகாதசி அன்றும் திருக்குறுங்குடி சென்று, நம்பியை பாடி, துவாதசி பொழுது புலர்ந்ததும் ஊர் திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அக்காலத்தில் தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்தவர்களை கோயிலுக்குள் அனுமதிக்கும் வழக்கம் இல்லாமலிருந்தது. இருந்தாலும் அவர் கொண்ட ஆவல் மிகுதியினால், கோயிலுக்கு வெளியே நின்றாவது பெருமாளை தரிசித்துப் பாட வேண்டும் என்று நினைத்தார்.

ன்று காலையே திருக்குறுங்குடிக்கு கிளம்பினார் நம்பாடுவான். வழியில் நம்பாடுவானை ஒரு பிரம்ம ராட்சஷன் வழிமறித்து, "இன்று நீதான் எனக்கு உணவு" என்று பிடித்து வைத்துக்கொண்டான். சற்றும் சலனப்படாத நம்பாடுவான், "ராட்சஷனே, இன்று நான்தான் உனக்கு உணவு என்றால், அதைவிட மகிழ்ச்சி எனக்கு வேறு எதுவும் இல்லை. ஆனால், நான் திருக்குறுங்குடி பெருமாளை தரிசிக்க போய்க்கொண்டிருக்கிறேன். பெருமாளை தரிசித்து, அவரைப் போற்றிப் பாடிவிட்டு வரும்போது நிச்சயம் நான் உனக்கு உணவாகிறேன். அதுவரை எனக்கு நீ அவகாசம் தர வேண்டும்" என்று வேண்டினார்.

ஆனால் ராட்சஷனோ, நம்பாடுவான் கூறியதை ஏற்க மறுத்து, "நீ கூறுவதை நான் எப்படி நம்புவது?" எனக் கேட்டான். அதற்கு நம்பாடுவான், தான் திரும்பி வந்து ராட்சஷனுக்கு உணவாகாவிடில் அடையப்போகும் பாவங்களைப் பற்றி அவனிடம் எடுத்துக்கூறி, சத்தியம் செய்தார். அதைக் கேட்ட பிரம்ம ராட்சஷன் நம்பாடுவானை போக அனுமதித்தான்.

நம்பாடுவான் திருக்குறுங்குடி சென்று சேர விடிந்து விட்டது. அன்று கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி தினம். கோயிலுக்குச் சென்ற நம்பாடுவான் ஆனந்தமாய் நம்பியை பாடினான். கைங்கரியத்தை முடித்து திருப்தியாய் திரும்பி வந்தான். வழியில் திருக்குறுங்குடி நம்பி, கிழ பிராமண ரூபத்தில் வந்து, 'செல்வதற்கு வேறு வழி இருக்கிறது. தப்பிச் செல்' என்று கூறினார். ஆனாலும் நம்பாடுவான், 'செய்து கொடுத்த சத்தியத்தை ஒருபோதும் மீற மாட்டேன்' என்று கூறி விட்டார்.

தாம் கூறியபடி ராட்சஷனிடம் போய் நின்றார் நம்பாடுவான். ஆனால் அந்த ராட்சஷனோ, "நான் முற்பிறவியில், 'சோம ஷர்மா' எனும் அந்தணனாக இருந்தேன். யாகத்தை தவறாகச் செய்ததன் பலனாக இப்பிறவியில் ராட்சஷனாக அலைகிறேன். மேலும், தற்போது எனக்குப் பசி இல்லை. அதற்கு பதிலாக, நீர் பெருமாளைப் போற்றிப் பாடியதற்கு உண்டான பலனை எனக்குத் தந்து, சாப விமோசனம் அளிக்க வேண்டும்" என்று வேண்டினான்.

"பாடியதற்கு பலன் எதும் இல்லைபாடியதே பலன்தான்" என்று கூறினார் நம்பாடுவான்.

ஆனால் பிரம்ம ராட்சஷனோ, "நீர் பெருமாளைப் போற்றி பற்பல ராகங்களில் பாடியிருப்பீர். கடைசியாக எந்த பண்ணில் பாடினீர்" எனக் கேட்டான்.

"கடைசியாக கைசிக ராகத்தில் பாடினேன்" என்று நம்பாடுவான் கூறினார்.

"அந்தப் பாடலுக்கான பலனை மட்டுமாவது எனக்குக் கொடுக்க வேண்டும்" என்று காலில் விழுந்து கதறினான் ராட்சஷன்.

அதன் பிறகு நம்பாடுவான், பெருமாளிடம் கைசிகப் பண்ணின் பலனை பிரார்த்தித்துப் பெற்று, அவரது அநுக்ரஹத்தால் பிரம்ம ராட்சஷன் சாப விமோசனம் பெற்றதாகப் புராண வரலாறு. இன்றும் இந்தப் புராணம் கைசிக ஏகாதசியன்று இரவு திருக்குறுங்குடியில் நாடகமாக நடத்திக் காண்பிக்கப்படுகிறது. வாழ்வில் ஒரு கைசிக ஏகாதசியாவது திருக்குறுங்குடியில் தங்கி இதை அனுபவிக்க வேண்டும்.

தவிர, இன்று அனைத்து வைணவ கோயில்களிலும் இந்த மகாத்மியம் இன்றும் வாசிக்கப்படுகிறது. ''புண்ணியம் மிகுந்த கைசிக மகாத்மியத்தை சொல்கின்றவர், கேட்கின்றவர் இந்த லோகத்து ஐஸ்வர்யங்கள் அனைத்தையும் அனுபவித்து, பின் வைகுந்தத்தையும் அடைவர்" என்று பூமி பிராட்டிக்கு வராஹ பெருமாளே சொன்னதாக ஐதீகம்!

அனைவரும் வாழ்வில் உழைப்பதும், பிழைப்பதும் ஏதோ ஒன்றைப் பெறுவதற்காகத்தான். ஆனால், பெறுவதே அதை மற்றவர்க்குத் தருவதற்குத்தான் என்பதை உணர்த்திக் காட்டியவர் நம்பாடுவான். கைசிக ஏகாதசியன்று நம்பாடுவான் சரித்திரம் கேட்டால் பாவங்கள் தொலையும். அதுவும் திருக்குறுங்குடிக்குச் சென்று இதை அனுபவித்தால் நம்பியின் அருளும் சேர்ந்து கிட்டுமல்லவா!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com