​முற்றும் துறந்தவர்; முழுதும் அறிந்தவர்!

​முற்றும் துறந்தவர்; முழுதும் அறிந்தவர்!
Published on

ஸ்ரீதர்

னது அறுபத்தைந்து வயது வரைக்கும் மடத்துக்காகவே தொண்டு செய்து, மகாபெரியவர் பாதமே கதி என்று இருந்தவர் பஞ்சாபகேசன். அதுக்கு மேல் ஆசார்யாளுக்கு கைங்கர்யம் செய்ய அவரோட தள்ளாமை இடம் கொடுக்கவில்லை. அதனால், மகாபெரியவரிடம் உத்தரவு பெற்று, தஞ்சாவூரில் இருந்த தன்னோட பிள்ளையுடன் போய்விட்டார்.

அவரோட பிள்ளையும் நல்லவன்தான். ஆனால், சதா காலமும் பெரியவா கைங்கர்யத்துலயே இருக்கறதுக்கெல்லாம் அவங்களோட குடும்ப நிலைமை இடம் கொடுக்கவில்லை. தினமும் உழைத்தால்தான் அன்றைய பிழைப்பு நடக்கும்.

பஞ்சாபகேசன் காஞ்சிபுரத்துலேர்ந்து தஞ்சாவூர் போயிட்டாலும், பெரியவர் பேரால் ஏதாவது கைங்கர்யம் செய்யணும், தான தர்மம்னு முடிஞ்ச அளவுக்காவது பண்ணணும்னு நினைச்சார். ஆனா, அவரால பெரிசா எதுவும் பண்ண முடியலை.

இந்த நிலையில், ஒரு நாள் அவரோட மகன் பேச்சுவாக்குல ஒரு வார்த்தையைச் சொன்னான், "ஆரம்பத்துலேர்ந்து பெரியவா கார்யம்னே இருந்துட்டேள். ஏதாவது சர்க்கார் உத்தியோகத்துல இருந்திருந்தாலாவது ரிடையர்மென்டுக்கு அப்புறம் பென்ஷனாவது வந்திருக்கும். அதை வைச்சுண்டு உங்க இஷ்டத்துக்கு செலவு பண்ணியிருக்கலாம். இப்படி மடத்துல கைங்கரியம் பண்ணிண்டு இருந்துட்டு இப்போ…' என்று இழுத்தான்.

மகன் சொன்னது அப்பாவுக்கு, 'சுருக்'கென்று இருந்தது. அவனும் மகாபெரியவர் மேல் பக்தி உள்ளவன்தான். ஆனால், அவன் அப்படிப் பேசியதும் கோபம் தாங்க முடியவில்லை அவருக்கு. "இப்போ நமக்கு என்ன குறை வந்துடுத்துன்னு நீ இப்படிப் பேசறே? மகாபெரியவா பென்ஷன் தரணும்னு சொல்றியா? இல்லைநான் கைங்கர்யம் செய்யறது தப்புன்னு சொல்றியா?"

அப்பாவோட கோபத்தைப் பார்த்ததும், தன்னோட தவறை உணர்ந்த மகன், "இல்லைப்பாநான் சொன்னது, உனக்குன்னு பென்ஷன் வந்தா நீ இஷ்டப்படி செலவு பண்ணலாமேன்னுதான்…" என்று ஏதோ சொல்லி சமாதானப்படுத்தினான்.

கொஞ்ச நாள் கழிச்சு, ஏதோ விஷயமா காஞ்சிபுரத்துக்குப் போனவன், அப்படியே மகாபெரியவாளையும் தரிசிக்கறதுக்காக ஸ்ரீமடத்துக்குப் போனான். பக்தர் கூட்டத்தோட வரிசைல நின்னு தன்னோட முறை வந்ததும் பரமாசார்யாளை நமஸ்காரம் செய்தான்.

கண்ணைக் கொஞ்சம் சுருக்கி உற்றுப் பார்த்த பெரியவா, "நீ பஞ்சாபகேசனோட புள்ளையாண்டான்தானே; அப்பா எப்படி இருக்கார்? அவருக்கு எம் மேலே ஆத்மார்த்தமான பிரியம். அவருக்கு எந்தக் குறையும் இல்லாம பார்த்துக்கோ…" மகாபெரியவா சொல்லச் சொல்ல, ஆமோதிச்சு தலையை ஆட்டினான்.

அவன்கிட்டே ஒரு ஆரஞ்சுப் பழத்தைக் கொடுத்த பெரியவா தொடர்ந்து பேச ஆரம்பிச்சார், "இந்த மடத்துல கைங்கரியம் பண்ணறவாளுக்கு கைநிறைய தரணும்னு எனக்கும் ஆசைதான். ஆனா, இப்போதைய நிலைல அது முடியலை. ஏன்னா, கொடுக்கறவா என்ன கொடுக்கறாளோ, அதை வைச்சுண்டு மடத்தை நடத்த வேண்டியிருக்கு. ஏன்னா இது ஸர்க்கார் ஆபீஸ் இல்லை பாரு. இங்கே காமாக்ஷியை பிரார்த்திச்சுண்டு, அவ என்ன தராளோ அதான். ஆனா, உன்னோட தகப்பனார் இந்த மடத்துக்கு எவ்வளவோ கைங்கரியம் செஞ்சிருக்கார். அதனால மாஸா மாஸம் இருபத்தஞ்சு கலம் நெல்லை அவர் இருக்கற இடத்துக்கே அனுப்பச் சொல்லிடறேன். மடத்துக்காரா இந்த ஏற்பாட்டை செஞ்சுடுவா. ஒரு பென்ஷன் மாதிரி இதை ஏற்பாடு செஞ்சிருக்கேன்னு வைச்சுக்கோயேன்" மகாபெரியவர் சொன்னதுதான் தாமதம்அப்படியே தடால்னு அவர் கால்ல விழுந்தான் அவன்.

"ஸ்வாமீஎன்னை மன்னிச்சுடுங்கோ. ஏதோ ஒரு ஆதங்கத்துல, 'சர்க்கார் உத்யோகம் பார்த்திருந்தா உங்களுக்குப் பென்ஷன் வந்திருக்கும்'னு என் தகப்பனார்கிட்டே பேசிட்டேன். அது தப்புதான். நீங்க இப்படி நெல்லை அனுப்பறதா சொன்னதை அப்பாகிட்ட சொன்னா, அவர் மனசு ஒடைஞ்சு போயிடுவார். நான் பேசியது தப்புதான்!" அப்படின்னு கதறினான்.

அவனை எழுந்திருக்கச் சொன்னார் பரமாசார்யா. "நான் உன்னைக் குறை சொல்லலை. உங்க அப்பாவோட கைங்கர்யத்துக்கு என்னால பென்ஷன் நிறைய கொடுக்க முடியலை. அதனால ஏதோ கொஞ்சம் நெல்லை அனுப்பறேன்னுதான் சொல்றேன். அப்பாகிட்ட சொல்லுஅவரை கஷ்டப்படாம பார்த்துக்கோ. புரியறதா?" எனக் கூறி ஆசிர்வாதம் பண்ணினார் ஆசார்யா.

ன்னோட பக்தன் எங்கே இருந்தாலும், என்ன பண்ணினாலும், எப்பவும் அவனைப் பார்த்துக்கொண்டே இருக்கிற பகவான் மாதிரி தனக்குத் தொண்டு செய்ற பக்தன் எங்கேயோ இருக்கிற ஊருக்குப் போன பிறகும், அவன் மகன் அவனைக் கேட்ட கேள்வியை இருந்த இடத்தில் இருந்தே தெரிந்து கொண்டு, அந்த பக்தருக்கு ஒரு குறையும் இல்லாம இருக்க வழி பண்ணின பரமாசார்யாளோட கருணையை நினைச்சு சிலிர்த்துப் போனார்கள் அங்கே இருந்தவர்கள் எல்லோரும்.

அதுமட்டுமா? தன்னோட அப்பாவை, 'பென்ஷன் கூட இல்லாம சேவை செய்யறியே'ன்னு கேட்ட அதே மகன், பரமாசார்யாளுக்கு கைங்கர்யம் செய்யறதையே தன்னோட பிரதான வேலையா மாற்றிக்கொண்டு அடிக்கடி மடத்துக்கு வந்து தொண்டு செய்ய ஆரம்பித்து விட்டார்.

மகாபெரியவரின் கருணையை என்ன வார்த்தைகளால் சொல்லி வியப்பது?

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com