நிவேதனத்தை கடவுள் ஏற்பது நிஜமா?

நிவேதனத்தை கடவுள் ஏற்பது நிஜமா?
Published on

.எஸ்.கோவிந்தராஜன்

றை வழிபாட்டு நாட்களில் கோயில்களிலும் வீடுகளிலும் பல்வேறு நிவேதனங்களைச் செய்து சுவாமிக்குப் படைப்பது வழக்கம். அப்படிப் படைக்கப்படும் நிவேதனங்களை சுவாமி ஏற்றுக்கொண்டாரா? இல்லையா? என்ற கேள்வி, வெளிப்படையாகக் கேட்கப்படா விட்டாலும் பலரது மனதிலும் எழுவது இயல்பு.

அந்த சந்தேகம் குருகுலத்தில் கல்வி பயின்ற ஒரு சீடனின் மனதிலும் எழுந்தது. இதற்கான விடையை உடனே தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்த அவன், தனது குருவிடம் சென்று, "குருவே, நாம் கடவுளுக்குப் படைக்கும் நைவேத்தியத்தை அவர் அருந்துகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவன் அதை சாப்பிட்டால் நைவேத்தியத்தின் அளவு குறைய வேண்டும் அல்லவா? பிறகு எப்படி அதை கடவுள் சாப்பிட்டார் என்று நம்புவது?" என்று கேட்டான்.

அதைக்கேட்டு மௌனமாக சிரித்த குரு, "வகுப்புக்கு நேரமாகி விட்டது. அதனால், இப்போது நீ வகுப்பறைக்குச் செல். நான் சிறிது நேரத்தில் வருகிறேன்" என்றார்.

சற்று நேரத்தில் வகுப்பறைக்கு வந்த குரு, அன்று ஒரு அற்புத மந்திரத்தை மாணவர்களுக்குச் சொல்லி விளக்கினார். மாணவர்கள் அனைவரும் அதை புத்தகத்தில் பதிவு செய்து, மனதில் பதிய வைக்கத் துவங்கினர். சிறிது நேரம் கழித்து, தன்னிடம் நைவேத்தியம் குறித்து சந்தேகம் கேட்ட மாணவனை சைகையால் அழைத்தார் குரு.
குருவின் முன்பு பணிவுடன் வந்து நின்ற சீடனிடம், "சிஷ்யனே, நான் கூறிய மந்திரத்தை மனதில் ஏற்றிக்கொண்டாயா?" என்று கேட்டார்.

"ஏற்றிக்கொண்டேன் குரு. என்றும் மறவாதபடி அதை மனதிலும் உள்வாங்கிக்கொண்டேன்" என்றான் சிஷ்யன்.
"அப்படியென்றால் அந்த மந்திரத்தை ஒரு முறை எனக்குச் சொல்லிக்காட்டு பார்க்கலாம்" என்றார் குரு.

சீடன் உடனே மனதை ஒருநிலைப்படுத்திக் கொண்டு, குரு கற்பித்த மந்திரத்தை உச்சரிக்க ஆரம்பித்தான். சொல்லி முடித்ததும், "சீடனேநான் சொன்ன மந்திரத்தை நீ சரியாக உள்வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லையே" என்றார்.

அதைக்கேட்டு பதற்றம் அடைந்த சீடன், "குருவே, நான் கூறிய மந்திரத்தில் ஏதேனும் தவறு இருந்தால் மன்னியுங்கள். நீங்கள் கூறியதை இந்தப் புத்தகத்தில் பதிவு செய்து வைத்தபடிதான் நான் அந்த மந்திரத்தைக் கூறினேன்" என்றான்.
"சரி, அந்தப் புத்தகத்தைக் காட்டு பார்க்கலாம்" என்றார் குரு.
புத்தகத்தை எடுத்துக்கொண்டு வந்து குருவிடம் காண்பித்தான் சீடன்.
"இந்தப் புத்தகத்தில் இருந்துதான் மந்திரத்தை உள்வாங்கினாயா?" என்றார் குரு.
"ஆம் குருவே" என்றான் சிஷ்யன்.
"சரிமந்திரத்தை நீ உள்வாங்கிய பிறகும் இதில் மந்திரம் இருக்கிறதே எப்படி? நீ உன் மூளையில் மந்திரத்தை ஏற்றிக்கொண்டால், புத்தகத்தில் அது இருக்கக் கூடாதல்லவா?" என்றார் குரு.
சிஷ்யன் குழப்பமாகப் பார்த்தான்.
"சீடனே, நைவேத்தியம் குறித்து நீ கேட்ட கேள்விக்கு இப்போது வருவோம். நீ மனதில் உள்வாங்கிய மந்திரம் சூட்சும நிலையில் இருக்கிறது. புத்தகத்தில் இருக்கும் மந்திரம் ஸ்தூல வடிவம். இறைவன் சூட்சும நிலையில் இருப்பவன். அவனுக்கு நாம் ஸ்தூல வடிவில் படைக்கும் நைவேத்தியத்தை அவன் சூட்சுமமாகவே உட்கொள்கிறான். அதனாலேயே அதன் அளவு குறைவதில்லை. உதாரணத்திற்கு, இப்போது நீ உள்வாங்கியதால் புத்தகத்தில் இருந்த மந்திரத்தின் அளவு குறையவில்லை அல்லவா? அதுபோலத்தான்" என்றார் குரு.
இந்த விளக்கத்தைக் கேட்டு சந்தேகம் தெளிந்த சிஷ்யன், மெய்சிலிர்த்து நின்றான்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com