பாண்டவர் வழிபட்ட ஸ்ரீ வஜ்ரேஸ்வரி

பாண்டவர் வழிபட்ட ஸ்ரீ வஜ்ரேஸ்வரி
Published on

3

ராஜி ராதா

மாசலப் பிரதேசத்தின் பதான்கோட் ரயில் நிலையத்திலிருந்து 90வது கிலோ மீட்டர் தொலைவில், காங்கரா நகரில் அமைந்துள்ளது ஸ்ரீ வஜ்ரேஸ்வரி தேவி திருக்கோயில்.
இப்பகுதி மக்களுக்கு இவளே குலதெய்வம். சக்தி பீடங்களில் காங்கரா வஜ்ரேஸ்வரிக்கு முக்கிய இடமுண்டு.

தாட்சாயணியின் தந்தை தட்சனுக்கு மாப்பிள்ளை சிவனை கண்டாலே வெறுப்பு. காரணம், தாட்சாயணி, தந்தையின் விருப்பத்தை மீறி சிவனை திருமணம் செய்துகொண்டாள். பிறகு தட்சன் ஒரு மிகப் பெரிய யாகம் நடத்தியபோது, அதற்கு தேவர்கள் அனைவரையும் அழைத்தான். ஆனால், சிவனை அழைக்கவில்லை. இதனால் வருந்திய தாட்சாயணி தந்தையிடம் நியாயம் கேட்கச் சென்றாள். தட்சனோ, தாட்சாயணியையும் சிவபெருமானையும் அவமானப்படுத்திப் பேசினான்.

இதனால் கடும் கோபம் அடைந்த தாட்சாயிணி, அருகில் எரிந்துகொண்டிருந்த
யாக குண்டத்தில் குதித்து விட்டாள். பஸ்மமாகிக் கொண்டிருக்கும் சூழலில் அங்கு வந்த சிவன், அவளைத் தூக்கிக்கொண்டு ருத்ர தாண்டவம் ஆடுகிறார். இதனைப் பார்த்த விஷ்ணு, உடனே தனது சக்ராயுதத்தால் தாட்சாயிணின் உடலை கூறுகளாக வெட்ட, அவை பூமியில் பல இடங்களில் விழுந்தன என சிவ புராணங்கள் கூறுகின்றன.

இவற்றில் சக்தியின் இடது மார்பகம் இங்கு விழுந்தது எனவும், இல்லைசக்தியின் உடலில் அறுபடாத மீதி பாகங்கள் மட்டுமே இங்கு விழுந்தன எனவும் பலவிதமாகக் கூறுகின்றனர். கோயிலில் பின்டி வைக்கப்பட்டு, அதுவே, மகாலெட்சுமி, காளி மற்றும் சரஸ்வதி ஆகிய மூவரின் அம்சமாக மொத்தமாக வஜ்ரேஸ்வரி தேவி என அழைக்கப்படுகிறது.

காபாரதக் காலத்தில் பஞ்சபாண்டவர்கள், தங்களுக்கு மேலும் பலம் சேர்க்க துர்கையை பிரார்த்தித்தனர். ஒரு நாள் அவர்களின் கனவில் தோன்றிய துர்கை, ''நான் நாகர்கோட் என்ற கிராமத்தில் ஒரு இடத்தில் புதைந்துள்ளேன். என்னைத் தேடி கண்டுபிடித்து, பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்ப வேண்டும்'' எனக் கூறி மறைந்தாள்!

பாண்டவர்களும் உடனே துர்கை கூறிய இடத்திற்குச் சென்று துர்கை சிலையைக் கண்டுபிடித்து, பிரதிஷ்டை செய்து கோயிலும் எழுப்பினர். அவர்கள் கண்ட பிண்டிதான் இன்றும் கோயிலில் உள்ளது என்கிறது கோயில் வரலாறு.

10வது நூற்றாண்டில் இந்தக் கோயில் மிகப் பிரபலமாய் இருந்துள்ளது. அப்போது 1009ம் ஆண்டு முகமது கஜனி, இந்தக் கோயிலை கொள்ளையடித்தான். மேலும், கோயிலின் வாசற்கதவில் பொருத்தப்பட்டிருந்த வெள்ளிக் கவசங்களையும் பெயர்த்து எடுத்துச் சென்று விட்டான். அடுத்து, துக்ளக். பிறகு, சிகந்தர் லோடி என பலரும் திரும்பத் திரும்ப இந்தக் கோயிலை கொள்ளையடித்துள்ளனர்.

அக்பர் காலத்திலும் இக்கோயிலில் கொள்ளையடிக்கும் முயற்சி நடந்தது. அப்போது தயான்பகத் என்ற வாலிபன் அதனைத் தடுக்கும் முயற்சியாக, தன்னையே காவு கொடுத்துக் கொண்டான். இதனைக் கண்ட அக்பர் கொள்ளை முயற்சியை நிறுத்திவிட்டு திரும்பிச் சென்று விட்டார்! உயிரை மாய்த்துக்கொண்ட தயான்பகத்துக்கு கோயில் வாசலில் இன்றும் சிலை உள்ளது. இன்றுகூட சிலர், தேவியின் அருள் வேண்டி இக்கோயிலில் தங்கள் நாக்கை வெட்டிக் கொள்கின்றனர். இவர்களில் சிலருக்கு உடனே நாக்கு வளர்ந்து விடுவது ஆச்சர்யம் என்கின்றனர் பக்தர்கள். இருந்தும் இந்த முயற்சிக்கு தற்போது தடை போடப்பட்டுள்ளது.

இவ்வளவு புனிதம் வாய்ந்த வஜ்ரேஸ்வரியை தரிசிக்க கோயிலுக்குச் செல்வோமா?

மாசலப் பிரதேசத்திற்கே உரிய பிரமிட்டும் இல்லாத, கூம்பு வடிவமும் பெறாத ஒரு கோயில் கோபுரத்தை இங்கு தரிசிக்கலாம். அத்துடன், கோயில் தொலைவிலிருந்தே பளிச்சென வெளிப்புறம் தெரிய ஏதுவாய் வெள்ளை வண்ணம் பூசியுள்ளனர்.

வாசலில் நான்கு வெண்கல சிங்கங்கள் நிற்கின்றன. ஒரு பெரிய மணியையும் நுழைவாயிலில் காணலாம். முன் ஹாலில் சுமார் பதினேழு பிரம்மாண்ட பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றில் கண்களைக் கவரும் காட்சிகளை ஓவியங்களாகத் தீட்டியுள்ளனர். பார்த்து ரசிக்க வேண்டியவை இவை!

அடுத்து, கருவறையில் ஸ்ரீ வஜ்ரேஸ்வரியின் தரிசனம். சாமுண்டா தேவி போன்றே இங்கும் தேவி பிண்ட வடிவில்! மார்பக பகுதி அலங்காரத் துணியால் மூடப்பட்டுள்ளது. மேலும், முகத்துடன் கூடிய தரிசனம் கிடைக்க ஏதுவாய் வெள்ளி முகம். அதற்குப் பின்னால் மந்திரம் ஏற்றிய ஒரு வெள்ளிப்பலகை உள்ளது. நன்கு அலங்காரம் செய்து கண்களைக் கவரும் விதத்தில் பீடம் அமைந்துள்ளது.

மகிஷாசுரனை வதைத்தபோது, தேவிக்கு உடலின் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டதாம். அதனை குணப்படுத்த, நாகர்கோடு வெண்ணெயைத்தான் உடலில் பூசி குணப்படுத்திக் கொண்டாளாம். அதனை நினைவூட்டும் விதமாக வஜ்ரேஸ்வரிக்கு வெண்ணெய்க் காப்பு அலங்காரம் மிகவும் விசேஷம்.

கோயிலினுள் சிறு சன்னிதியில் பைரவர் அருள்பாலிக்கிறார். 1905ல் இந்தப் பகுதி, கடும் பூமி அதிர்வுக்கு உள்ளானபோது, கோயில் கடுமையாக சேதமுற்றது. 1920ல் அவை சரி செய்யப்பட்டு கோயில் மேலும் விஸ்தரிக்கப்பட்டது.

மகாசங்கராந்தி, தீபாவளி, ஹோலி ஆகியவை இக்கோயிலின் சிறப்பு பண்டிகைகளாகக் கொண்டாடப்படுகின்றன. இந்தக் கோயிலின் சிறப்பு வழிபாடு இரு நவராத்திரிகள்தான்! மார்ச் ஏப்ரலில் நடக்கும் வசந்த நவராத்திரியின்போது கோயிலின் உள்ளேயும் வெளியேயும், பூ வேலைப்பாடுகள் அமர்க்களப்படும். அப்போது அமாவாசை துவங்கி கண்காட்சி நடைபெறுகிறது. அந்த சமயம் அம்மனை தரிசிக்க லட்சக்கணக்கில் மக்கள் கூடுகின்றனர். அக்டோபரில் நடைபெறும் சாரதா நவராத்திரியும், மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அதற்கும் பக்தர்கள் லட்சக்கணக்கில் தரிசிக்க வருகின்றனர்.

அமைவிடம் : காங்கரா ரயில் நிலையத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் கோயில் அமைந்துள்ளது. டெல்லியிலிருந்து நேரடியாக வரலாம்!

தரிசன நேரம் : அதிகாலை 5 முதல் இரவு 9.30 மணி வரை. குளிர் காலத்தில் நடை திறப்பு நேரத்தில் மாற்றம் உண்டு.

(தொடரும்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com