பிரபஞ்சத்திடம் கேளுங்கள்!

பிரபஞ்சத்திடம் கேளுங்கள்!
Published on

டி.எம்.இரத்தினவேல்

பிரபஞ்சம் ஒரு மகாசக்தி. அதுதான் கடவுள். எங்கும் நிறைந்திருக்கிறது. நம்பிக்கையுடன் அதனிடம் கேளுங்கள். அது நீங்கள் வேண்டுவனவற்றைத் தரக் காத்திருக்கிறது. உங்களுக்கு வேண்டியதைப் பிரபஞ்சத்திடம் கேட்கும்போது, உங்கள் விருப்பம் குறித்த தெளிவை நீங்கள் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது. அந்தத் தெளிவு நீங்கள் கேட்டதற்குச் சமம்.

நீங்கள் கேட்டது ஏற்கெனவே கிடைத்துவிட்டது போல நடந்துகொள்வது, பேசுவது, சிந்திப்பது ஆகியவை நம்பிக்கை கொள்வதாகும். கிடைத்துவிட்டது என்ற அலைவரிசையி்ல் நீங்கள் ஒலிபரப்பும்போது அதை நீங்கள் பெற்றிட ஈர்ப்பு விதி மக்களை, நிகழ்வுகளை மற்றும் சந்தர்ப்பங்களை ஒருங்கிணைக்கும்.

உங்களது விருப்பம் நிறைவேறிவிட்ட பிறகு நீங்கள் எப்படி உணர்வீர்களோ, அத்தகைய மன உணர்வை உண்டாக்கிக்கொள்வது பெற்றுக் கொள்ளுதலின் முக்கியமான அம்சம். மகிழ்ச்சியான மனநிலையுடன் இருப்பது, உங்களுக்கு வேண்டியதைப் பெற்றுக்கொள்ளும் அலைவரிசையில் உங்களை வைத்துவிடும்.

உதாரணமாக, நீங்கள் உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால், கவனத்தை எடை குறைப்பில் காட்டாதீர்கள். மாறாக, கச்சிதமான எடையில் உங்களது கவனத்தைக் குவியுங்கள். உங்களது கச்சிதமான எடையை உணர்வுபூர்வமாக, ஆழமாக உணருங்கள். அது உங்களை நோக்கித் தானாகவே ஓடி வரும்.

எனவே, நீங்கள் விரும்புபவற்றை உங்களுக்கு அளித்திடப் பிரபஞ்சத்திற்கு ஒரு விநாடி நேரம் கூட ஆகாது. ஒரு ரூபாயைத் தருவிப்பது எவ்வளவு எளிதோ, அதே அளவு எளிதானதுதான் ஒரு கோடி ரூபாயைத் தருவிப்பதாகும். ஆகவே, பிரபஞ்சத்திடம் கேளுங்கள்.

ஒரு தம்ளர் தேநீர் தயாரிப்பது அல்லது வாகனம் நிறுத்த இடம் தேடுவது போன்ற சிறிய விஷயங்களில் தொடங்குவது, ஈர்ப்பு வீதி மீது நம்பிக்கை ஏற்படச் சிறந்த வழி. ஏதாவது சிறிய விஷயம் ஒன்று தேவை என்று சக்தியுடன் கேளுங்கள். ஈர்க்கக்கூடிய உங்கள் சக்தியை உணர உணர, பெரிய விஷயங்களை ஈர்ப்பது பெரிய காரியமாக இருக்காது. ஈர்ப்பு விதி உங்களுடைய ஒவ்வோர் ஆணையையும் நிறைவேற்றும்.

நாளைய தினம் நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதை முன்கூட்டியே சிந்தனை மூலம் உருவாக்கிக்கொள்ளுங்கள். உங்களது வாழ்க்கையையும் உங்களது நோக்கப்படி உங்ளால் அமைத்துக்கொள்ள முடியும்.

சித்தர்களும் ஞானிகளும் பிரபஞ்சத்தைத்தான், 'வெட்டவெளி' என்று போற்றிப் பாடினார்கள். அதுதான் கடவுள். பிரபஞ்சத்தை நம்புங்கள். பிரபஞ்சத்தைக் கேளுங்கள். பிரபஞ்சத்திடமிருந்து தேவையானவற்றை கேட்டுப் பெறுங்கள். வள்ளலாரும் பட்டினத்தாரும் மாணிக்கவாசகரும் தேவார மூவரும் இதைத்தான் சொன்னார்கள்!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com