
ஷேம் ஆன் யு! ஷேம் ஆன் Her!
ஷேம் ஆன் Him! ஷேம் ஆன் Them!
விஞ்ஞான வளர்ச்சி அதிகமாகி, உலகம் சுருங்கிப் போன போதிலும், மக்கள் தங்களைச் சுற்றியிருப்பவர்களை எடை போடத் தயங்குவதில்லை. காது படவும் பேசுகிறார்கள்; மறைமுகமாகவும் பேசுகிறார்கள். மனித வாழ்க்கையில் ஷேமிங் எவ்வகையில் நேர்கிறது? தெரிந்து கொள்ளலாமே!.
பேரண்ட் ஷேமிங்:
பொது இடங்களில், பலர் பார்க்க, கையில் வைத்திருக்கும் குழந்தையை சத்தமிட்டு கொஞ்சுவது, முத்தமிடுவது, பேசுவது போன்றவைகள் இதில் சேர்கிறது. "கொஞ்சம்கூட இங்கிதம் தெரியவில்லையே! காணாததைக் கண்ட மாதிரி, பொது இடத்தில் என்ன கொஞ்சல்?" என பிறர் கூறுவது காதில் விழுகையில், பெற்றோர்களுக்கு ஷேமிங் சங்கடம்தான். பேசுபவர்களிடம் சண்டை போடவா முடியும்? மேலும், தெரிந்தவர்கள் வீடுகளுக்குச் செல்கையில், இவர்களது குழந்தைகள் அவர்கள் வீட்டு சோபா மீது குதிப்பதும்; பொருட்களை எடுப்பதுவுமாக இருந்தாலும் ஷேமிங்தான்.
கிராமர் (Grammer) ஷேமிங்:
ஆங்கிலம், தமிழ் என்று கிடையாது. ஏனைய மொழிகளிலும் இலக்கண சுத்தமாக பேச அநேகம் பேர்களுக்கு இயலாது. மற்றவர்களிடம் பேசுகையில், "என்ன பேசற? சரியாக பேசக் கற்றுக் கோள்! இப்படிப் பேச வெக்கமாயில்ல?" என் கையில் ஷேமிங்தான். அவரவர் வழக்கத்தை மாற்றுவது சிரமம்தான் என்பதை புரிந்துகொள்ளாதவர்கள். பேசாமல் கேட்டுக் கொள்ள வேண்டிய கட்டாயம்.
உடலமைப்பு (Body) ஷேமிங்:
மிகவும் குண்டான, தெற்றுப்பல் உடையவர்களைப் பார்த்து "என்ன குண்டு? பல் பயங்கரம்! என பிறர் பேசுவதைக் கேட்கையில் மனது சங்கடப்படும். நிறத்தையும் விட்டு வைப்பதில்லை. இம்மாதிரியான பேச்சுகளைக் கேட்டு ஒருவித அவமானம் அடைந்து ஜிம் போவதும், டாக்டரிடம் போவதும், டயட் இருப்பதும் என செலவோ செலவுதான். நல்ல உடலமைப்பு இருக்கிறவர்களுக்கும் ஷேமிங் ஏற்படுகிறது. "அவளுக்கென்ன! அவளுடைய உடலமைப்பு அனைவரையும் கவரும் என்பார்கள். விவஸ்தையற்ற விமரிசனங்கள்.
மதர் ஷேமிங்:
பெரிய படிப்பு படித்து, பெரிய வேலையில் பணி புரியும் மணமான பல பெண்கள், குழந்தைப் பேற்றிற்குப் பிறகு, குடும்பச் சூழ்நிலை காரணமாக வேலையை விடுவது சகஜம். "என்ன Talent தெரியுமா? குழந்தையை கவனிப்பதற்காக வேலையை விடலாமா? ஏதாவது ஏற்பாடு செய்யலாமே! கணவன் support இல்லை. அவளது படிப்பை அவளே கெடுத்துக் கொள்கிறாள்." இவ்வாறு சிலர் கூறுகையில், மதருக்கு 'ஷேமிங்' ஏற்படுகிறது.
ஸ்டைல் ஷேமிங்:
சிலர் தங்களது சௌகரியத்துக்காக ஜீன்ஸ் பேண்ட், டீ ஷர்ட், ஷாட்ஸ் அணிவதுண்டு. சற்றே வயதான பெண்மணிகள் இவற்றை போட்டுக் கொண்டால் "வயசுக்கேத்த மாதிரி Dress போடாம இப்படியா? சகிக்கலை!" என அடுத்தவர் கூறும்போது, இதுமாதிரி போட்டது தவறோ? என்கிற குற்ற உணர்ச்சி எனும் ஷேமிங் தன்னையறியாமல் ஏற்பட்டு விடுகிறது.
உடல் முடி ஷேமிங்:
இது தனிப்பட்ட நபர் விஷயம். உடலிலுள்ள முடியை நீக்க வேக்ஸிங் மற்றும் இதர வழிகள் உள்ளன. இருந்தாலும் சிலர் இது பற்றி விமர்சிக்கவும் தயங்குவதில்லை. அதனால் சிறுமுடி இருந்தால்கூட ஷேமிங் என்று எண்ணுபவர்கள் பலர்.
சிங்கிள் (Single) ஷேமிங்:
தனியே வசிக்கும் பெண் மற்றும் ஆணிற்கு ஏற்படுவது. "அச்சச்சோ! இன்னமும் தனியாகவா இருக்கே? நிறைய 'Dating apps' இருக்கே. அது வழியாக ஆளைப் பிடிக்கலாமே! நா வேணா நல்ல வரனா பார்க்கவா?" என்று மிகவும் தெரிந்தவர்கள் கேட்கையில், "மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல்' என்பது போல ஒரு வகையான ஷேமிங்தான்.
பயணி ஷேமிங்:
டிரெயின் அல்லது விமானத்தில் பயணம் செய்கையில், குழந்தைகளுடன் வரும் சில பயணிகளின் செயல்கள் முகம் சுளிக்க வைப்பதாக இருக்கும். டிஷ்யூ பேப்பரை கீழே போடுவது, பறக்க விடுவது, தண்ணீரை சிந்துவது, டயப்பர் மாற்றுவது, பழைய டயப்பரை பக்கத்தில் வைப்பது போன்றவைகள் தவிர, குழந்தையின் கை – கால்கள் பக்கத்திலிருப்பவர் மீது அடிக்கடி பட்டு சிரமப்பட வைத்துவிடுகிறது. அருகில் அமர்ந்திருப்பவர்கள் அப்பயணியை ஒரு முறை முறைத்து, குழந்தையின் கால்களை நீக்குகையில், பயணிக்கு ஒருவிதமான ஷேமிங்தான்.
அனானிமஸ் ஷேமிங்:
ஒருவரைப் பற்றி சரியாகத் தெரியாதவர்கள் மற்றும் அறியாதவர்கள், மற்றவர்களிடம் அவரைப் பற்றி இல்லாததும், பொல்லாததும் இட்டுக்கட்டிக் கூறுவது; மீடியாவில் விஷமத்தனமாகப் போடுவது, சில சமயம் மிரட்டுவது போன்றவை கண்ணுக்குத் தெரியாத ஷேமிங். ஏன்? எதனால்? இப்படி என்று மனசு சங்கடப்படும்.
சிறியவர் – பெரியவர் என்றில்லை. எங்கும் எதிலும் ஷேமிங் பேசப்படுகிறது. சம்பந்தப்பட்டவர்கள் ஒருவித குற்ற உணர்ச்சிக்கு உள்ளாகி வருத்தப்படுகிறார்கள். பலர் தற்கொலை முயற்சிக்குகூட சென்று விடுகிறார்கள். இருந்தாலும் ஒரு காதில் வாங்கி மறு காது வழியே வெளியே விடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
மிக – மிக நெருக்கமானவர்கள், வேண்டியவர்கள், பிரபலங்கள் போன்றவர்களாக இருந்தால் ஷேமிங் கண்டு கொள்ளப்படுவதில்லை. விமர்சிகப் படுவதில்லை. சல்தா ஹை! பரவாயில்லை!