புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்…

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்…

Published on

சிறுகதை

ரேவதி பாலு

ஓவியம் : தமிழ் 

"சரியாக எட்டு மணிக்குத் திறந்திடுவாங்க"- தெருக்காரர்கள் சொல்லித்தான் அனுப்பினார்கள்.

எட்டு மணிக்குத் திறந்ததும் கணேசனும் இன்னும் சிலரும் உள்ளே நுழைந்தனர்.

எட்டேகாலுக்கு டோக்கன் கொடுப்பவர் வந்தார்.  கணேசனுக்கு மூன்றாம் நம்பர் டோக்கன் கிடைத்தது.  வாசல் வராந்தாவில் வரிசையாக இடைவெளி விட்டு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.  எல்லோரும் உட்கார்ந்தார்கள்.  எட்டரைக்கு வெள்ளைப் புடைவையுடுத்தி தேவதைப்போல ஒரு நர்ஸ் வந்தார். அங்கே போட்டிருந்த மேஜைக்கு எதிரே அமர்ந்து ஒவ்வொரு டோக்கனாக, நம்பர் சொல்லி அழைத்தார். ஆதார் ஒரிஜினல் கொண்டுப் போகச் சொல்லி அனுப்பியிருந்தார்கள்.  கணேசன் ஆதார் ஒரிஜினல் கொடுத்தார்.  அதிலிருந்து ஆதார் எண்ணை ஒரு கார்டில் குறித்து, அன்றைய தேதி,  அவர் பெயர், வயது விவரங்கள் எழுதப்பட்டன. முதல் தடுப்பூசி என்பதும் குறிக்கப்பட்டது. ஒரு பெரிய ரிஜிஸ்டரிலும் மேற்படி விவரங்கள் குறிக்கப்பட்டு அவர் கையெழுத்து வாங்கப்பட்டது.

அப்போது ஒரு வயதானவர் பதற்றமாக உள்ளே வந்தார்.  நேரே நர்ஸிடம் சென்று தனக்குத் தடுப்பூசி போட்ட இடத்தைக் காண்பித்து மூச்சு வாங்க பேச ஆரம்பித்தார்.  ஊசி போட்ட இடத்தில் இன்னும் வலி இருக்கிறதாம்.  ஊசி போட்டு நான்கு நாட்கள் ஆகிறது என்றார்.

"நாந்தான் நீங்க நேத்திக்கி வந்தபோதே சொன்னேனே சார்?  ஒரு வாரம் வலி இருக்கத்தான் இருக்கும். கொஞ்சம் பொறுத்துக்குங்கன்னு!"  நர்ஸ் பொறுமையாக பதில் சொன்னார்.

வரிசையில் நின்றவர்களை நர்ஸுடன் பேச விடாமல் குறுக்கே மறித்தபடி சாய்ந்து நின்று,  "நா முந்தாநாள் வந்தபோதும் அதையே தான் சொன்னீங்க? இன்னிக்கும் அதையேதான் சொல்றீங்க.  இது எப்போதான் சரியாகும்?" பெரியவர் கோபமாகக் கேட்டார். இப்போ சுற்றிலும் இருப்பவர்கள் அவரைப் பார்த்துவிட்டு கசமுசவென்று தங்களுக்குள் பேச ஆரம்பித்தனர்.

நர்ஸ் தொடர்ந்து பேசிய ஆறுதலான வார்த்தைகளால் ஓரளவுக்கு சமாதானமாகிய பெரியவர் "அப்போ நாளைக்கும் சரியா போகலேன்னா  நிச்சயம் வருவேன்!" என்று  பயமுறுத்திவிட்டு பிரியா விடை பெற்றார்.

"அப்போ இந்தக் கிழம் டெய்லி வருதா?" என்றார் ஒரு ஐம்பது வயதுக்காரர் கிசுகிசுப்பாக.

"என்ன ஒரு எண்பது வயசு இருக்கும் போல இருக்குதே!" என்றார் அவர் பக்கத்தில் அமர்ந்திருந்தவர்.

"இப்படி வந்து உசிரை எடுக்குதுங்களே! இதுங்களுக்கெல்லாம் தடுப்பூசி எதுக்கு? இதுங்க கொரோனா வந்து செத்தா என்ன? கொரங்கு கடிச்சு செத்தா தான் என்ன?" என்றார் வரிசையில் நின்றிந்த மற்றொருவர் ஆத்திரமாக.

சுற்றிலும் இருந்தவர்கள் அவர் விமர்சனத்தைக் கேட்டு அடக்க மாட்டாமல் சிரிக்க ஆரம்பிக்க, "சார்! அப்படியெல்லாம் இங்க பேசாதீங்க… ப்ளீஸ்…  இங்கே சத்தம் வேண்டாம்!" என்றாள் நர்ஸ் கெஞ்சும் குரலில்.

அப்போது வாசலில் ஒரு ஆட்டோ வந்தது.  அதிலிருந்து இறங்கி உள்ளே நுழைந்தார் ஒரு பெண்மணி.  இப்போது பதிவு செய்து கொண்டிருந்த நர்ஸ் பரபரப்பாக எழுந்து நின்று ,"குட் மார்னிங் மேம்!" என்று அவருக்கு முகமன் கூறினார்.  பதிலுக்கு விறைப்பாகத் தலையை மட்டும் அசைத்த அந்த பெண்மணி, விடுவிடுவென்று நடந்து உள்ளே போனார்.  சில நொடிகளில் தன் கைப்பையை உள்ளே வைத்துவிட்டு வேகமாக வெளியே வந்த அந்த பெண்மணி, டோக்கனைப் பார்த்து பதிவு செய்து கொண்டிருந்த  நர்ஸைப் பார்த்து, "ஏம்மா! உனக்கு உள்ளே தானே ட்யூட்டி? இங்கே வந்து உட்காந்துக்கிட்டிருக்கே?  நேத்திக்கி ஊசி போட்டவங்க விவரம் எல்லாம் சிஸ்டம்ல அப்லோட் ஆயிடுச்சா?" என்றாள் கோபமாக.

வெலவெலத்துப் போய் எழுந்த நர்ஸ், "இங்க பப்ளிக் எல்லாம் ரொம்ப நேரமா காத்துக்கிட்டிருந்தாங்க.  ரிசப்ஷன் ஆள் இன்னும் வரல…  அதான் மேம்……" என்று இழுத்தாள்.

"நீ மொதல்ல உள்ள போ.   நேத்தைய என்ட்ரீஸ் முடிச்சிட்டு அப்புறம் பேசு" என்று கூறியவாறே டக்கென்று நர்ஸ் காலி செய்த நாற்காலியில் அமர்ந்து ,"உம்…  வாங்க! யார் அடுத்தது" என்று ரிஜிஸ்டரில் எழுத ஆரம்பித்தார்.

அப்பொழுது வாசலில் ஒரு பைக் வந்து நிற்க, அதில் பின்சீட்டிலிருந்து இறங்கிய ஒரு இளவயது பெண் தலைக்குக் குளித்திருந்த தலைமுடி காற்றில் பறக்க, தோளில் கைப்பை ஆட, மூச்சிரைக்க, ரிசப்ஷன் மேஜை அருகே ஓடி வந்தாள்.

"லாக் டவுன்னால பஸ் வரல மேம்… திரும்ப வீட்டுக்குப் போய் கணவரை இங்கே ட்ராப் செய்யச் சொல்லி வந்தேன். அதான்….." என்றாள் வியர்வை வழியும் முகத்துடன் பரிதாபமாக.

முகத்தில் கோபம் மாறாமல் உர்ரென்று அந்தப் பெண்மணி எழுந்திருக்க, இவள் அவசரமாக நாற்காலியில் உட்கார்ந்து, ரிஜிஸ்டரை தன் பக்கம் நகர்த்திக் கொண்டாள்.

"தலை முடியைப் பறக்க விடக்கூடாது…  கொண்டை போட்டுக்கிட்டு வரணும்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்.  எப்படி வந்திருக்கே பாரு!"

இப்பொழுது அந்தப் பெண் அவசரமாக எழுந்து நின்று தன் நீள தலைமுடியை சுருட்டி ஒரு கொண்டை போட்டுக் கொண்டாள்.

அந்தப் பெண்மணி உள்ளே சென்றதும் சுற்றிலுமிருந்தவர்கள் இந்த இளவயது நர்ஸுக்காக 'உச்சு' கொட்டினார்கள்.

"பாவம்! தலைக்கு ஊத்திக்கிட்டு வந்திருக்கு.  தலைமுடி காயணும்னு ஒரு ரப்பர் பேண்டைப் போட்டுக்கிட்டு வந்திருக்கு.  அதைப் போய் அந்த பொம்பளை இப்படிப் படுத்தியெடுக்குதே? பொம்பளையே பொம்பளைக்கு இரக்கம் காட்ட மாட்டேங்குது!"' என்றார் ஊசிக்காகக் காத்திருந்த ஒரு வயதான பெண்மணி.

"உஷ்!" என்று அவர்களை அடக்கிய அந்த நர்ஸ்,  "சூப்ரிண்டெண்ட் மேடம் அவங்க டியூட்டியைத்தான் பாக்குறாங்க.  அவங்களை ஒண்ணும் சொல்லாதீங்க!" என்று சிரித்த முகத்தோடு சொல்லிவிட்டு வேலையைத் தொடர்ந்தாள். கணேசன் இரக்கத்தோடு அந்தப் பெண்ணையே பார்த்தார்.

டோக்கன் விவரங்கள் குறிக்கப்பட்டவர்களை உள்ளே செல்லும்படி சொன்னார் நர்ஸ்.  கணேசனும் மற்றவர்களும் உள்ளே நுழைந்தார்கள்.

உள்ளேயும் இடைவெளி விட்டு நாற்காலிகள்.  டோக்கன் வரிசைப்படி அமர்ந்து கொண்டனர்.  வெளியே, உள்ளே எல்லா இடமும் வெகு சுத்தமாக பராமரிக்கப்பட்டு இருந்தது. உள்ளேயும் சூப்ரிண்டெண்ட் பெண்மணி ஏக கெடுபிடி.  சமூக இடைவெளி கடைப்பிடிக்க கறாராக அறிவுறுத்திக் கொண்டிருந்தார்.

அந்த நடுத்தர வயது சூப்ரிண்டெண்ட் பெண்மணி நின்ற இடத்தில் நில்லாமல் உள்ளே, வெளியே என்று ஆஸ்பத்திரியின் எல்லா இடங்களிலும் சுற்றிச் சுற்றி வந்து வேலைகளை, பணியாளர்களை மேற்பார்வைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

"மூணாம் நம்பர் டோக்கன் வாங்க!"

தன் டோக்கன் நம்பர் கூப்பிட்டதும் அறைக்குள் போய் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வெளியே வந்தார்.  இப்போது அந்த சூப்ரிண்டெண்ட் பெண்மணி அறைக்குள் நுழைந்தாள்.  இவர் வெளியே போவதைப் பார்த்ததும், "சார்! உடனே கிளம்பிப் போயிடாதீங்க.  வெளியே பெஞ்ச் போட்டிருக்கு பாருங்க.  அங்க ஒரு அரைமணி நேரம் ஒக்காந்திட்டுப் போங்க."

கணேசன் ஒன்றும் புரியாமல் ஒரு நொடி அந்தப் பெண்மணியையே பார்க்க,  "தடுப்பூசி போட்டுக்கிட்டா ஒண்ணும் ஆயிடாது சார்.  இருந்தாலும் யாருக்காவது ஏதாவது தலைசுத்தல், மயக்கம் ஏதாவது வர்ற மாதிரி இருந்தா, இங்க டாக்டருங்க இருக்கிறதுனால உடனடியாக கவனிக்க முடியும்.  அதுக்குத்தான் கொஞ்சம் வெயிட் பண்ணிப் பார்த்துட்டுப் போகச் சொல்றோம்!" என்று அக்கறையோடு சொல்லிவிட்டுச் சென்றாள்.

அரைமணி நேரம் உட்கார்ந்து கொண்டிருந்தபோது அந்த சூப்ரிண்டெண்ட் பெண்மணி வேலை செய்யும் விதத்தையே கவனித்துக் கொண்டிருந்தார் கணேசன்.

மெதுவாக எழுந்திருந்து வீட்டுக்குக் கிளம்பியபோது உள்ளே சென்று சூப்ரிண்டெண்ட் பெண்மணி எங்கே என்று தேடினார்.  தன் அறையில் உட்கார்ந்து கொண்டிருந்த அந்தப் பெண்மணிக்கு எதிரே சென்று புன்னகைத்தார்.  இவரைப் பார்த்ததும் எழுந்து நின்ற சூப்ரிண்டெண்ட்டை அமரச் சொல்லிக் கைகாட்டி விட்டு இவரும் எதிரே உட்கார்ந்தார்.

"ரொம்ப அருமையா இந்த ஆஸ்பத்திரியை நடத்துறீங்கம்மா! சுத்தமா வச்சிருக்கீங்க. நல்ல டிசிப்ளினோட நடத்துறீங்க.  இந்த மாதிரி ஒரு அர்ப்பணிப்பு உணர்வோட வேலை பாக்குற உங்களுக்கு என் வந்தனமும் பாராட்டுக்களும்!"

"எந்த இடத்திலும் ஒரு கண்டிப்பான மேற்பார்வை இருந்தால்தான் வேலை சரியாக நடக்கும்.  அதை இங்கே ரொம்ப நல்லா செய்யறீங்கம்மா! நீங்க ரொம்ப நல்லா இருக்கணும்!" கைகளை உயர்த்தி வாழ்த்திவிட்டு  எழுந்த அவர், "காலையிலிருந்து ஓடி ஓடி வேலை செய்யறீங்களே அம்மா! ஒரு டீயாவது குடிச்சீங்களா?" என்று கரிசனமாகக் கேட்டார்.

"இங்கே என்னை எல்லோரும் கடுவன் பூனை, சிடுமூஞ்சின்னுதான் சொல்வாங்க.  நீங்கதான் மொதமொறையா புரிஞ்சிக்கிட்டுப் பாராட்டுறீங்க சார்!"

அவருடைய ஆத்மார்த்தமான பாராட்டுகளால் சூப்ரிண்டெண்ட் மனம் நெகிழ்ந்து போனது, அவளுடைய வார்த்தைகளிலும், எழுந்து நின்று கைகளைக் கூப்பி அவரை வழியனுப்பிய விதத்திலும் தெரிந்தது.

"முனியம்மா!" சூப்ரிண்டெண்ட்டின் குரல் அதிகாரமாக ஒலித்தது.  "டீக்கடையில போய் நம்ப எல்லோருக்கும்  ட்ரம்ல டீ கொண்டாரச் சொல்லு.  அப்படியே பிஸ்கட்டும்!  உம்! மசமசன்னு நிக்காதே! சீக்கிரம் போ!"

தன் காதுகளையே நம்ப முடியாமல் முனியம்மா வெளியே வந்து இரைந்து, "இன்னிக்கு நம்ப அம்மா மூடு நல்லா இருக்குப் போல.  நம்ப எல்லாருக்கும் டீயும் பிஸ்கட்டும் வாங்கியாரச் சொல்லியிருக்காங்க!" என்று சொல்லிக்கொண்டே கடைக்குப் போனாள். மெதுமெதுவாக எல்லா பணியாளர்களின் முகங்களிலும் புன்னகை விரிய ஆரம்பித்ததை கவனித்த  கணேசன் முகத்திலும் ஒரு மென்முறுவல். 'நெல்லுக்கு இறைத்த நீர்…' என்று தொடங்கும் ஔவையார் பாடல் நினைவுக்கு வர புன்முறுவல் மாறா முகத்தோடு ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தார்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com