
'ஒரு கப் zen'மூலம், உலக வாழ்க்கையில் அழகு, அந்தஸ்து உட்பட, எதுவும் எவருக்கும் நிரந்தரம் இல்லை என்பதை மிக அழகாக விளக்கியிருந்தது அருமை. – ஜெயகாந்தி மகாதேவன், பாலவாக்கம்
சகோதரி ஆர்.கெஜலஷ்மி, 'பெண்களைப் புரிந்து கொள்வோம்'என்று பகிர்ந்துகொண்ட விஷயங்கள் அற்புதம். ஒரு பெண்ணின் சூழலை அழகாக சொல்லி இருந்தார். உண்மையில் ஆண்கள் யோசிக்க வேண்டும். – க.மோகனசுந்தரம், திருநெல்வேலி
'அனைத்து பிள்ளையாரையும் கண்டிப்பாகப் பார்த்துவிட வேண் டும்'என்ற ஆவலைத் தூண்டியது பலவித பிள்ளையார்கள் பற்றிய தகவல். கொரோனா முடியட்டும், 'ஏலேலோ'பாடிக்கொண்டே 'ஏலேலோ கணபதி'யைப் பார்க்க போய்விட வேண்டியதுதான். 'பிடித்துவைத்த பிள்ளையார்'கதை நல்லதொரு கருத்தை, 'நச்'சென்று வலியுறுத்திவிட்டது. பாராட்டுக்கள். – நளினி ராமசந்திரன்,கோவைபுதூர்
அட்டைப்படமாக வந்த நர்த்தனமாடும் விநாயகர் படத்தைப் பார்த்ததும் என் மனதும் நர்த்தனம் ஆடியது. இதுவரை நான் பார்த்திராத புதுமையான அட்டைப்படமாக இருந்ததால் மிகவும் ரசித்து, பல நிமிடங்கள் பார்த்தேன். – பிரகதா நவநீதன். மதுரை
'பெண்களைப் புரிந்துகொள் வோம்'என்று கூறி, 'ஆண்களே, சற்று யோசியுங்கள்'என்று ஆண்களை யோசிக்க வைத்த வாசகிக்குப் பாராட்டுக்கள். – வெ.முத்துராமகிருஷ்ணன். மதுரை
'பிடித்து வைத்த பிள்ளையார்'சிறுகதை மிகவும் அருமை. பஞ்சாபகேசன் அவர்கள் வாங்கிய விநாயகரைப் பார்த்த அந்த ஏழைச் சிறுமியின் பார்வையை கற்பனை செய்து பார்த்தபோது மனம் வலித்தது. – லக்ஷ்மி ஹேமமாலினி , சென்னை
'வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க'பக்கத்தில் வந்த ஆறு விநாயகர் பற்றிய விவரங்களைப் படித்ததும் அந்தந்த ஊர்களுக்குச் சென்று அந்த விநாயகரை நேரில் தரிசித்து, ஆசீர்வாதம் பெற்றது போன்ற ஒரு மனநிறைவு ஏற்பட்டது. – நந்தினி கிருஷ்ணன், மதுரை
'விநாயகனே… வினை தீர்ப் பவனே' அட்டைப்பட நர்த்தன விநாயகர் கொள்ளை அழகு. பக்கத்தைக்கூட புரட்டாமல் அப்படியே சிறிது நேரம் பார்த்து, அந்த அழகில் லயித்துப் போனோம். அன்பு வட்டத்தில் அனுஷா வின், 'விவேக் பற்றிய விமர்சனம்'சூப்பர். அந்த சிரிப்பு நடிகருக்கு உண்மையான அஞ்சலியாக இருந்தது. எவ்வளவு பெரிய நகைச்சுவை நடிகரை இழந்துவிட்டோம் என்று உணர வைத்தது. தேஷ்முக் குடும்பம் நூறு வருட காலமாக கணபதி கௌரி பண்டிகை கொண்டாடுவதை படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. – கே.எஸ்.கிருஷ்ணவேணி, பெருங்குடி
'நம்மளோட பிரச்னைகளுக்கான தீர்வு நாம்தான்'என சின்ன கதை மூலம் பெரிய நிதர்சனம் உணர்த்திய அனுஷாவுக்கு நன்றி.- என்.கோமதி நெல்லை
கொரோனா காலத்தில் வீட்டிலேயே பிள்ளைகள் முடங்கி இருக்கையில், அவர்களின் வாசித்தல், எழுதுதல் போன்ற பழக்க வழக்கங்கள் நின்று போகாமல், வீதி வகுப்புகள் நடத்திய கும்பகோணம் ஆசிரியர் புவனேஸ்வரிக்கு வாழ்த்துக்கள். பன்முகத்திறன், பன்முக ஆற்றல் வளர்ப்பது வகுப்பறையின் குறிக்கோள். பிள்ளைகள், ஆசிரியர்களுக்கு மனநிறைவும் ஆனந்தமும் தரும் வீடாக வீதி வகுப்புகள் இருப்பது போற்றத்தக்கது. – ஆர்.ஜானகி, சென்னை