விடுபடுவோம்!

விடுபடுவோம்!
Published on

ஒரு கப் Zen – 13

எழுத்து : லேzy

ருபத்தியொன்றாம் நூற்றாண்டில் மனிதனுக்கு survival ஒரு பொருட்டே அல்ல. உணவுக்கும் நீருக்கும் பஞ்சம் இருந்த காலமெல்லாம் மலையேறியாகி விட்டது. புயலோ, பெருமழையோ, வெள்ளமோ, எதுவாயினும் முன்கூட்டியே அறிந்து, அதற்குத் தகுந்தாற்போல பாதுகாப்பு செய்ய நேரம் நிறைய உள்ளது.

அறுபது அல்லது எழுபது ஆண்டுகளுக்கு முன் இருந்த மருத்துவ வசதிகளை விட, ஆயிரம் மடங்கு மருத்துவ வசதிகள் தற்போது உயர்ந்து விட்டது. நடுக்கடலில் ஏற்படும் Tsunamiயை கூட முன்கூட்டியே தெரிந்துகொள்கிறோம். வண்டி வாகனத்திற்கு மட்டும் அல்லாமல், மனிதனுக்கும் அவனது கைகடிகாரம் முதல் கைபை வரை GPS கருவி பொருத்தப்பட்டாகி விட்டது. அந்தக் காலத்தைப் போல யாரும் அவ்வளவு சீக்கிரம் தொலைந்துவிட முடியாது. ஊரைச் சுற்றி கேமராக்கள் உள்ளன. எல்லோருடைய கைகளிலும் செல்போன்கள் உள்ளன. எந்த நேரத்திலும், எங்கு இருப்பினும் சுலபமாக தொடர்பு கொண்டு விட முடியும் என்றாகி விட்டது.

இப்படிப்பட்ட சூழலில் மனிதனுக்குப் பெரியதாகக் கவலை ஏதும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு புலியைப் போல, யானையைப் போல, காலைப் பொழுது விடிந்தவுடன், இன்று நாம் பசியாற வேண்டும், நீருக்கும், ஆகாரத்திற்கும் பல மைல் தூரம் நடந்தாக வேண்டும் என்பது போன்ற எந்தக் கவலையும் இல்லை. காட்டு விலங்குகளை போல, கையிலோ காலிலோ அடிப்பட்டால், அங்கேயே சுருண்டு விழுந்து கிடக்கத் தேவையில்லை.

காயம் தானாக ஆறும் வரை காட்டு விலங்குகளைப் போல நகர முடியாமல், பட்டினியாய் கிடக்கத் தேவையில்லை. ஐந்து நிமிடத்திற்கெல்லாம் ஆம்புலென்சில் ஏற்றப்பட்டு, தடபுடலாக வைத்தியம் அளிக்கப்படுகிறது. நல்ல பண வசதி இருந்தால் தனியார் மருத்துவமனைகளில் ராஜ உபசாரம் நடக்கும்.

"நோய் என்று ஒன்று மட்டும் இல்லாவிட்டால், மருத்துவமனையை விட சுகமான இடம் ஏதும் இல்லை" என்று, 'தில்லானா மோகனாம்பாள்' புத்தகத்தில் கொத்தமங்கலம் சுப்பு எழுதியதுதான் ஞாபகத்திற்கு வருகிறது.

உய்த்தல் குறித்தோ, தொடர்ந்து வாழ்தல் குறித்தோ (Survival) மனிதன் கவலையே பட வேண்டாம் என்ற நிலை இந்த 21ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

Human survival on the planet is guaranteed.

அன்றாட உணவுக்காக வேட்டையாடிய காலம் போய், மரங்களிலிருந்து பழங்களைப் பறித்து உண்டு வாழ்ந்த காலம் போய், அவரவர் உணவுப் பொருட்களை தாங்களே பயிற்சி செய்து உண்ட காலம் போய், மாதம் முழுவதும், ஏன் வருடாந்திரத்திற்குத் தேவையான அரிசி, பருப்பு போன்றவற்றை வாங்கி, சேகரித்து வைத்த காலமெல்லாம் மலையேறி, தற்பொழுது உட்கார்ந்த இடத்திலேயே எதை வேண்டுமானாலும் வாங்கி உண்ணும் காலம் வந்தாகி விட்டது.

ஆனால், இப்படிப்பட்ட ஒரு சூழலில் மனிதன் தன் வாழ்க்கையில் செய்வதறியாமல் தவிக்கின்றான். வாழ்க்கைக்கு அர்த்தம் தேடுகின்றான். அவனுக்கு சிந்திக்க நிறைய நேரம் இருக்கிறது. இன்றைய மனிதன் தன் மனதிற்கு அடிமையாகி விட்டான். மனம் மனிதனை ஆட்கொண்டு விட்டது. மனம் மனிதனுக்கு முதலாளியாகி விட்டது.

உட்கார்ந்த இடத்திலிருந்தே, ஒரு கைபேசியை வைத்துக்கொண்டு எல்லா வேலைகளையும் செய்து முடிக்கும் மனிதன், Stressக்கும் Depressionக்கும் தள்ளப்படுகிறான்.

இதிலிருந்து வெளிவர முடியாமல், மனிதன் தன் கைபேசியிலேயே விழுந்து கிடக்கின்றான். வாய்விட்டு பேசுவதே குறைந்துவிட்டது.

தியானம் இந்த நிலையிலிருந்து மனிதனை வெகு சுலபமாக காப்பாற்றிவிடும். ZEN செய்ய செய்ய மனம் நம்மிடம் தோல்வியைச் சந்திக்கும். மௌனம் நம்மை சூழ சூழ, சோகம் நம்மை விட்டு விலகி, ஆனந்தம் பிறக்கும். அதை விட்டு விட்டு, மேலும் மேலும் கைபேசியிலும், Internetலும் மூழ்கி Stressலிருந்து விடுபட நினைத்தால், அது நம்மை அதள பாதாளத்திற்குத்தான் இட்டுச் செல்லும்.

நம் வாழ்வு நம் கையில்! விடுபடுவோம்.

(நிறைவுற்றது)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com