அருள்வாக்கு

அருள்வாக்கு
Published on
விநாயகர் வழிபாடு
ஜகத்குரு காஞ்சி மகா சுவாமிகள்

'தமிழ்நாட்டின் தனிப்பட்ட சிறப்பு எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோயில்கள் இருப் பதேயாகும். 'கோயில்' என்று பெயர் வைத்து விமானமும் கூரையும் போட்டுக் கட்டடம் எழுப்பவேண்டும் என்பதுகூட இல்லாமல், அரச மரத்தடிகளிலேகூட வானம் பார்க்க அமர்ந்திருக்கும் ஸ்வாமி நமது பிள்ளையார்.

தெருவுக்குத் தெரு ஒரு பிள்ளையார் கோயில், நதிக்கரைகளிலெல்லாம் பிள்ளையார், மரத்தடிகளில் பிள்ளையார் என்றிப்படி இந்தத் தமிழ் தேசம் முழுவதும் அவர் வேறெந்த ஸ்வாமிக்கும் இல்லாத அளவுக்கு இடம் கொண்டு அருள்பாலித்து வருகிறார். அவரைப் 'பிள்ளையார்' என்றே அன்போடு கூறுவது நம் தமிழ்நாட்டுக்கே உரிய வழக்கம்.

சர்வலோக மாதா பிதாக்களாகிய பார்வதி பரமேசுவரர்களின் ஜேஷ்ட புத்திரர் அவர். 'பிள்ளை' என்றால் அவரைத்தான் முதலில் சொல்லவேண்டும். வெறுமே 'பிள்ளை' என்று சொல்லக்கூடாது என்பதால் மரியாதையாகப் 'பிள்ளையார்' என்று சொல்வது தமிழ்நாட்டுச் சிறப்பு.

'குமாரன்' என்றால் 'பிள்ளை' என்றே அர்த்தம். பாரததேசம் முழுவதிலும் குமாரன், குமாரஸ்வாமி என்றால் பார்வதி பரமேசுவரர் களின் இளைய பிள்ளையாகிய சுப்பிரமணியரையே குறிப்பிடும். தமிழிலும் 'குமரக் கடவுள்' என்கிறோம். ஆனால், அவரைக் 'குமரனார்' என்பதில்லை; 'குமரன்' என்றுதான் சொல்வார்கள். மூத்த பிள்ளைக்கே மரியாதை தோன்றப் 'பிள்ளையார்' என்று பெயர் தந்திருக்கிறோம்.

முதல் பிள்ளை இவர்; குழந்தை ஸ்வாமி. ஆனாலும் இவரே எல்லாவற்றுக்கும் ஆதியில் இருந்தவர். பிரணவம்தான் எல்லாவற்றுக்கும் முதல். பிரணவத்திலிருந்துதான் சகல பிரபஞ்சமும் ஜீவராசிகளும் தோன்றின. அந்தப் பிரணவத்தின் ஸ்வரூபமே பிள்ளையார். அவரது ஆனைமுகம், வளைந்த தும்பிக்கை இவற்றைச் சேர்த்துப் பார்த்தால் பிரணவத்தின் வடிவமாகவே தோன்றும்.

குழந்தையாக இருந்துகொண்டே ஆதிமுதலின் தோற்றமாக இருக்கிற பிள்ளையார் குழந்தை போல் தோன்றினாலும், பக்தர்களை ஒரேயடியாகக் கைதூக்கி உயர்த்திவிடுவதிலும் முதல்வராக இருக்கிறார். ஔவைப் பாட்டி ஒருத்தியின் உதாரணமே போதும். ஔவையார் பெரிய 'கணபதி உபாஸகி'. பிரணவ ஸ்வரூபியான விநாயகரைப் புருவமத்தியில் தியானித்துக்கொண்டு, ஔவையார் யோக சாஸ்திரம் முழுவதையும் அடக்கியதான 'விநாயகர் அகவலை'ப் பாடி யிருக்கிறாள். அதைப் பாராயணம் செய்தால் பரமஞானம் உண்டாகும்.

இந்த ஔவையாரைப் பற்றி ஒரு கதை உண்டு. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளும் சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாசத்துக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் ஔவையாரையும் உடன் அழைத்துப் போக எண்ணினார்கள். அப்போது ஔவை விக்னேஸ்வரருக்குப் பூஜை பண்ணிக் கொண்டிருந்தாள். சீக்கிரம் பூஜையை முடித்துத் தங்களுடன் கைலாசத்துக்கு வருமாறு சுந்தரமூர்த்தியும் சேரமானும் அவளை அவசரப்படுத்தி அழைத்தார்கள். அவளோ, "நீங்கள் போகிறபடி போங்கள். உங்களுக்காக நான் என் பூஜையை வேகப்படுத்த மாட்டேன். விநாயக பூஜையே எனக்குக் கைலாசம்" என்று சொல்லிவிட்டாள்.

அவர்கள் அப்படியே கிளம்பிவிட்டார்கள். ஔவை சாங்கோபாங்கமாகப் பூஜை செய்து முடித்தாள். முடிவில் பிள்ளையார் பிரசன்னமாகி அவளை அப்படியே தம் துதிக்கையால் தூக்கி ஒரே வீச்சில் கைலாசத்தில் கொண்டு சேர்த்துவிட்டார்! அவளுக்குப் பிற்பாடுதான் சுந்தரமூர்த்தியும் சேரமான் பெருமாளும் கைலாசத்தை அடைந்தார்கள். அங்கே சேரமான் பெருமாள் திருக்கைலாயஞான உலாவைப் பாடினார். இதை அருணகிரிநாதர் திருப்புகழில்,

"ஆதரம் பயில் ஆரூரர் தோழமை

சேர்தல் கொண்டவரோடே முனாளினில்

ஆடல் வெம்பரி மீதேறி மா கயிலையிலேகி

ஆதி அந்த உலா ஆசு பாடிய சேரர்"

என்பதில் சொல்லாமல் சொல்கிறார். "அப்படிப்பட்ட சேரர் ஆண்ட கொங்கு தேசத்தில் உள்ள பழனியில் இருக்கிற பெருமாளே" என்று பழனியாண்டவனைப் பாடுகிறார். சுந்தரரும்,சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாசம் சேர்ந்ததற்கு இப்படி குமாரஸ்வாமியின் சம்பந்தத்தை உண்டாக்குகிறார். மூத்த குமாரரான பிள்ளையாருக்கோ ஏற்கெனவே அந்தச் சம்பவத்தில் சம்பந்தம் இருக்கிறது. அந்த இரண்டு பேருக்கும் முன்னதாக, ஒரு சொடக்குப் போடுகிற நாழிகைக்குள் அவர் ஔவைப் பாட்டியைக் கைலாசத்தில் சேர்த்துவிட்டார். பெரிய அனுக்கிரகத்தை அநாயசமாகச் செய்கிற ஸ்வாமி விக்னேஸ்வரர்.

பிள்ளையாருக்கு எதிரே நின்று தோப்புக்கரணம் போடுகிறோமே, அதை நமக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தவர் மஹாவிஷ்ணுதான் என்று ஒரு கதை இருக்கிறது. ஒரு சமயம் மகா விஷ்ணுவினுடைய சக்கரத்தை அவரது மருமகனான பிள்ளையார் விளையாட்டாகப் பிடுங்கிக் கொண்டு தம் வாயில் போட்டுக்கொண்டு விட்டாராம். பிள்ளையாரிடமிருந்து திரும்பப் பிடுங்குவது முடியாது. அவர் மிகவும் பலம் உடையவர். அதட்டி மிரட்டி வாங்கவும் முடியாது. ஆனால், அவரைச் சிரிக்க வைத்துச் சந்தோஷத்தில் அவர் வாயிலிருந்து சக்கரம் கீழே விழுந்தால் எடுத்துக்கொண்டு விடலாம் என்று மஹாவிஷ்ணுவுக்குத் தோன்றியதாம். உடனே நான்கு கைகளாலும் காதுகளைப் பிடித்துக்கொண்டு ஆடினாராம். விநாயகர் விழுந்து விழுந்து சிரித்தார். சக்கரம் கீழே விழுந்தது. விஷ்ணு எடுத்துக்கொண்டு விட்டார்.

'தோர்பி: கர்ணம்' என்பதே தோப்புக்கரணம் என்று மாறியது. 'தோர்பி' என்றால் 'கைகளினால்' என்று அர்த்தம். 'கர்ணம்' என்றால் காது. 'தோர்பி கர்ணம்' என்றால் கைகளால் காதைப் பிடித்துக்கொள்வது.

விக்னேஸ்வரருடைய அனுக்கிரகம் இருந்தால்தான் லோகத்தில் எந்தக் காரியமும் தடையின்றி நடக்கும். தடைகளை நீக்கிப் பூரண அனுக்கிரகம் செய்கிற அழகான குழந்தைத் தெய்வம் பிள்ளையார். அவரைப் பிரார்த்தித்து, பூஜை செய்து, நாம் விக்கினங்கள் இன்றி நல்வாழ்வு வாழ்வோமாக.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com