ஆச்சரியத்தின் உச்சமாக குறுக்குத்துறை முருகன் கோயில்!

ஆச்சரியத்தின் உச்சமாக குறுக்குத்துறை முருகன் கோயில்!
Published on

ஆலயம் கண்டேன்

ஸ்வாமி

தமிழகத்தில் எண்ணிலடங்கா கோயில்களில் சொல்லித் தீராத பலப்பல அதிசயங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் ஆண்டுக்கு ஒரு முறை நீரில் மூழ்கி காணாமல் போகும் அதிசய முருகன் திருக்கோயில் குறுக்குத்துறையில் அமைந்துள்ளது.

இத்தலத்தில் ஆண்டுக்கு ஒருமுறை ஏற்படும் வெள்ளத்தை எதிர்த்து பல நூறு ஆண்டுகளாக இந்தக் கோயில் எந்தவித சேதமும் இன்றி நிலைத்து நிற்பதன் அதிசயத்தை ஆராய்ச்சியாளர் களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

நெல்லை மாவட்டம், பாபநாசம் தொடங்கி தூத்துக்குடி பகுதியில் உள்ள துணைக்காயம் எனும் இடம்வரை பயணிக்கிறது தாமிரபரணி ஆறு. இந்த ஆற்றுக்கு நடுவே இந்த முருகன் கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் உள்ள குறுக்குத்துறை எனும் பகுதியில் இந்த முருகன் அமைக்கப்பட்டதால் இந்தக் கோயிலும், 'குறுக்குத்துறை முருகன் கோயில்' என்று
பக்தர்களால் அழைக்கப்படுகிறது. ஆற்றுக்கு நடுவே இந்தக் கோயில் அமைந்துள்ளதால் எப்பேர்ப்பட்ட வெள்ளம் வந்தாலும் சேதங்கள் ஏற்படாத வண்ணம் தெள்ளத் தெளிவான திட்டமிடலுடன் அந்தக்காலத்தில் கட்டப்பட்டதுள்ளது அதிசயம்.

இந்தக் கோயிலின் பிரதான தெய்வமான முருகப்பெருமான் இங்கு சுயம்புவாகத் தோன்றியதால்தான் அவர் தோன்றிய இடத்திலேயே இந்தக் கோயில் ஆற்றின் நடுவே கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

வெள்ளம் ஏற்படும்போதெல்லாம் இந்தக் கோயில் நீரால் மூழ்குவது வாடிக்கையான விஷயம். வெள்ளப்பெருக்கு சமயங்களில் சுமார் 40,000 கன அடி தண்ணீர் ஆற்றில் உருண்டோடுகிறது. ஆகவே, அந்த வெள்ள சமயங்களில் உத்ஸவர் சிலை மற்றும் உண்டியல் மட்டும் கரையிலிருக்கும் மேல் கோயிலுக்குக் கொண்டு வந்து வைக்கப்படுகிறது.

மூலவர் அத்தனை வெள்ளத்திலும் அங்கேயேதான் இருப்பார். வெள்ளம் வடிந்தபின் கோயிலை சுத்தம் செய்த பிறகு உத்ஸவர் சிலையைக் கொண்டு வந்து வைப்பார்கள். எப்பேர்ப்பட்ட வெள்ளத்தையும் சமாளிக்கக் காரணமாக இருப்பது இந்த கோயிலின் வடிவமைப்புதான்.

படகின் முன்பகுதி நீரை கிழித்துச் செல்லும் வகையில் கூர்மையாக இருக்கும். அதைப்போல, இந்த கோயிலின் முன்பகுதி படகு போன்ற வடிவமைப்புடன் கூர்மையான முனையைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதால் வெள்ளம் வருகையில் இந்த முனை பொங்கி வரும் நீரை கிழித்தபடி நிலையாக நிற்கிறது.

எத்தகைய வெள்ளத்தையும் தாங்கும் இந்தக் கோயிலும் அதன் மூலவரும் ஆச்சர்யத்தின் உச்சம்தான். நவீன பொறியாளர்கள் கூட இந்த கட்டுமானத்தைக் கண்டு பிரம்மித்துப் போவதாகக் கூறுகின்றனர்.

இந்த முருகனிடம் பக்தியோடு மனமுருக வேண்டி வந்தால், வாழ்வில் எத்தகைய இடர்களையும் சமாளித்து முன்னேறும் பலத்தையும் அதிர்ஷ்டத்தையும் வாரி வழங்குவதாக பக்தர்கள் சொல்கின்றனர்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com