உனக்கும் கீழே உள்ளவர் கோடி

Published on

தனுஜா
படம்: தமிழ்

நாம் பலமுறை சென்று வரும் ரயில் பயணங்களின் பின்னணியில் இவ்வளவு பொறியியல் இருப்பதை சிறிதும் சிந்தித்திருக்க மாட்டோம். ஒரு கிலோ மீட்டர் தண்டவாளத்தில் சுமார் 154 ரயில் 'பார்'களும் சுமார் 1540 இணைக்கும் மர அல்லது கான்கிரீட் பலகைகளும் உள்ளன. இந்த அமைப்பில் பல்லாயிரக் கணக்கான நட்டு, ஆணி, ஃபிஷ் ப்ளேட் என்ற பிணைப்புகள் உள்ளன. சதிகாரர்கள் ஃபிஷ் ப்ளேட்டுகளை கழற்றி ரயிலைக் கவிழ்த்து கொடூர வேடிக்கை பார்த்த நாட்களும் உண்டு. பராமரித்து நல்ல நிலையில் வைத்திருக்கும் தொழிலில் தான் சம்பந்தம் தன்னை சம்பந்தப் படுத்தியிருந்தான். ஜோலார்பேட்டை அருகாமையில் இருக்கும் 16 தண்டவாளங்களை சுமார் 100 கிலோமீட்டர் வரை பராமரிக்கும் பணி அவன் குழுவிற்கு. இவர்களுக்கென்றே தண்டவாளப் பராமரிப்பு தனி ரயில் உண்டு. சில நாட்கள் வேலை முடிந்து அதிலேயே ஓய்வு எடுப்பர். ஏதோ கடனே என்றில்லாமல் கடமை உணர்வோடு செயல்படுவதில் சம்பந்தம் முதலிடம். நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த ரயில்பாதை அமைப்பு ஆண்டு தோறும் பராமரிக்கப் பட்டாலும் அன்றைய தொழில்நுட்பத்தையும் வேலைப்பாட்டையும் நினைத்தால் பிரமிப்புதான் வரும். பல கோடிப் பிரயாணிகள் பத்திரமாகச் சென்று வருவதற்கான நன்றிக்கு உரித்தானவர்கள் ஏராளம்.

சம்பந்தம் மனைவி சரசா பள்ளிப் படிப்புதான் முடித்திருக்கிறாள். பெண் நிலாவையும் கவனிக்க வேண்டியதால் இது நாள் வரை வேலைக்குச் செல்லவில்லை. ஆகையால் பணத் தட்டுப்பாடு அவ்வப்போது வந்து போனது. 'இதற்கு மேலும் செலவு செய்தால் ரயில் பயணிகளிடம் ஜேப்படி தான் செய்ய வேண்டும்' என்று வேடிக்கையாக சம்பந்தம் சொல்வான். நிலா கல்லூரிக்குச் சென்றபின் ஒரு அரசு பள்ளியில் தமிழ் ஆசிரியையாக தற்காலிகப் பணியில் சேர்ந்தாள் சரசா. நாளடைவில் இசைப் பாடங்களும் நடத்த ஆரம்பித்தாள். ஆர்வமுள்ள மாணவிகள் இன்னும் இசை கற்றுக் கொள்வதற்காக வீட்டிற்கும் வர ஆரம்பித்தனர். அதிகப் பணம் கிடைக்காவிட்டாலும் அவர்கள் உற்சாகத்தை முன்னிட்டு தொடர்ந்து வகுப்புகள் வீட்டிலும் நடந்தன.

வாரத்தில் இரண்டு மூன்று முறை சம்பந்தம் வீட்டிற்கு வருவான். சிறிது நாட்களாக மனைவியின் பள்ளிச் சம்பளமும் சேர்ந்ததால் கொஞ்சம் பிரச்சினை குறைந்த மாதிரி இருந்தது. சரசாவுக்கும் நிலா வீட்டை விட்டுப் படிக்கச் சென்ற பிரிவின் வருத்தம் பள்ளிப் பணியில் சற்று குறைந்தது. 'ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க?' என்று உணர்ந்து கேட்டாள் சரசா. 'ஒண்ணுமில்ல மேலாளர் சத்தம் போட்டார். ஒரு வாரத்தில முடிக்க வேண்டிய வேலைக்கு நாங்க இரண்டு வாரம் எடுத்துக்கறம்னு, நாங்க படற கஷ்டம் அவருக்குப் புரியல. அவசரமாக வேலை செய்து ஆபத்த வரவழைக்கவா என்றால் அதுவும் புரியல'. மாணவ மாணவிகளுக்கு பரீட்சை நெருங்கி வந்துவிட்டது. அதற்கான கட்டணம் குறைவுதான் என்றாலும் கட்ட வேண்டுமே?

அரை இறுதிப் பரீட்சையில் 100 க்கு 96 வாங்கிய ஒரு பிரகாசக் கண்கள் கொண்ட பெண் அழகுற இரட்டைப் பின்னல் சூடி, சரசாவிடம் தன் தாய் தனிநபராக வீட்டு வேலை செய்துதான் படிப்பை நடத்துகிறாள் ஆனால் பரீட்சைக் கட்டணம், சீருடை போன்றவற்றிற்கு வசதியில்லை என்றாள். மேலும் இதன் காரணமாக அடுத்த வருடம் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குச் செல்லலாம் என்று வீட்டில் பேச்சு நிலவுவதாகச் சொன்னாள். உடனே தன் வசம் இருந்த பணத்தை எடுத்துக் கொடுத்தாள் சரசா. விசாரித்ததில் இருபதுக்கு மேற்பட்ட மாணவ மாணவியருக்கும் இதே கதி என்று தெரிந்தது. அத்தனை பேருக்கும் உதவ சரசாவிடம் பணமுடக்கம் இல்லை. மறு நாள் சம்பந்தம் வந்தபோது இதைச் சொன்னாள் சரசா.

'என்ன செய்யலாம்னு சொல்லு' என்று சம்பந்தம் கேட்டதற்கு, 'இவங்களுக்கு உதவி செய்யணும்னு என் மனசு சொல்லுது, தயவு செய்து ஏதாவது 'லோன்' போட்டு பணம் தெரட்டுங்க' என்று கெஞ்சினாள் சரசா. எல்லா கடன் சலுகைகளையும் முழுவதும் எடுத்துக் கொண்டது அவளுக்கு எப்படி தெரியும்? 'சரி பார்க்கறேன்' என்று சொல்லிவிட்டுச் சென்றான் சம்பந்தம். பரீட்சைப் பணம் கட்ட கடைசி தேதி வந்தது.

'இந்த கவர்ல கொஞ்சம் பணம் இருக்கு. இத வச்சு என்ன பண்ண முடியும்னு பாரு' என்று கொடுத்தான் சம்பந்தம். அளவில்லாத மகிழ்ச்சி சரசாவுக்கு. 'அது என்ன கையில காயக் கட்டு?' என்று அவள் கேட்டதற்கு 'பெரிசா ஒண்ணுமில்ல. முதல்ல நீ போய் பணத்தக் குடுத்துட்டு வா. சாய்ந்தரம் சொல்றேன்' என்று சரசாவை அனுப்பி வைத்தான் சம்பந்தம். இருபது மாணவ மாணவிகளுக்குப் பரீட்சைப் பணம் கட்ட முடிந்தது தலைமை ஆசிரியரும் ஆனந்தம் அடையச் செய்தது. அவரும் இந்தப் பணியில் சேர்ந்தார். ஆனால் மனதில் படபடப்புடன் இருந்தாள் சரசா. இந்தப் பணம் நல்ல வழியில் வந்ததா? கைக் காயத்தின் மூலக் காரணம் என்னவாக இருக்கும் என்ற நினைப்புதான்.

'நீ பயப்படுறா மாதிரி எல்லாம் எதுவும் நடக்கல. ஜேப்படிக்கு இன்னும் நேரம் வரல. வேறு வழியில்லாம சண்டை போட்ட துரியோதன மேலாளர் கிட்டயே போய் கைகட்டி மன்னிப்பு கேட்டு அவர் சொன்னத எல்லாம் செய்யறேன் கொஞ்சம் கைமாத்து கொடுங்கன்னு காரணத்தச் சொல்லி கேட்டு வாங்கினேன். பத்தாதற்கு மூன்று நாள் ஆறு மணிநேரம் 'ஓட்டி' செஞ்சு இன்னும் கொஞசம் கிடச்சது. நேத்து நடு ராத்திரில வேலை செய்யறபோது கையில சுத்தி பட்டதில காயமும் ரத்தமும். இரவு நானே ஒரு கட்டுப் போட்டுட்டு வந்தேன். இப்பொ ஆஸ்பத்திரி கட்டு' என்றவன், மேலும், 'எனக்கும் என் தம்பிக்கும் இப்படி யாரும் உதவ வரலன்னு எங்க அம்மாவுக்கு ரொம்ப வருத்தம். இந்த குழந்தைகளோட அம்மாவ நினைச்சுப் பார்த்தேன். இது கூட நான் செய்யலன்னா?….' சம்பந்தத்தின் குரலுக்குத் தெம்பில்லை.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com