எடைக் கட்டுப்பாடு!

எடைக் கட்டுப்பாடு!
Published on
– இந்திராணி தங்கவேல், மாடம்பாக்கம்

உடல் எடை பற்றி ஆராய்ச்சி செய்தவர்கள், ஓர் அபூர்வமான உண்மையை கண்டுபிடித்துள்ளனர். அதாவது, காலையில் லேட்டாக எழுந்து கண்ணைக் கூசும் சூரிய வெளிச்சத்தைப் பார்ப்பவர்களை விட, அதிகாலையில் இருள் விலகும் முன்பாகவே எழுந்து விடியலுக்குப் பழகிவிடுபவர்கள் எடையை கச்சிதமாகப் பராமரிக்கிறார்களாம். இந்த வெளிச்சத்துக்கும் உடல் எடைக்கும் நேரடி தொடர்பு என்ன என்பது இதுவரை தெரிய வில்லை. ஆனால், அதிகாலையில் துயிலெழுந்து கோலம் போட்டு, நடை பயின்றால் நல்லதுதானே!

இரவு தூங்கப் போவதற்கு முன்பாக கம்ப்யூட்டர், செல்போன், டேப்லெட் என நீல ஒளியை உமிழும் ஒளிர் திரைகளை நீண்ட நேரம் பார்க்கக் கூடாது. இப்படிப் பார்த்துவிட்டுச் சென்றால், அது தூக்கத்தை பாதிக்கிறது. `இத்தனை மணிக்குத் தூங்க வேண்டும்… இந்த நேரத்தில் விழிக்க வேண்டும்' என்ற நமது தூக்க சுழற்சியைக் கட்டுப்படுத்துவது மெலட்டோனின் ஹார்மோன். ஒளிர் திரைகளைப் பார்ப்பது இந்த ஹார்மோன் உற்பத்தியை பாதிக்கிறது. அது தூக்கத்தைக் கெடுக்கிறது. அமைதியான மனநிலையை ஏற்படுத்தும் நல்ல நூல்களைப் படிப்பதும், மனதை ரிலாக்ஸ் செய்யும் இனிமையான மெல்லிசை கேட்பதும்தான் இரவில் தூங்கப் போகும் முன் செய்யவேண்டியவை. இப்படி ரிலாக்ஸாக இருக்கும்போது நம் எடை கட்டுக்குள் இருக்கும்.

உடற்பயிற்சியும், உடலுழைப்புமே எடையை சரியாக வைத்துக்கொள்வதில் முக்கியமான பங்கு வகிக்கின்றன. உடலின் வளர்சிதை மாற்றத்தை இவையே ஊக்குவிக்கின்றன. உடலின் கலோரிகள் எரிக்கப்படுவதற்கும் இவை துணைபுரிகின்றன. காலை நேர பரபரப்பில், 'எதற்குமே நேரமில்லை' என அலுத்துக்கொள்பவர்கள், மாலையில் வாக்கிங் போகலாம். தினமும் 15 நிமிடங்கள் நடைப்பயிற்சி கூட நல்ல மாற்றங்களைத் தரும். அதைத் தவிர்த்து, டி.வி முன் உட்கார்ந்திருப்பது ஆபத்தை வரவழைக்கும்.

தூங்கும் நேரம் என்பது வீணடிக்கப்படும் நேரம் அல்ல; அடுத்த நாள் புத்துணர்வுடன் நாம் இயங்க எடுத்துக்கொள்ளும் ஓய்வு. நீண்ட நாட்களுக்கு இந்தத் தூக்க அளவைக் குறைத்தால், அது உடல் உபாதைகளை ஏற்படுத்தும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நல்ல தூக்கம் அவசியம். அது, உடல் எடையை சமமாக வைப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

எப்பொழுதுமே இரவில் அதிகம் சாப்பிடக் கூடாது. அரை வயிறு மட்டுமே நிரம்பும் அளவுக்கு சாப்பிட வேண்டும். எடையை சரியாக பராமரிப்பவர்கள் இன்னும் கூடுதல் விதிகளைக் கடைபிடிக்க வேண்டும். ஆனால், இரவு நேரத்தில் பசிக்கிறது என டைனிங் டேபிளில் இருக்கும் எதையாவது சாப்பிடுவது, ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து எதையாவது கொறிப்பது கொலஸ்ட்ரால் மற்றும் இன்சுலின் அளவுகளைத் தாறுமாறாக அதிகரிக்கச் செய்துவிடும். உடல் எவ்வளவு கலோரிகளை எரிக்கிறதோ, அதைவிட குறைவாக நாம் சாப்பிடுவது உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

தூங்கச் செல்வதற்கு ஆறு மணி நேரம் முன்பிருந்தே காபி குடிப்பதை நிறுத்தி விட வேண்டும். காபியில் இருக்கும் குளோரோஜெனிக் அமிலம் உடல் எடை பெருக மறைமுக காரணமாக இருக்கிறது. ஆதலால், மாலையில் காப்பி குடிக்கும் உணர்வு எழும்போது மூலிகை டீ குடித்து அதை சமாளிக்கலாம். இதனால் உடல் பருமன் கட்டுக்குள் இருக்கும்.

உடல் எடைக்கும் வீட்டின் வண்ணத்துக்கும் நேரடித் தொடர்பு உண்டு. ஆச்சரியம், ஆனால் உண்மை! நீல நிறம் சார்ந்த வண்ணங்களில் அறை இருந்தால் நல்லது. அது மனதை லேசாக்கும்; தூக்கத்தை இயல்பாக வரவழைக்கும்; பசி உணர்வையும் இந்த வண்ணம் குறைக்கும். சிவப்பு மற்றும் ஆரஞ்சு சார்ந்த வண்ணங்கள் பசியைத் தூண்டி, நிறைய சாப்பிடத் தூண்டும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். சாப்பிடும் அறையின் வண்ணம் தட்டின் வண்ணம் எல்லாமே நீல நிறமாக இருந்தால், அது உடல் பருமனை சமநிலையில் வைக்க உதவுமாம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com