
வாசகர் ஜமாய்க்கிறாங்க
பெண்கள் பிள்ளை வரம் வேண்டியும், திருமணம் கைகூடவும், தாலி பாக்கியம் நிலைக்கவும் சிந்து சமவெளி நாகரிகக் காலத்திற்கு முற்பட்டு, பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து கடைபிடித்து வருவது கன்னிமார் வழிபாடு. கன்னிமார் வழிபட்டால் ஏற்படும் நன்மைகளை அறிவோம்.
இவர்களை சப்த மாதாக்கள், சப்த கன்னியர், கன்னிமார், ஏழு அன்னையர் எனவும் அழைப்பர். இவர்களது சிலைகள் ஆற்றங்கரை, கண்மாய்க்கரை, ஓடைக்கரை, ஏரிக்கரைகளிலும், சிவாலயங்களிலும் இருப்பதைக் காணலாம்.
ஆதிபராசக்தி தனது அம்சங்களாக ஏழு விதமாகத் தனது உடலைப் பிரித்து, மக்களுக்கு அருள்பாலித்துக் காத்திடவே, ஏழு சக்தித் திருமேனி வடிவம் கொண்டாள். இனி, ஏழு மாதாக்கள் அருளும் சிறப்புப் பலன்களை அறிவோம்.
1. ஸ்ரீ பிராம்மி (மூலாதாரம்) : தலை – மூளை, சிந்தனை, படிப்பு, பார்த்தல், உணர்தல், மகப்பேறு அருளல் போன்றவற்றை அருள்பவள். பிரம்மனின் அம்சம்.
படையல் : சர்க்கரைப்பாகு புட்டு
மந்திரம் :
ஓம் ஹம்ஸத் வஜாயை வித்மஹே
கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி
தந்நோ ப்ராம்மி ப்ரசோதயாத்!
2. ஸ்ரீ மாகேஸ்வரி (சுவாதிட்டானம்) : தோள் – உடல் நலம், நிம்மதி, அமைதி, சுமத்தல், இயக்குதல், இணைத்தல் வேலைகள் சிறந்திட உதவுபவள். மங்களத்தை அளிப்பது இவளே. மகேசுவரனின் அம்சம்.
படையல் : சுண்டல், நீர்மோர்.
மந்திரம் :
ஓம் வ்ருஷத் வஜாயை வித்மஹே:
ம்ருக ஹஸ்தாயை தீமஹி:
தந்நோ, ரௌத்ரீ ப்ரசோதயாத்!
3. ஸ்ரீ கௌமாரி (மணிபூரகம்) : கால் – கடக்க, ஓட, நடக்க உதவுபவள். தைரியம், ஞானம், வீரம், இளமையும் வழங்குபவள். முருகனின் அம்சம் இவள்.
படையல் : எலுமிச்சை சாதம்.
மந்திரம் :
ஓம் சிகித் வஜாயை வித்மஹே
சக்தி ஹஸ்தாயை தீமஹி:
தந்நோ, கௌமாரீ ப்ரசோதயாத்!
4. ஸ்ரீ வைஷ்ணவி (அனாகதம்) : கை – பாதுகாப்பு வேலை, திருப்தி, சந்தோஷம், செல்வம் அளித்து, வளமான வாழ்வளிப்பது. நாராயணின் அம்சம் இவள்.
படையல் : பாயச வகைகள்.
மந்திரம் :
ஓம் தார்ஷ்யத் வஜாயை வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹி:
தந்நோ, வைஷ்ணவி ப்ரசோதயாத்!
5. ஸ்ரீ இந்திராணி (ஆக்ஞை) : ஸ்தனம் – உயிர்ப்பிக்கவும், உயிர் தோன்றவும், உயிர் வளரவும், இன்புறவும், வாழ்வு பேணவும், ஆயுள் பலம் பெறவும், சுகம் கிடைக்க, சொத்து சேர, அழகு பெற உதவுபவள். இந்திரனின் அம்சம் இவள்.
படையல் : பலாச்சுளை.
மந்திரம் :
ஓம் சீயாமவர்ணாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தந்நோ ஐந்திரீ ப்ரசோதயாத்!
6.ஸ்ரீ வராகி (விசுத்தி) : பிருஷ்டம் – ஓய்வு பெற்றிடவும், பயமின்மை, உடலைத் தாங்கவும், கழிவு நீக்கவும், ஓய்வு தரவும், எதிரிகளை அழிக்கவும், பாதுகாப்பை வழங்கிடவும் உதவுபவள். இவள் வராக மூர்த்தியின் அம்சம்.
படையல் : கிழங்கு வகைகள், தயிர் சாதம், முறுக்கு, எள்ளுருண்டை.
மந்திரம் :
ஓம் சியாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தந்நோ வராஹி ப்ரசோதயாத்!
7. ஸ்ரீ சாமுண்டி (கபால வாயில்) : நெற்றி – நோயற்ற வாழ்வு, வாழ்வில் வெற்றி, தீயவை அழிக்கவும், நிர்மூலம் ஆக்கவும், மோட்சம் கொடுக்கவும், எதையும் உருவாக்கவும் உதவுபவள். கபால பைரவரின் அம்சம் இவள்.
படையல் : அவல் சாதங்கள்.
மந்திரம் :
ஓம் க்ருஷ்ண வர்ணாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி:
தந்நோ சாமுண்டாம் ப்ரசோதயாத்!
மேற்கண்ட சப்த மாதர் வழிபாட்டினால் வற்றாத வளம், குறையாத செல்வம், ஞானம், யோகம், இறைவனை அடையும் வழி ஆகிய அனைத்தும் உடனடியாகக் கிடைக்கும். நம்மை, ஊரை, உலகை, பிரபஞ்ச பரவெளியை நமக்குக் காட்டி உணர்த்துபவர்கள். ஆலய வழிபாடு தோன்றுவதற்கு முன்பே, வயல்வெளி வேளாண்மை தொழிலில் ஈடுபட்ட நமது முன்னோர்கள் இந்த இயற்கை சக்திகளை தெய்வங்களாக வழிபட்டு வந்துள்ளனர். இவர்களே உடலில் ஏழு சக்கர சக்திகளாகவும் உள்ளனர்.
நவராத்திரியில் சப்த மாதர் வழிபாடு :
இறையருளை படிப்படியாகப் பெறவும், வினைகளை அறுக்கவும், புரட்டாசி மாத மகாளய அமாவாசைக்குப் பிறகு வரும் பிரதமை திதி முதல் தசமி திதி முடிய உள்ள பத்து நாட்களான நவராத்திரி விழாவில் ஏழு நாட்கள் இவர்கள் வழிபாட்டுக்கு உரியதாகும்.
பெண்களுக்குரிய வழிபாடே சப்த மாதர்களை வணங்குவதாகும். சக்தியே மூலமாகவும், யோகமாகவும், போகமாகவும், வீரமாகவும் திகழ்கிறது. மேலும், இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என எங்கும் நிறைந்து இருக்கிறாள். எனவே, ஏழு வித அம்சங்களையும், ஆற்றல்களையும், வரங்களையும், வாகனங்களையும் கொண்டு கலி யுகத்தில் பெண்களுக்கு உதவும் வகையில் எங்கும் நீக்கமற நிறைந்து, எளிய வடிவில் காட்சி தந்து அருள்பாலிக்கிறாள். பொருளும் வளமும் கொடுத்து அருளும் இவர்களை அனைவரும் வழிபட்டு நல்லருள் பெறுவோம்.
ஆனந்தவள்ளி அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி அன்னை ஆதிபராசக்தியின் உடலிலிருந்து வெளிப்பட்ட இந்த ஏழு அம்ச சப்த மாதாக்களையும் வழிபட்டு தியானம் செய்பவர்களுக்கு, அவள் சரித்திரத்தை சொல்பவருக்கு, படிப்பவர்க்கு, கேட்டவர்களுக்கு, பரப்புபவர்களுக்கு, எழுதுபவர்களுக்கு ஒருநாளும் தீமை அணுகாது, தோல்வி கிட்டாது, நோய்நொடி அணுகாது, ஆபத்து வராது, விபத்து நேராது, வறுமை வாராது, பகை பெருகாது, செல்வம் குறையாது, மறுமாசு கிட்டாது, மனம் நோகாது, அல்லல் நேராது, நீர், நெருப்பு தீது ஏற்படாது, திருடு போகாது, கோரக் கலி காலத்தின் கொரோனா போன்ற கொடுமை நோய்கள் துன்புறுத்தாது.