சொக்கேசன் மண மாட்சி!

சொக்கேசன் மண மாட்சி!
Published on

– பி.என்.பரசுராமன்

துரை என்றவுடன் உடனே நினைவுக்கு வருவது அன்னை மீனாக்ஷிதான்.
அதிலும் சித்திரை மாதமெனில், மீனாக்ஷி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் அனைவர் மனதிலும் நிழலாடும். தெய்வத் திருமணம் நடந்த – நடக்கும் அற்புதத் திருத்தலம். சங்கம் வைத்து மொழி வளர்த்த ஒரே தலம்; தெய்வம் தன் திருவடிகளைப் பூமியில் பதித்து அறுபத்து நான்கு திருவிளையாடல்களை நிகழ்த்திய திருத்தலம். இவ்வாறு பற்பல பெருமைகளைக் கொண்ட திருத்தலம் மதுரை.

'மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று, யானை கட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரை' எனப் புகழப்படும் மதுரையில், நடைபெறும்
மீனாக்ஷி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தைச் சுருக்கமாக தரிசிப்போமா!

துரை மன்னர் மலயத்துவசன்; அவர் மனைவி காஞ்சனமாலை. மகப்பேறுக்காக-குழந்தைச் செல்வத்திற்காக, 'புத்திர காமேஷ்டி' யாகம் செய்தார்கள். யாகத்தின் பலனாக யாகக் குண்ட அக்னியில் இருந்து, மூன்று வயதுடைய குழந்தையாக, மூன்று தனங்களுடன் அம்பிகை வெளிப்பட்டார். வெளிப்பட்ட அம்பிகையை, இப்படி நேர்முக ஒலிபரப்பாக வர்ணிக்கிறார் பரஞ்சோதி முனிவர்.

'தலையில் சுடிகையும் கொண்டையும் அதில் கட்டிய முத்து மாலையும்; வாயின் அமுதம் மார்பின் வழியே வழிய; முத்துமாலை மார்பிலே ஒளிவிட; செம்பவள மாலையும்; இடையிலே சிறிய துகிலும் – ஆடையும்; அதன் மேல் சிறிய மணிமேகலையும் சுடர் விட; காதில் குதம்பை ஒளி வீச; சிறிய தளிர் போன்ற மெல்லிய அடிகளில் சிறிய மணிகளை உள்ளே உடைய சிலம்புகளும் சதங்கைகளும் ஒலிக்கும்படி; தளிர்நடை கற்பதைப் போல மெள்…ள நடந்து வந்து; இளநகை தோன்ற; தர்மவழியில் வாழ்க்கையை நடத்துபவர்களுக்கு இம்மைப் பயனையும் சுவர்க்க போகத்தையும் மோட்சத்தையும் அருளும் அம்பிகை, காஞ்சனமாலையின் மடியில் வந்து அமர்ந்தார்.'

பார்த்த மன்னர் மகிழ்ந்தார். அதேசமயம் வருத்தப்படவும் செய்தார்; 'ஆண் குழந்தை வேண்டுமென்று வேண்டினோம்… இப்படிப் பெண் குழந்தையாக, அதுவும் மூன்று தனங்களுடன் வந்து அவதரித்திருக்கிறதே இக்குழந்தை' என்று வருந்தினார்.

அப்போது, 'பாண்டிய மன்னா! வருந்தாதே! இந்த மகளுக்கு, ஆண் குழந்தையைப் போலவே செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்! தடாதகை (தடுக்க முடியாத ஆற்றலுடையவள்) எனப் பெயரிட்டு, தக்க பருவம் வந்தவுடன் முடிசூட்டுவாயாக! இவளுக்கு ஏற்ற கணவன் வரும்போது, இவளின் மூன்றாவது தனம் மறையும்' என்று ஓர் அசரீரி கேட்டது. அதைக்கேட்ட அரசர் அமைதி பெற்று, மனம் மகிழ்ந்தார். யாகக் குண்டத்தில் இருந்து அவதரித்த அந்த அம்பிகைதான் அன்னை மீனாக்ஷி.

மீன் தன் குஞ்சுகளுக்குப் பார்வையாலே அமுதூட்டிக் காப்பதைப் போல,
தன் பார்வையாலேயே அடியார்க்கு அருள்புரிந்து காப்பதால், மீனாக்ஷி என்ற திருப்பெயரைப் பெற்ற அன்னை, தகுந்த பருவம் வந்ததும் பாண்டிநாட்டு அரசியாகி அறநெறி தவறாமல் ஆட்சி செலுத்தி வந்தார். 'மகள் இன்னும் மணம் செய்து கொள்ளாமல் இருக்கிறாளே' என்று வருந்தினாள் தாய் காஞ்சனமாலை.
மீனாக்ஷியோ, 'ஆகும்போது ஆகும்' என்று தாயை அமைதிப்படுத்தி விட்டு, திக்விஜயம் செய்யப் புறப்பட்டார்.

பெரும் படை பின் தொடர்ந்தது. அனைவர்க்கும் சக்தியை வழங்கும் அன்னையே போர் செய்யப் புறப்பட்டால், யாரால் எதிர்க்க முடியும். தேவாதி தேவர்கள் உட்பட அனைவரும் அன்னையின் திருவடிகளில் விழுந்து வணங்கி, சரணடைந்தார்கள். பயணத்தைத் தொடர்ந்த அன்னை கயிலை சென்றார். சிவ கணங்கள் அன்னையுடன் போரிட்டுத் தோற்றுப்போய், சிவபெருமானிடம் சென்று நடந்ததைச் சொன்னார்கள். புன்னகை பூத்த சிவபெருமான், உடனே போர்க்களத்தை அடைந்தார். எம்பெருமானின் திருவடிவை, அன்னை மீனாக்ஷி கண்டார்; அவருடைய வலப்பாகம் அல்லவா சிவபெருமான்.

'ஒற்றைவார்கழற் சரணமும் பாம்பசைத் துடுத்த வெம் புலித்தோலும்
கொற்ற வாள் மழுக்கரமும் வெண்ணீறணி கோலமும் நூல் மார்பும்
கற்றை வேணியும் தன்னையே நோக்கிய கருணை செய்திருநோக்கும்
பெற்ற தன் வலப்பாதியைத் தடாதகைப் பிராட்டியும் எதிர்கண்டனள்.'

(திருவிளையாடல் புராணம்)

சிவபெருமானின் சுந்தர – அழகிய கோலத்தைக் கண்டதும், அதுவரை மிடுக்கோடு திக்விஜயம் செய்து வந்த அன்னைக்கு, அவரை அறியாமலே நாணம் சூழ்ந்து கொண்டது. அதே சமயத்தில் அன்னையின் நடுமார்பில் இருந்த மூற்றாவது தனமும் மறைந்தது. தலையைக் குனிந்து, தரையைக் காலால் கீறியபடியே நின்றார் அன்னை.

அப்போது சிவபெருமான் அம்பிகையை நோக்கி, "தேவி! என்று நீ திக்விஜயம்
செய்யப் புறப்பட்டாயோ, அன்று முதல் உன்னை நான் தொடர்ந்து வருகிறேன்.
வரும் சோமவாரத்தன்று (திங்கட்கிழமையன்று) மதுரைக்கு வந்து உன்னை மணம் செய்து கொள்வோம். இப்போது நீ அங்கு செல்வாய்" என விடை கொடுத்தார்.

அதன்படியே, அன்னை மீனாக்ஷி மதுரை திரும்பினார். திருமணத்துக்குரிய ஏற்பாடுகள் நடந்தன. எல்லோருக்கும் திருமண ஓலை அனுப்பினார்கள். மதுரை நகரம் முழுவதையும் தேவேந்திரனின் அமராவதிப் பட்டணம் போல, அலங்காரம் செய்தார்கள். திருமால், பிரமன், இந்திரன் முதலான அனைவரும் வந்து குவிந்தார்கள்.

சிவபெருமான் திருமணக் கோலம் கொண்டு, கயிலையிலிருந்து எழுந்தருளி,
மதுரை வந்தடைந்து திருமணப் பீடத்தில் எழுந்தருளினார். அன்னை மீனாக்ஷிக்கு கலைமகளும் திருமகளும் தோழியராக இருந்து, மங்கல நீராட்டி அலங்காரம் செய்து, அழைத்து வந்து சிவபெருமான் அருகில் உள்ள பீடத்தில் அமர வைத்தார்கள். அனைவரும் மகிழ்ச்சிக் கடலில் திளைக்க, திருமணச் சடங்குகள் தொடங்கி நடந்தன.

மகாவிஷ்ணு, சிவபெருமானின் திருக்கரத்தில் அன்னை மீனாக்ஷியின் திருக்கரத்தை வைத்து, தாரை நீர் வார்த்தார். தேவர்கள் பூமழை பெய்ய, பிரம்மதேவர் முறைப்படி அக்னி வளர்த்துப் புரோகிதத் தொழில் செய்தார். அன்னை மீனாக்ஷிக்கு சிவபெருமான் திருமாங்கல்ய நாண் பூட்டி, அக்னியை வலம் வந்தார். அம்மி மிதித்து அருந்ததி பார்த்தார் அன்னை மீனாக்ஷி. மீனாக்ஷி – சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்து முடிந்தது.

வந்திருந்த அனைவரும் தெய்வத் தம்பதியரை வணங்கி விடைபெற்றுச் சென்றார்கள். சிவபெருமான், 'சுந்தர பாண்டியன்' எனும் திருநாமத்தோடு, அரசர் கோலத்தில் இருந்து அரசாட்சி செய்யத் தொடங்கினார். அன்று நடந்த மீனாக்ஷி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், இப்போதும் மதுரையில் நடக்கிறது. அந்த நன்னாள் (14.4.2022) அன்று சென்று இறை திருமணத்தை தரிசிப்போம்! வினைகள் எல்லாம் தங்காது விலகிப் போம்! வாசகர்கள் அனைவருக்கும் அன்னை மீனாக்ஷியும் சுந்தரேஸ்வரரும் அனைத்து மங்கலங்களையும் அருள வேண்டுகிறோம்!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com