தமிழக உள்ளாட்சித் தேர்தல்: அதிர்ச்சிகளும் ஆச்சரியங்களும்

தமிழக உள்ளாட்சித் தேர்தல்: அதிர்ச்சிகளும் ஆச்சரியங்களும்
Updated on

கவர் ஸ்டோரி

– ஆதித்யா

மிழகத்தில் கடந்த 2011ம் ஆண்டில்தான் உள்ளாட்சித் தேர்தல் முழுமையான அளவில் நடந்தது. 5 ஆண்டுகள் முடிந்த பின் மீண்டும் உள்ளாட்சித் தேர்தல், கடந்த 2016ம் ஆண்டு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால்,  பல்வேறு காரணங்களால் இத்தேர்தல் தொடர்ந்து தள்ளிப் போடப்பட்டு வந்தது. இதனால் தனி அலுவலர்கள் கண்காணிப்பில் உள்ளாட்சிகள் செயல்பட்டு வந்தன. இதனால் மக்கள் அடிப்படை வசதிகளுக்கு அல்லல்பட்டு வந்தனர். இதுதொடர்பாகத் தொடரப்பட்ட வழக்குகளிலும், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி நீதிமன்றங்களும் உத்தரவிட்டிருந்தன. இதையடுத்து        முதல் கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல், புதியதாகத் துவங்கப்பட்ட        9 மாவட்டங்களைத் தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் கடந்த 2019, டிச.27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடந்தது.

இந்தத் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுத்திருக்கிறது. மாநிலத்தில் ஆளும் கட்சி உள்ளாட்சித் தேர்தல்களில் அதிக இடங்களில் வெற்றிபெறுவது ஆச்சரியமில்லை. ஆனால் இம்முறை தி.மு.க. பெற்றிருக்கும் வெற்றி இதுவரை நடந்த தமிழக உள்ளாட்சித் தேர்தல்களில் இல்லாத ஒரு சாதனையைப் படைத்திருக்கிறது.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க. கூட்டணி 95 சதவிகிதத்துக்கும் அதிகமான இடங்களைப் பிடித்துள்ளது.
தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகள் வென்று சாதனை படைத்துள்ளன. வெற்றி முடிவுகளின்படி, 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க. கூட்டணி 95 சதவிகிதத்துக்கும் அதிகமான இடங்களைப் பிடித்துள்ளது. மொத்தமுள்ள 74 ஊராட்சி ஒன்றியங்களில் அனைத்தையும் தி.மு.க.வே கைப்பற்றியுள்ளது. 140 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு நடந்த தேர்தலில் 138 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. இதுவரை தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் நிகழ்த்தாத சாதனை இது.

தி.மு.க.க் கட்சியின் உட்கட்டமைப்பும், விசுவாசமான தொண்டர் படையின் பலமும் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஸ்டாலினின் கட்சி நிர்வாகத் திறமைக்கு இது ஒரு எடுத்துக்காட்டாக அமைகிறது.
தி.மு.க.விற்கு அடுத்த இடத்தில் காங்கிரஸ், 3 வது இடத்தில் விடுதலை சிறுத்தைகள் என்ற வரிசையில் அ.தி.மு.க. 4வது இடத்தைப் பிடித்திருக்கிறது.

அதிர்ச்சியில் அ.தி.மு.க. :
கடந்த 10 ஆண்டுகளாகப் பல்வேறு காரணங்களைச் சொல்லி அ.தி.மு.க. அரசு இந்த உள்ளாட்சித் தேர்தல்களைத் தள்ளிப் போட்டு வந்தது. தோல்வி பயம் என்று எதிர்க்கட்சிகள் இப்போது உண்மையாகியிருக்கிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலங்களில் உள்ளாட்சித் தேர்தல்களில் கட்சி இத்தனை பெரிய சரிவைச் சந்தித்ததில்லை. சில தவறான வியூகங்களால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியைத் தழுவியது – என்ற ஓ.பன்னீர்செல்வத்தின் அறிக்கை பல கேள்விகளை எழுப்புகிறது. தவறான வியூகம் என்றால் எது? கூட்டணி அமைத்த வியூகமா?தொகுதி ஒதுக்கீடு வியூகமா? தவறான வியூகத்தை வகுத்தது யார்?
கட்சியின் ஒருங்கிணைப்பாளரே வியூகம் தவறு என்று சொன்னால் அவர் வியூகத்தை வகுத்ததாக ஒப்புதல் வாக்குமூலம் தருகிறாரா? தவறான வியூகத்தைத் தடுத்து நிறுத்த அவருக்குத் தடையாக இருந்தது யார்? ஒருங்கிணைப்பாளரை மீறி யாரேனும் வியூகம் வகுத்துவிட்டார்களா? என்ற கேள்விகள் எழுகின்றன.
இந்தத் தேர்தல் முடிவுகள் கட்சியின் இரட்டைத் தலைமையைக் கேள்விக்குள்ளாகிறது. அதன் விளைவாக அ.தி.மு.க.வின் வளர்ச்சியில் ஒரு திருப்புமுனை ஏற்பட வாய்ப்பு அதிகம் .

தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க.விற்கு மட்டுமில்லை; மற்ற அரசியல் கட்சிகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைத் தந்திருக்கிறது. தென் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் அ.ம.மு.க. வெற்றி பெற்றுள்ளது. மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகியவை குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறவில்லை. சட்டமன்றத் தேர்தலில் ஆறு சதவிகித வாக்குகளைப் பெற்ற நாம் தமிழர் கட்சி, இந்தமுறை படுதோல்வியைச் சந்தித்துள்ளது.

ஆச்சரியப்படுத்திய விஜய்

அரசியல் இறங்குகிறார் எனத் தந்தையும், இல்லை… அப்பா சொல்வது உண்மையில்லை… என மாறி மாறி இருவரும் ஊடகங்களுக்குத் தீனி போட்டுக்கொண்டிருந்தனர் விஜய்யும் அவரது தந்தை சந்திரசேகரும்.  இந்தத் தேர்தலில் அதிக ஆர்ப்பாட்டமில்லாமல் விஜய்யின் ரசிகர்கள் சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்றிருக்கிறார்கள் 169 இடங்களில் போட்டியிட்டு 109 இடங்களில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றுள்ளதாக அந்த அமைப்பின் மாநில பொதுச்செயலாளர்        புஸ்ஸி ஆனந் தெரிவித்துள்ளார்.

பொதுவாக, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சின்னம் என்பது பிரதானமாக இருப்பதில்லை என்பதால், அந்தந்த பகுதிகளில் செல்வாக்கானவர்களை அரசியல் கட்சிகள் களமிறக்கின. சட்டமன்றத் தேர்தலுக்கு இணையாக உள்ளாட்சித் தேர்தலிலும் பணம் பிரதானப் பங்கு வகிக்கும். இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தின் கொடியையும் விஜய்யின் படத்தையும் பயன்படுத்திப் பிரசாரம் செய்தனர் விஜய்யின் நற்பணி மன்றத்தினர். இளைஞர்களின் இந்த வெற்றியை மிக முக்கியமான ஒன்றாகத் தமிழக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். மற்றுமோர் நடிகர் கட்சி பிறப்பதற்கான அறிகுறி என்கின்றனர்.

அடையாளத்தை இழந்த ம.நி.மையம்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 3 ஊராட்சி வார்டுகளில் மட்டுமே மக்கள் நீதி மய்யம் கட்சி வெற்றி பெற்றிருப்பது, கமலை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தனது தொடர்ந்த கிராமப் பயணங்களாலும் மக்கள் சந்திப்புகளினாலும் கிராமங்களில் தன் கட்சி வளர்ந்து கொண்டிருக்கிறது என்று நம்பிக்கொண்டிருந்த கமலுக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் மிகப்பெரிய ஏமாற்றம். 'அரசியலில் கமல் வெற்றி பெற முடியாது' என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுவிட்டது. இந்தத் தோல்வி எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். இனி அவர் எத்தனை தேர்தலில் நின்றாலும் தோல்வியடைவார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவைப் பார்த்துவிட்டு நடிகர்கள் அரசியலுக்கு வருகின்றனர். அவர்கள் எல்லாம் ஓர் இயக்கத்தின் குழந்தைகளாக இருந்து வளர்த்தெடுக்கப்பட்டனர். இவர்கள் எல்லாம் தனி நபர்கள். என்கிறார் ஒரு மூத்த அரசியல் விமர்சகர்.

"உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளின் மூலம், மக்கள் நீதி மய்யத்தின் எதிர்காலம் என்னவாக இருக்கும்?"

கமலுக்கு அரசியலில் இனி இறங்குமுகம்தான் என்பது என்னுடைய கருத்து. ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலும் வைத்துவிட்டு நகர முடியாது. அடுத்ததாக, நடிகர்களின் அதிகபட்ச அரசியல் கணக்குகள் என்பது 6 முதல் 8 சதவிகித வாக்குகள்தான். அதற்கு மேல் அவர்களால் செல்ல முடியாது. இதுதான் விஜயகாந்த்துக்கு நடந்தது, நாளை சீமானுக்கும் கமலுக்கும் இதுதான் நடக்கும். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தாலும் இதுதான் நடக்கும்" என்கிறார் ஒரு மூத்த பத்திரிகையாளர். ஒரு நடிகர் கட்சி உதயமாகும் நேரத்தில் இந்த நடிகர் கட்சி வரும் காலங்களில் காணாமல் போகக்கூடிய வாய்ப்பு அதிகம்.

தோல்வியில் துவண்டு நிற்கும் சீமான்

சட்டமன்றத் தேர்தலில் ஆறு சதவிகித வாக்குகளைப் பெற்ற நாம் தமிழர் கட்சி தங்களை நிலைநிறுத்திக்கொள்ள இந்த உள்ளாட்சித் தேர்தலைப் பெரிதும் நம்பியிருந்தது. ஆனால் சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியைப் பெற முடியவில்லை. இதுகுறித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "நாங்கள் பல இடங்களில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளை வென்றுள்ளோம். இதனைப் படுதோல்வி என எப்படிக் கருத முடியும்? ஒரு கட்சி கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வளர முடியும். ஒரே நாளில் ஒரு செடி பூப்பதும் காய்ப்பதும் இல்லை. என அறிக்கை கொடுத்திருந்தாலும். அடுத்தவரும் தேர்தல்களில் ஏதேனும் ஓர் அணியில் சேரும் வாய்ப்புகள் தான் அதிகம்.

காணாமல் போன விஜயகாந்த்

கடந்த காலங்களில் உள்ளாட்சித் தேர்தல்களில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற விஜய்காந்த் இம்முறை மிக மோசமான தோல்வியைச் சந்தித்திருக்கிறார். தொண்டர்களிடையே உற்சாகமின்மை, விஜய்காந்த்தின் உடல் நிலை போன்றவை காரணங்களாகச் சொல்லப்பட்டாலும்,  'எந்தக் கூட்டணியாலும் ஏற்கப்படாமல் ஒதுக்கப்பட்டதுதான்'   உண்மை காரணம். மக்கள் இனி நடிகர்களைக் கட்சி தலைவர்களாக ஏற்கமாட்டார்கள் என்பது தெளிவாகிக்கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் ஒவ்வொரு தேர்தலும் புதிய பாடங்களைக் கற்பிக்கும். நீண்ட காலத்துக்குப்பின் மாநிலத்தில் ஆட்சி செய்ய வாய்ப்பைப்பெற்றிருக்கும் தி.மு.க. அரசின் செயல்பாடுகளினால் ஏற்பட்டிருக்கும் நம்பிக்கையின் விளைவுதான் இந்தத்தேர்தல் முடிவுகள் என்பது தான் இந்தத் தேர்தல் சொல்லும் பாடம்.

Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News

Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook

Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram

Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter

Add KalkiOnline as a preferred source on Google... Click Here

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com