தலைவி விமர்சனம்

 தலைவி விமர்சனம்
Published on

– ராகவ்குமார்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சினிமா, அரசியல் பயணத்தை வைத்து 'தலைவி' என்ற பெயரில் திரைப்படமாகத் தந்திருக்கிறார் டைரக்டர் விஜய்.

படத்தில் எந்த ஒரு ரியல் கேரக்டர் பெயரையும் மாற்றாமல், அப்படியே தந்திருப்பதும், ஒரு பெண்ணின் போராட்ட அரசியலையும் பதிவு செய்ததற்காக டைரக்டர் விஜய்யைப் பாராட்டலாம். இது ஜெயலலிதா பற்றிய கதையாக மட்டும் இல்லாமல், எம்.ஜி.ஆரின் பிற்பகுதி சினிமா பங்களிப்பும் அரசியல் பிரவேசமும் பதிவு செய்ய பட்டிருக்கிறது.

1989ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒருநாள். எதிர்க்கட்சித் தலைவியாக இருக்கும் ஜெயலலிதா ஆளும் கட்சியினரால் தாக்கப்படு கிறார். ஆடை கிழிக்கப்படுகிறது. முடியைப் பிடித்து இழுத்து வெளியே தள்ளுகிறார்கள். அவிழ்ந்த கூந்தலுடன் மறுபடியும் வந்தால் முதல் அமைச்சராகத்தான் சட்டசபையில் வருவேன் எனச் சபதமிட்டு செல்கிறார் ஜெ.

பிளாஷ்பேகில் 1960 காலகட்டம். சினிமாவில் அறிமுகமாகும் ஜெவுக்கு எம்.ஜி.ஆரின் நட்பு கிடைக்கிறது. நட்பு, காதல் போன்று இல்லாமலும் இருக்கிறது. எம்.ஜி.ஆர். நேரடி அரசியலுக்கு வந்து முதல்வராகிறார்.

வற்புறுத்தலின் பேரில் அரசியலுக்கு வரும் ஜெ.விற்கு கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்ப்பு பலமாக உள்ளது. எம்.ஜி.ஆரின் ஆதரவால் மேல்சபை உறுப்பினர் ஆகிறார் ஜெயலலிதா. திடீரென
எம்.ஜி.ஆர். இறந்துவிட பல பிரச்னைகளை எதிர்கொள்கிறார். நமக்குத் தெரிந்த இந்த வாழ்க்கை வரலாற்றில் என்ன புதுமை உள்ளது?

காட்சி உருவாக்கத்தில் புதுமை  செய்து இருக்கிறார் டைரக்டர். பாடல் படம்பிடிக்கும்போது எம்.ஜி.ஆரைக் கட்டிப்பிடிக்கத் தயங்கும் ஜெயலலிதாவிடம் உன் அம்மாவாக நினைத்து என்னைக் கட்டிப் பிடிச்சுக்கோ என்று எம்.ஜி.ஆர்.  சொல்லும்போது கனிவு தெரிகிறது.

முதல்வரின் மதிய உணவு திட்டதில் நடக்கும் முறைகேடுகளை முதல்வரிடமே விளக்கும் யுக்தி, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் தேவைகளை எடுத்துரைப்பது, இப்படிப் பல காட்சிகளைச் சிறப்பாக ஆவணப்படுத்தி உள்ளார் டைரக்டர்.

எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலத்தில் வண்டியில் ஏற முயன்ற  ஜெயலலிதாவை வண்டியில் இருந்து தள்ள முயன்றது நாம் அறிந்த ஒன்று. ஆனால் இந்தச் சம்பவத்தை ஆணாதிக்கச் சிந்தனையாகப் பதிவு செய்திருக்கிறார் டைரக்டர்.

கட்சிப் பாகுபாடு இல்லாமல் ஆணாதிக்கச் சிந்தனை நீக்கமற நிறைந்துள்ளதை டைரக்டர் சரயாகவே சொல்லி இருக்கிறார். கனிவும் காதலும் என ஊருகுகிறார் கங்கனா. எதிரிகளால் அவமானபடுத்தப்படும் போது பொங்குகிறார். நடிக்கத் தெரிந்த நடிகை. வெல்கம் டு தமிழ் சினிமா.

எம்.ஜி.ஆரின் மறு பதிப்பாக வாழ்ந்திருக்கிறார் அரவிந்த் சாமி. கண்ணுக்கு உறுத்தாத குளிர்ச்சியான  ஒளிப்பதிவை தந்துள்ளார் நீரவ் ஷா. காதுக்கு இம்சை செய்யாத இசை ஜி.வி. தந்துள்ளார்.

உங்களுக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது பல மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். இருப்பினும் ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் உலகில் ஒரு பெண்ணாக ஜெயலலிதா எதிர்கொண்ட போராட்டங்களை யும், சந்தித்த அவமானங்களையும் புரிந்துகொள்ள 'தலைவி' படத்தைப் பாருங்கள்.

தலைவி – நெருப்பு பெண்மணி.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com