தாமஸ் மன்றோ

தாமஸ் மன்றோ
Published on

– பூங்கோதை

சென்னை தீவுத்திடலைக் கடப்பவர்கள் வங்கக்கடலைப் பார்த்தபடி கம்பீரமாக குதிரையில் அமர்ந்திருக்கும் மன்றோவைப் பார்த்திருக்கலாம். ராஜகம்பீரமாக நிற்கும் சேனம் பூட்டாத குதிரையில் அமர்ந்தபடி வாளேந்தி இருக்கும் மன்றோவின் சிலை சென்னையின் பிரதான வீதியொன்றில் அமைந்ததெப்படி? இந்தியா சுதந்திரமடைந்து 76 ஆண்டுகளுக்குப் பிறகும் மன்றோவைப் பற்றிப் பேச அப்படி என்னதான் இருக்கிறது? ஸ்காட்லாந்தில் பிறந்த ஒருவரை, அவர் மறைந்து 194 ஆண்டுகளுக்குப் பிறகும் நினைவுகூறுமளவுக்கு அப்படி அவர் என்ன செய்திருக்கிறார்?

பிரிட்டிஷ் ராணுவத்தில் படைவீரனாக இந்தியாவில் வந்திறங்கி, ராஜதானியின் கவர்னராக உயர்ந்தவர் மன்றோ. இரும்பு இதயம் கொண்ட வெள்ளையர்களில் மன்றோ இளகியவர். எளிய மக்களின் துயரங்களை உணர்ந்து அவர்கள் வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டுவந்தவர். நிர்வாகம், கல்வி, காவல்துறை எனப் பல்வேறு துறைகளில் அவர் செய்த சீர்திருத்தங்கள் இன்றுவரை இந்திய நிர்வாகத்தில் நடைமுறையில் உள்ளன.

1761-ம் ஆண்டு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் பிறந்தார் மன்றோ. நான்கு சகோதரர்கள், இரண்டு சகோதரிகளோடு பிறந்த மன்றோவை சிறு வயதிலேயே அம்மை நோய் தாக்கியது. அதன் விளைவாக செவித்திறன் பறிபோனது. தாத்தா தையல் கலைஞர்… அப்பா புகையிலை வியாபாரி… மன்றோவுக்கு ராணுவத்தில் சேர்வது சிறுவயது முதலே கனவாக இருந்தது. தொழில் நசிவு, வறுமை, அப்பாவின் எதிர்ப்பு என எல்லா இடர்களையும் கடந்து, 1779-ம் ஆண்டு தன் 18 வயதில் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்தார். பிரிட்டிஷ் ராணுவத்தின் அங்கமாக 1780 ஜனவரி 15ம் தேதி மெட்ராஸில் வந்திறங்கினார் மன்றோ.

அத்தருணத்தில் ஹைதர் அலிக்கு எதிராக பெரும் யுத்தத்தைத் தொடங்கியிருந்தது பிரிட்டிஷ் படை. ஹைதர் அலியின் மறைவுக்குப் பிறகு திப்பு சுல்தானை இலக்கு வைத்தது பிரிட்டிஷ் படை. இந்த இரண்டு போர்களிலும் பங்கேற்றார் மன்றோ. இரண்டு போர்களையும் முன்னின்று நடத்திய கவர்னர் கார்ன் வாலிஸின் கவனத்தை ஈர்த்தார் மன்றோ. 'இவன் இந்தியாவை நிர்வகிக்க தகுதியானவன்' என்று தீர்மானித்த கார்ன் வாலிஸ், மன்றோவை ராணுவத்திலிருந்து விடுவித்து சிவில் பணிக்கு மாற்றினார். சேலம், தர்மபுரி, ஊத்தங்கரை, திருப்பத்தூர் பகுதிகளை உள்ளடக்கிய பாராமஹால் பிரதேசத்தை நிர்வகிக்கும் பொறுப்பை மன்றோவுக்கு வழங்கினார். 12 ஆண்டுகள் களமுனையில் நின்று யுத்தம் செய்த மன்றோ, ராணுவச் சீருடை களைந்து நிர்வாக அதிகாரியானார்.

பொறுப்பேற்கும் முன்பு, மக்களின் வாழ்க்கை முறையை அறிந்துகொள்ள விரும்பிய மன்றோ, கிராமம் கிராமமாக தன் குதிரையில் பயணித்தார். அக்காலத்தில் பிரிட்டிஷ் அரசு, மக்களிடம் நிலத்தீர்வை வரியை வசூலிக்கும் உரிமையை ஜமீன்தார்களிடமும் நிலச்சுவான்தாரர்களிடமும் வழங்கியிருந்தது. பிரிட்டிஷ் நிர்வாகம் நிர்ணயித்ததை விட அதிகமாக மக்களிடம் வரியை உறிஞ்சிய இந்த இடைத்தரகர்கள், வசூலான வரியில் பெரும்பகுதியை தாங்கள் சுருட்டிக்கொண்டு ஒரு பகுதியை மட்டுமே பிரிட்டிஷ் நிர்வாகத்துக்குத் தந்தார்கள். வரி கட்டமுடியாத மக்களின் நிலங்களைப் பறித்து தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டிருந்தார்கள். இந்த ஜமீன்தாரி அவலத்திலிருந்து மக்களை விடுவிக்க நினைத்த மன்றோ, 'இனி அதிகாரிகளே மக்களிடம் நேரடியாக வரி வசூலிப்பார்கள்… ஜமீன்தார்களுக்கு இடமில்லை' என்று அறிவித்தார். இந்த வரியை வசூலிக்க கலெக்டர் என்ற நிர்வாகப் பதவியையும் உருவாக்கினார். அவர் உருவாக்கிய கலெக்டர் பதவியே சிறிதும் பெரிதுமாக
மாற்றத்துக்குள்ளாகி இன்றுவரை நடைமுறையில் இருக்கிறது. ரயத்துவாரி முறை என்றழைக்கப்படும் இந்த வரிவசூல் முறையால் மக்கள் நிம்மதியடைந்தார்கள்.

மன்றோவின் நிர்வாகப் பகுதியிலிருந்த மந்திராலயம் ஸ்ரீராகவேந்திரர் ஆலயத்துக்கு 17ம் நூற்றாண்டில் அரசு கொஞ்சம் நிலங்களை வழங்கியிருந்தது. அந்த நிலங்களை மீட்கும் பொறுப்பை மன்றோவுக்கு வழங்கியது பிரிட்டிஷ் நிர்வாகம். மந்திராலயம் சென்ற மன்றோ, அங்கிருந்த சூழலையும் மக்களின் நம்பிக்கையையும் உணர்ந்து, 'நிலம் மந்திராலய நிர்வாகத்திடம் இருப்பதே சரியானது' என்று பிரிட்டிஷ் அரசுக்கு அறிக்கையளித்தார். அந்த நிலத்துக்கு வரி வசூலிக்கவும் தேவையில்லை என்று அவர் பிறப்பித்த உத்தரவு மெட்ராஸ் அரசு கெஜெட்டில் பதிவாகியிருக்கிறது. பிறரின் மத உணர்வை மதிக்கும் மகத்தான குணம் கொண்டிருந்த மன்றோ திருப்பதி கோயில் மதிய நிவேதனத்திற்கு என சித்தூர் பகுதியின் சில கிராமங்களின் வருவாயை ஒதுக்கித் தந்தார். அவர் காணிக்கையாக வழங்கிய பெரிய கொப்பரையில்தான் திருமலையில் இப்போதும் பொங்கல் வைக்கப்படுகிறது. 'மன்றோ கங்கலம்' என்று அந்தக் கொப்பரையை அழைக்கிறார்கள் பக்தர்கள். மன்றோ பணியாற்றிய ஆந்திர மாநில பகுதிகளில் அவரை நினைவுகூறும் வகையில் இன்றும் குழந்தைகளுக்கு 'மன்றோலயா', 'மன்றோலம்மா' என்று பெயரிடும் வழக்கம் இருக்கிறது.

(தொடரும்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com