நவராத்திரி தாத்பரியம்!

நவராத்திரி தாத்பரியம்!
Published on
வாசகர் ஜமாய்க்கிறாங்க
– கே.எஸ்.கிருஷ்ணவேணி, பெருங்குடி

நமது கலாச்சார பாரம்பரியத்தை, அதன் மகத்துவம் மாறாது அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்வது நமது முக்கியமான கடமையாகும். ஊழிக்காலத்தில் கிரியா சக்தி எதுவும் இல்லாமல் உயிரினங்கள் பொம்மை போல எவ்வித இயக்கமுமின்றி இருந்ததை நினைவுபடுத்தும் வகையில் சிவபெருமான் விருப்பப்படி நவராத்திரி விழாவின்போது பொம்மை கொலு வைக்கப்படுகிறது.

முதல் மூன்று நாட்கள் துர்கையை பூஜித்து, மாதுளம் பழ முத்துக்களால் அர்ச்சித்து வழிபட, செல்வ வளம் பெருகும். அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமிக்கு வாசம் மிகுந்த மல்லிகைப்பூ கொண்டு அர்ச்சித்து வழிபட, சகல வளங்களும் பெறலாம். கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியை பூஜித்து சியாமளா தண்டகம், சகலகலாவல்லிமாலை படித்து வேண்ட, நல்ல படிப்பு, வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

நவராத்திரி – தாம்பூலம் :

நவராத்திரி கொலுவுக்கு வரும் குழந்தைகளுக்கு மண்ணாலான உண்டியலை பரிசாகக் கொடுத்து, சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தலாம். இதன் மூலம் உண்டியலை வாழ்வாதாரமாகக் கொண்ட குயவர்களுக்கும் அது உதவியதாக இருக்கும்.

அதேபோல், குழந்தைகளுக்கு எக்ஸாம் பாட் ( அட்டை), ஸ்கேல், பென்சில், பேனா, ஜாமென்ட்ரி பாக்ஸ், டிபன் பாக்ஸ், க்ரையான்ஸ் என அவர்களுக்குப் பயன்படும்படியான பொருட்களைக் கொடுத்தால் குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்.

பெரியவர்களுக்கு தாம்பூலத்தில் வைத்துக் கொடுக்க பிளவுஸ் பிட்களை தவிர்த்து, கிப்ட் கூப்பன்களை நம் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு தரலாம். வயதானவர்களுக்கு ஸ்லோக புத்தகங்கள், பகவத் கீதை, ராமாயணம் போன்ற புத்தகங்களை பரிசாகத் தரலாம். இதனால் அதனைப் பெறுபவர்கள் மகிழ்ச்சி அடைவர்.

இப்போது எல்லோரும் வேலைக்குச் செல்வதால் சுண்டல் செய்ய நேரமில்லை என்று நவராத்தியை அனுசரிக்காமல் இருக்க வேண்டாம். தாம்பூலத்தில் கல்கண்டு பாக்கெட், பாதாம், முந்திரி, திராட்சை, பேரிச்சம்பழம் போன்ற உலர்ந்த பழங்களை நிவேதித்து அதை தாம்பூலத்தில் வைத்துக் கொடுத்து கொண்டாடலாமே!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com