
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில், முதல் படை வீடாகிய திருப்பரங்குன்றத்தில் உள்ள, 'பஞ்சாட்சரப் பாறையில்' மட்டுமே வேல் வழிபாடு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. வருடந்தோறும் புரட்டாசி மாதம், கடைசி வெள்ளிக்கிழமையன்று மலை அடிவாரத்திலிருந்து மலை உச்சியில் இருக்கும் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு முருகனின் வேல் எடுத்து செல்லப்பட்டு, அங்கே பூஜை, அபிஷேகம், வழிபாடுகள் சிறப்பாக நடத்தப்படுகின்றன.
நக்கீரர் வேண்டுகோளுக்கு இணங்க, முருகப்பெருமான் தனது கையிலிருந்த வேலால் பாறையைக் கீற, அதிலிருந்து காசி தீர்த்தம் ஊறியதால் இது, 'பஞ்சாட்சரப் பாறை' என அழைக்கப்பட்டது.
புராணப் பின்னணி :
சிவபெருமான், பார்வதி தேவியுடன் கடலோரத்தில் அமர்ந்து அம்மையின் ஐயங்களைப் போக்கிக் கொண்டிருக்கையில் தேவி உறங்கி விட, கடல் மீன் ஒன்று அந்தத் தகவல்களைக் கேட்டுக் கொண்டிருந்தது. பின்னர் சிவபெருமானின் அருளால், மீதித் தகவல்களையும் அறிய, மச்சமுனி சித்தராக பூமியில் அவதாரமெடுத்தது.
கடல் மட்டத்திலிருந்து 1,050 அடி உயரத்திலிருக்கும் திருப்பரங்குன்றம் மலை காண்பதற்கு ஆனை வடிவம் போல் தோற்றமளிக்கும். இம்மலை மீது காசி விஸ்வநாதர் ஆலயம் மற்றும் மச்சமுனி சித்தர் ஜீவ சமாதி அமைந்துள்ளன. காசிச் சுனையும் இங்கு அமைந்துள்ளது.
'கற்க முனி' என்கிற பூதம், ஈஸ்வரனை நோக்கித் தவமிருந்து அழியா வரம் கேட்க, "வழிபாடு தவறும் ஆயிரம் முனிவர்களை ஒருசேர பலி கொடுக்குமாறு" ஈஸ்வரன் கூறினார். அவ்வாறே பாறையிலுள்ள குகை ஒன்றினுள், ஒன்றன் பின் ஒன்றாக 999 முனிவர்களை பூதம் அடைத்துவிட்டு, கடைசி முனிவருக்காகக் காத்திருக்கையில், நக்கீரர் அங்கே வந்து சேர்ந்தார்.
மலையடிவாரத்திலுள்ள சரவணப் பொய்கையில் நக்கீரர் நீராடி, கரையிலுள்ள ஆலமர நிழலில் அமர்ந்து சிவ பூஜை மேற்கொண்ட சமயம், ஒரு ஆலிலை நிலத்தில் பாதியும் நீரில் பாதியுமாக விழுந்தது. நிலத்தில் விழுந்தது பறவையாகவும், நீரில் விழுந்தது மீனாகவும் மாறி ஒன்றையொன்று இழுக்கையில், நக்கீரரின் வழிபாடு தவறி அதை அதிசயமாகப் பார்த்த வேளையில், கற்க பூதம் அவரைப் பிடித்து குகைக்குள் அடைத்தது.
நக்கீரரின் தலைமையில் அனைவரும், 'திருமுருகாற்றுப்படை' பாட, முருகப்பெருமான் மயில் மீதமர்ந்து வந்து, பூதத்தை சம்ஹாரம் செய்து முனிவர்களை விடுவித்தார்.
பூதம் தொட்டதால் ஏற்பட்ட பாவத்தைப் போக்க, கங்கை சென்று நீராட வேண்டுமென நக்கீரர் கூறுகையில், 'காசிக்கு செல்ல வேண்டாம்! இங்கேயே அதனை உருவாக்கித் தருகிறேன்' என முருகப்பெருமான் அபயமளித்து, தனது வேலால் அப்பாறையைக் கீறி தீர்த்தத்தை ஊறச் செய்ததால் இதற்கு, 'காசிச் சுனை' என்கிற பெயர் உண்டானது.
பஞ்சாட்சரப் பாறை மீது அமைந்த காசி விஸ்வநாதர், மச்ச முனி சித்தர் ஜீவ சமாதி மற்றும் காசிச் சுனையைக் கண்டு வணங்குவதன் மூலம் நற்பயன்களைப் பெறலாம். இங்கு செல்ல 675 மலைப் படிகள் ஏறிச்செல்ல வேண்டும்.