பெருமிதம் கொள்வோம்

பெருமிதம் கொள்வோம்
Published on

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில் முழு உலகமே இறங்கியிருக்கிறது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இரண்டாவது இடத்திலிருக்கும் நமக்கு இது மிகப்பெரிய சவால்.

ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், தடுப்பூசிகளைப் போடுவதிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக அரசு சிறப்பு முகாம்களின் வழியாக லட்சக்கணக்கான பேருக்கு ஒரே நாளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் எதிர்பார்த்ததைவிட பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது.

தமிழ்நாடு அரசின் திட்டம் பல மாநிலங்களிலும் பாராட்டுகளைப் பெற்றுவருகிறது. பொது சுகாதாரத் துறையில் எப்போதும் முன்னோடி மாநிலமாக விளங்கும் கேரளத்தில், கொரோனா இலவசத் தடுப்பூசிக்கு இணையம் வழியாகப் பதிவுசெய்து, பல நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் மக்களைத் தேடி தடுப்பூசி இயக்கம் வருவது மக்கள் நல்வாழ்வுத் துறையின் திட்டமிடலுக்குக் கிடைத்த வெற்றி.

செப்டம்பர் மாதத்தில் நடந்த மூன்று சிறப்பு முகாம்களில் மட்டும் மொத்தம் 70.71 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஊரிலும் நடத்தப்பட்ட மூன்று சிறப்பு முகாம்களும் வெவ்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளன என்பது அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்கும் வாய்ப்புகளை அளித்துள்ளன. மருத்துவமனைகளில் மட்டுமின்றி, பேருந்து நிலையங்கள், பூங்காக்கள் என்று பொது இடங்களிலும் இந்த சிறப்பு முகாம்கள் திட்டமிடப்படுகின்றன. சிறப்பு முகாம்கள் நடக்கும் நாட்களில் அதிகத் தடுப்பூசிகள் தேவைப்படும் இடங்களுக்கு மற்ற பகுதிகளிலிருந்து உடனடியாக வரவழைக்கும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

இந்த வெற்றிக்கு பின்னாளுள்ள சுகாதாரத் துறை ஊழியர்களின் கடும் உழைப்பு பாராட்டுக்குரியது.

தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடந்த இடங்களில் அதிகாலையிலிருந்து மாலை வரையிலும் ஓய்வின்றித் தொடர்ந்து பணியாற்றியதைப் பார்க்க முடிந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டதும் மக்களிடையேயும் மருத்துவத் துறை பணியாளர்களிடையேயும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

செவிலியர்களும் மருத்துவர்களும் கடவுளின் தூதர்களாகப் பார்க்கப்படுபவர்கள். அவர்களின் இந்த இறைப் பணியை மனதாரப் பாராட்டுவோம். நன்றி சொல்வோம். நம் சகோதர சகோதரிகளின் செயலில் பெருமிதம் கொள்வோம். அவர்களின் இந்த அர்ப்பணிப்பான சேவைகள் குறித்து நமது இளைய தலைமுறைக்கு எடுத்துச்சொல்வோம்.

அரசின் இந்த முன்னெடுப்பில் ஆர்வத்துடன் மருத்துவப் பணியாளர்களுடன் இணைந்து செயல்பட அதிக அளவில் தன்னார்வலர்களும், ஆசிரியர்களும் பங்கு கொள்ள முன்வரவேண்டும்.

ஆண்டு இறுதிக்குள், 'தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் இல்லை'  என்ற பெருமிதமான நிலையை உருவாக்குவோம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com