பொலிடிகல் பிஸ்ஸா

பொலிடிகல் பிஸ்ஸா
Published on
கௌதம் ராம்

பொலிடிகல் பிஸ்ஸா

கௌதம் ராம்

பாஸ்வான் ஜூனியரின் பாலிடிக்ஸ்

பீகாரில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்த முக்கியமான கட்சி நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம். ஆனால் இன்னொரு புறம் நித்திஷோடு முறுக்கிக்கொண்டிருந்த ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வானுடனும் கைகோர்த்துக் கொண்டிருந்தது பா.ஜ.க. தேர்தல் பிரசாரத்தின்போது, சிராக், நித்திஷை கடுமையாக விமர்சித்ததை உள்ளூர ரசித்தபடி, மௌனம் காத்தது பா.ஜ.க. தேர்தல் வெற்றிக்குப் பின், நித்திஷுடன் கூட்டணி ஆட்சி அமைத்துவிட்டு, சிராக்கை ஓரம் கட்டியது. இதனால், கடுப்படைந்த சிராக், பா.ஜ.க.வை சீண்டிப் பார்க்க முடிவு செய்தார். திடீரென்று, லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வியைச் சந்தித்தார். அலெர்ட் ஆன பா.ஜ.க. உடனே, சிராக்குடன் வெள்ளைக்கொடி காட்டிவிட்டது. அண்மையில் நடந்த பாஸ்வானின் முதலாவது நினைவு தின நிகழ்ச்சியில் பா.ஜ.க.வின் இரு துணை முதலமைச்சர்களும் கலந்து கொண்டனர். பீகார் அமைச்சரவையில் இருக்கும் பா.ஜ.க. அமைச்சர் நீரஜ் குமார் பப்லூ, பாஸ்வானின் கட்சி, தே.ஜ. கூட்டணியில்தான் உள்ளது என்று அறிக்கை விட்டார். அட! அரசியல் சதுரங்கத்தில் ஆளாளுக்கு காய் நகர்த்துகிறார்கள்!

பல்பிடுங்கிய பாம்பு

கோஷ்டி பூசலில் காங்கிரசுக்கு சற்றும் சளைத்ததில்லை பா.ஜ.க. என்று ராஜஸ்தானில் நிரூபணமானது. அங்கே பா.ஜ.க.வின் மூத்த தலைவர் கைலாஷ் சந்திர மேக்வால். வயது 87. சட்டமன்றத்தில் எதிர்க் கட்சியான பா.ஜ.க.வின் தலைவர் குலாப் சந்த் கடாரியா. அவருக்கு வயது 76. இந்த இரு சீனியர் சிட்டிசன்களுக்கும் இடையில்தான் ஈகோ மோதல். மேக்வாலின் ஆதரவாளர்கள், "விரைவில் பா.ஜ.க.வின் ஆக்டிவ் அரசியல் ரிடயர்மென்ட் பாலிசிபடி (75 வயதானவர்களுக்கு ஆட்சிப் பதவிகள் இல்லை) கடாரியாவின் பதவி பறிக்கப்படும். அதன்பின் அவர் பல் பிடுங்கிய பாம்பாகி, முடங்கிவிடுவார் என்று மகிழ்ச்சியோடு முணுமுணுக் கிறார்கள். பதவி படுத்தும் பாடு!

இன்னொரு கவர்னர் ரெடி!

விரைவில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து, குஜராத்தில் முதலமைச்சர் விஜய் ரூபானியைப் பதவியில் இருந்து இறக்கி விட்டு, பட்டேல் இன வோட்டு வங்கியை மனதில் வைத்து, பூபேந்திர பட்டேலை முதலமைச்சர் நாற்காலியில் அமர்த்தி உள்ளது பா.ஜ.க. மேலிடம். சரி! இனி விஜய் ரூபானியின் கதி என்ன? விரைவில் அவரை ஏதாவது ஒரு மாநிலத்துக்கு கவர்னராக அனுப்பி விடுவார்கள் என்கிறது காவிப் பட்சி! விஜய் ரூபானியை முதலமைச்சர் ஆக்கியபோது, பதவி இழந்த ஆனந்திபென் பட்டேலை கவனராக அனுப்பி வைத்தது பா.ஜ.க. சரித்திரம் திரும்புகிறது!

விட்டேனா பார்!

மேற்குவங்காள சட்டமன்றத் தேர்தலில், சுவேந்து அதிகாரியின் சவாலை ஏற்று, தொகுதி மாறி போட்டியிட்டு, எதிர்பாராதவிதமாக தோல்வி கண்டார் மம்தா பானர்ஜி. ஆனாலும், முதலமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டார். அடுத்த ஆறு மாதங்களுக்குள் எம்.எல்.ஏ. ஆகவேண் டுமே! பவானிபூர் தொகுதியின் திரிணாமூல் எம்.எல்.ஏ. தன் பதவியைத் தியாகம் செய்ய, அங்கே களமிறங்குகிறார் மம்தா. ஏற்கெனவே அவர் இரு முறை வெற்றி பெற்ற தொகுதிதான் பவானிபூர் என்றாலும், இந்த முறை அவர் கொஞ்சமும் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. பல மந்திரிகளும் களமிறங்கி வேலை செய்கிறார்கள். எந்த அளவுக்கு என்றால், மாநில மந்திரிகள் இருவர், பெயிண்ட் பிரஷ் பிடித்து, சுவரில் பிரசார வாசகங் களை எழுதுகிறார்கள். இதைத் தவிர முன்னாள், இன்னாள் சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என 20 ஸ்டார் பிரசார பீரங்கிகளும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். சூடு கண்ட பூனையாயிற்றே!

முதலமைச்சரின் பங்களா

கொரோனா லாக்டவுன் காலத்தில் தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் அலுவலகம் பக்கமே போகாமல், 100% ஒர்க் ஃப்ரம் ஹோம் கொள்கையைக் கடைப்பிடித்தார் மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே! ஆனாலும், இடையில் இரண்டு மாத காலம், மும்பை யில் பாந்த்ரா பகுதியில் உள்ள தாக்கரே குடும்பத்துப் பாரம்பரிய இல்ல மான மாதோஸ்ரீயில் இருந்து மலபார் ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு பங்களாவுக்கு இடம் பெயர்ந்தார். (அங்கேயும் ஒர்க் ஃப்ரம் ஹோம்தான்!) காரணம், மாதோஸ்ரீ பங்களாவில் புதுப்பிக்கும் பணிகள் செய்யவேண்டி இருந்ததுதான்!. இப்போது பங்களா புதுப்பிக்கப்பட்டு, மறுபடி அங்கே இடம் மாறிவிட்டார் உத்தவ். புதுப்பிக்கப்பட்ட பங்களாவில், நவீனத் தொழில் நுட்பத்துடன் வீடியோ கான்பிரன்ஸ் அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அப்ப இனிமேலும் ஒர்க் ஃப்ரம் ஹோம்தான்!

அப்பா பெயரில் மகளின் பாலிடிக்ஸ்

ஆந்திராவில், முன்னாள் காங்கிரஸ் கட்சி முதல்வர் ராஜசேகர ரெட்டியின்மகன், தன் அப்பவின் பெயரில் கட்சி ஆரம்பித்து, யாத்திரை நடத்தி ஆட்சியைக் கைப்பற்றியது தெரிந்த கதை. இப்போது, ராஜசேகர ரெட்டியின் மகள் ஒய்.எஸ்.ஷர்மிளா, தெலங்கானா மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சி என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கி இருக்கிறார். அண்மையில் ராஜசேகர ரெட்டியின் 12வது ஆண்டு நினைவு நாளன்று ஒய்.எஸ்.ஆரின் மனைவி விஜயாம்மா தன் கணவரது நினைவு நாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்த நிகழ்ச்சியல் மகள் ஷர்மிளா கலந்துகொண்டபோதிலும், மகன் ஜகன்மோகன் ரெட்டி கலந்துகொள்ளாமல் புறக்கணித்தார். காரணம், தன் சகோதரியின் அரசியல் பிரவேசம், தனது வோட்டு வங்கியைப் பாதிக்கும் என ஜகன் பயப்படுவதுதான். அரசியல்னு வந்துட்டா அண்ணனாவது தங்கையாவது?

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com