மன்னிக்க வேண்டுகிறேன்!

மன்னிக்க வேண்டுகிறேன்!
Published on
– ரேவதி பாலு

"மன்னிக்கும்படியான காரியமா பண்ணியிருக்கான் அவன்?" – இது நம் வீடுகளில் அடிக்கடி கேட்கக்கூடிய வார்த்தைகள்தான். பொதுவாக, மன்னிப்பது என்றால் `நடந்த சம்பவத்தை அடியோடு மறந்து விடுவது. எதுவுமே நடக்காதது போல பழைய மாதிரி பேசிப் பழகுவது` என்றுதான் நாமெல்லாரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

தவறு இழைத்த ஒருவரை தண்டிக்க சக்தியில்லாமல், இயலாமையின் காரணமாக அவரை நம் ஆயுள் முழுவதும் மனசு முழுவதும் பகைமையோடு கறுவிக் கொண்டும் சபித்துக் கொண்டும் இருப்பது மன்னிப்பாகாது என்று அர்த்தம் செய்துகொள்ள இயலாது.

மன்னிப்பின் உண்மையான அர்த்தம் தெரிந்தால் நாம் ஆச்சர்யப்படுவோம். "உன்னை தண்டிக்க என்னால் முடியும். ஆனால், நான் அப்படிச் செய்ய விரும்பவில்லை. உனக்குத் தீங்கு நினைக்க நான் மனதால் கூட நினைக்க விரும்பவில்லை" என்று மனதார விட்டு விடுவதே மன்னித்தல் ஆகும்.

'இதெல்லாம் சாத்தியமா என்கிறீர்களா?' இந்த மாதிரி மனநிலை அமைய, இவ்விதத்தில் ஒருவரை மன்னிக்க நாம் மிகவும் வலிமையானவராக இருக்க வேண்டும். இந்த மன வலிமை நமக்கு இருக்கிறதா? என்றுதான் நாம் முதலில் பார்க்க வேண்டும்.

நமக்கு இழைக்கப்பட்ட ஒரு கொடுமையான சம்பவத்தை நினைத்து நினைத்து நாம் மருகிக்கொண்டே இருக்கிறோம். ஏனென்றால், நம்மால் அதை மறக்க முடியவில்லை, நம் ஆயுள் முழுக்க அந்த சம்பவம் நம்மை உறுத்துகிறது. அதன் வெளிப்பாடாக நாம் ஒருவரை சபிக்கிறோம் என்றால் உண்மையில் நடப்பது என்ன தெரியுமா? அதை நினைத்து நினைத்து நாம் மருகும்போதும் வாடும்போதும் நமக்கு நாமே தண்டனை கொடுத்துக் கொள்கிறோம். இதனால் எதிராளிக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை.

இதை ஒரு மகான் அழகாகச் சொல்கிறார். "கண்மூடித்தனமான கோபம், அதனால் வரும் ஆத்திரம் என்பது சூடாக எரிந்துகொண்டிருக்கிற கரித்துண்டை அடுத்தவர் மேல் எறிவதற்காக நாம் நம் கைகளால் எடுப்பது போல. அவருக்கு பாதிப்பை ஏற்படுத்த நம்மை நாமே தண்டித்துக்கொள்வதுதான் அதற்கான எதிர்வினை.

ஒருவர் செய்த தவறுக்கான தண்டனை அவருக்குக் கிடைக்கக்கூடாது என்றெல்லாம் சொல்ல வரவில்லை. அதற்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை என்பதுதான் இதிலிருக்கும் உண்மை.

மன்னிப்பு என்பது எதிராளிக்கு தண்டனை தர மறுத்தல் மட்டுமல்ல; நம் மனதில் இருந்து முழுமையாக இன்னொருவருக்குக் கெடுதல் செய்ய வேண்டும் என்கிற நினைப்பையே அகற்றுவதுதான் உண்மையான மன்னிப்பு.

இந்த உணர்வு நம் மனதில் வந்துவிட்டால் நம் மனது அன்புமயமாக ஆகிவிடும். அதனால் இன்னொருவருக்கு வாழ்வில் ஒரு கெடுதல் வந்தால் நம்மால் மகிழ்ச்சி அடைய முடியாது. மாறாக, மிகவும் வருத்தப்படுவோம்.

நிலையற்ற இந்த வாழ்க்கையில் ஒவ்வொருவரும் சாதிக்க வேண்டியது அவரவர் அளவில் நிறைய உள்ளது. இதில் ஏன் நமக்கு நாமே தண்டனை கொடுத்துக்கொண்டு நம் வாழ்க்கையின் அமைதியைக் கெடுத்துக்கொள்ள வேண்டும்?

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com