முதியோர் சமுதாயம் வாழ்கவே!

முதியோர் சமுதாயம் வாழ்கவே!
Published on

– உஷா ராமகிருஷ்ணன்

உலக முதியோர் தினம் – அக்டோபர், 1

முதியோர் என்ற வார்த்தை, அவர்கள் வயதைக் குறிக்கும் விஷயம்தானே தவிர, மனதளவில் பெரியவர்கள் இளமையாக இருப்பதைத்தான் பார்க்கிறோம். நானும் வெகு சீக்கிரம் அந்தக் கட்டத்துக்கு வந்து விடுவேன் என்பதால், நானும் அப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

நம் வாழ்க்கையே அஸிஸ்டெட் லிவிங்தான். இளம் வயதில் பெற்றோரும், பின்பு வாழ்க்கைத் துணை, உடன்பிறப்பு என்று யாராவது துணை இருப்பது பலத்தை அளிக்கிறது. வயோதிகத்தில் இந்தத் தேவை இன்னும் அதிகமாக இருக்கிறது. இந்த காலத்தில் பிள்ளைகள் தங்கள் கனவுகளை நோக்கிச் செல்கிறார்கள், பேரன், பேத்திகளோ பறந்தே விடுகிறார்கள். இந்த நிலையில், வயதான பிறகு யாரும் துணையில்லையென்றால் பலவீனமாகி விடுவோம்.

இந்திய ஜனத்தொகையில் 134 மில்லியன் மக்கள் 60 வயதைக் கடந்தவர்களாம்! இத்தனைப் பேரும் உடல் மற்றும் மன ரீதியாக ஆரோக்கியமாக இருப்பது, தனிப்பட்ட நபர்களுக்கும், அவர்கள் குடும்பத்துக்கும், சமுதாயத்துக்கும் மிக அவசியமாகிறது. அதனால், "எனக்கு யாருமே துணையில்லை" என்ற தவிப்பிற்குத் தீர்வாக, தனியாக வாழும் நிர்பந்தத்தில் இருக்கும் பெரியவர்கள், 'அஸிஸ்டெட் லிவிங்' என்ற உலகத்துக்கு வருகிறார்கள்.

பெரியவர்கள் அனைவரும், ஒரு பெரிய மதில் சுவருக்குள், சின்னச் சின்ன வீடு அல்லது குடியிருப்பு அல்லது அறைகளில் வசிக்கிறார்கள். இவர்களுக்கு தினசரி பொறுப்புகளான வீட்டை நிர்வகிப்பது, சமைப்பது, பில் கட்டுவது போன்ற தலைவலிகள் இருப்பதில்லை. உடல் நலம் சரியில்லையென்றால், கூப்பிட்டக் குரலுக்கு உடனடி உதவி, ஆம்புலன்ஸ், மருத்துவமனை சேர்ப்பு என்று உதவி செய்ய ஒரு குழு செயல்படுகிறது. இது ஒரு பெரிய விடுதலை உணர்வைத் தருகிறது.

"பணம் கொடுத்து சேருவது கஷ்டமில்லை, அமைதியான சூழ்நிலையும் பேச்சுத் துணையும் தேவை" என்று சொல்பவர்களுக்கு, இவை இரண்டுமே கிடைக்கிறது. "ஓய்வுக்குப் பிறகாவது, ஓய்வா இருக்கணுமில்லையா" என்ற ஆசை ஞாயமானது தானே!

எனக்குத் தெரிந்த நிறைய பேர், ஐம்பது வயதுக்கு மேல் இதுபற்றி யோசிக்கத் தொடங்குகிறார்கள். ஓய்வு பெறும்போது இந்த மாதிரி இடத்துக்குச் சென்று விடுகிறார்கள். எழுபது அல்லது எழுபத்தைந்து வயதுக்கு மேல், இதுபோன்ற குடியிருப்புகளுக்குச் செல்ல தயக்கமும், அதைரியமும் தலைகாட்டுகிறது. அதனால், கை, காலில் தெம்பு இருக்கும்போது நிறைய பிரயாணங்கள், யாத்திரைகள் என்று பிடித்ததைச் செய்கிறார்கள். நாள், கிழமைகளில் குடும்பம் ஒன்று சேர்வதும், ஒரு விடுமுறைக்குக் குடும்பத்தோடு நேரம் செலவிடுவதும், "நீ சௌக்கியமா? நான் சௌக்கியம்" என்று விசாரிப்பதும் எல்லாருக்கும் பிடித்திருக்கிறது.

ஆறு மாதங்கள், மகளின் பிள்ளைப் பிறப்புக்கு அமெரிக்கா போகிறவர்கள், இங்கே ஆறு மாதம் வீட்டைப் பூட்டினால் திருட்டு பயம் என்ற கவலை இல்லை; இன்னிக்கு சமையல் செய்பவள் வரவில்லை; வீடு துடைக்க ஆளில்லை என்ற அவஸ்தை இல்லாமல், பணிகள் நடந்து விடுகின்றன. சில பெரிய வயோதிக இல்லங்களில், பச்சைப் பசேலென்ற தோட்டம், நடக்க இடம், சொற்பொழிவு, கச்சேரி, கோயில், பூஜை என்று அனைத்துமே கிடைத்து விடுகிறது. பொங்கல் முதல் கிருஸ்துமஸ் வரை எல்லாவற்றையும் சக வயதினரோடுக் கொண்டாடி விடுகிறார்கள். ஒன்றாக உட்கார்ந்து அரட்டை அடிக்கிறார்கள். இருக்கவே இருக்கிறது மெகா சீரியலும், மொபைலும்.

நடமாட கஷ்டப்படுபவர்களுக்குக் கூடவே இருக்க செவிலியர் உதவி கிடைக்கிறது; மருத்துவமனையில் சேர்த்து, குடும்பத்துக்கும் தெரியப்படுத்தி, தேவைப்பட்டால் அவர்களை வரவழைக்கிறார்கள்.

'மாற்றம் மட்டுமே மாறாதது' இல்லையா? முன்பெல்லாம் 80 வயது கொண்டாடுபவர்களும், 100 வயது வாழ்பவர்களும் குறைவாக இருந்தார்கள். இப்போது மருத்துவக் கண்டுபிடிப்புகளால், வாழ்க்கை நீடித்திருக்கிறது. அப்படி அதிகக் காலம் வாழ்பவர் களுக்கு, தனிமை தவிப்பானது; அது அவர்கள் மன நலத்தையும், அதனால் உடல் நலத்தையும் பாதிக்கக்கூடும். 'என்ன செய்தால் நிம்மதியாக, பயனுள்ள வாழ்க்கையை வாழலாம்?' என்று யோசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, நிறைய விதத்தில் தீர்வு இருக்கிறது. வயோதிகம் ஒரு சாபம் என்று நினைக்காமல், புன்னகையோடு வாழ்ந்து, இளம் தலைமுறைகளையும் வாழ்த்துவது நல்ல ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும்.

இதைப் பற்றிய சுவாரஸ்யமான யூட்யூப் காணொலி உங்களுக்காகப் பிரத்யேக மாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. 'அதுல்யா' என்ற அஸிஸ்டெட் லிவிங் பிராஜெக்ட் மூலம் 250 பேருக்கு சகல வசதிகளையும் செய்துத் தரும் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீனிவாஸனுடன் நேர்காணலும், அங்கே இருக்கும் சில பெரியவர்களோடு அளவலாவலும் காணுங்கள்.

அக்டோபர் 01, 2021 அன்று வெளியாகும் வீடியோவைப் பார்க்கத் தவறாதீர்கள்!

Video Link : https://www.youtube.com/c/kalkionline2/videos

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com