யுபிமிஸ்ம்

யுபிமிஸ்ம்

Published on
-லதானந்த்

ஆங்கிலத்தில் 'யுபிமிஸ்ம்'(Euphemism) என்று ஒன்று உண்டு. ஒரு விஷயத்தை இயன்ற அளவுக்கு உயர்வாக அழைப்பது என்று இதற்குப் பொருள் கொள்ளலாம். உயர்வு நவிற்சி மாதிரி. ஒரு விதத்தில் இது நல்லதுதான். தாங்கள் மிகுந்த கண்ணியத்துடன் அழைக்கப்படுவதான ஓர் உணர்வை இது தரும் என்பதில் சந்தேகமில்லை.

சான்றாக, 'உடல் ஊனமுற்றோர்'எனும் சொல் தற்போது, 'மாற்றுத் திறனாளி'என அழைக்கப்படுகிறதே, அதைப்போல. இன்னும் சில உதாரணங்களைப் பார்ப்போம்.

முன்பெல்லாம் அரசுப்பணிகளில், 'ப்யூன்'என்னும் பணி உண்டு. அப்பணி பிறகு, Last Grade Government Servant (LGGS), அதாவது 'கடைநிலை ஊழியர்'என அழைக்கப்பட்டது. தற்போது அப்பணிக்குப் பெயர், 'அலுவலக உதவியாளர்.'

வங்கிகளில், 'ப்யூன்'என்று சொன்னால் ரகளை செய்து விடுவார்கள். அங்கெல்லாம், "sub staff`என்று சொல்ல வேண்டும். 'மணியக்காரர்'என்ற பதவி, தற்போது, 'கிராம நிர்வாக அலுவலர்'(Village Administrative Officer)என மாறியிருக்கிறது.

ஏதாவது எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கிய பிறகு ரிப்பேரானால், அதை சரிசெய்ய வரும் மெக்கானிக்குக்கு, 'சர்வீஸ் எஞ்சினியர்'என்பது தற்காலத்துப் பொதுப்பெயர். கம்ப்யூட்டரைக் கொத்திக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் தங்களை software engineer என்று சொல்லிக்கொள்ளுவதும் வழக்கமான ஒன்றுதான்.

மேலை நாடுகளில் scavenger என்பது garbage collector ஆகிவிட்டது.'பெயரில் என்ன ராஜா இருக்கிறது?'என்கிறீர்களா? அதுவும் சரிதான். மூன்றாம் பாலினத்தவர் முன்பெல்லாம், 'அலி'என்று பரவலாக அழைக்கப்பட்டார்கள். 'அலிகளுக்கின்பம் உண்டாமோ?'எனப் பாரதியாரும் பாடியிருக்கிறார்.

சிலசமயம், 'பேடி'என்னும் வார்த்தையும் புழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது. டி. ராஜேந்தர் அடிக்கடி சொல்லுவார், 'இந்த ராஜேந்தர் ஒரு தாடி! ஆனால், இல்ல பேடி!'மூன்றாம் பாலினர் காலக்கிரமத்தில், 'அரவாணிகள்'என அழைக்கப்பட வேண்டும் என விரும்பி அவ்வாறே அழைக்கப்பட்டனர். தமிழ்ப் பத்திரிகைகள் இப்பதத்தை பிரபலப்படுத்தின.

கொஞ்ச காலம் போக, 'திருநங்கைகள்'என அழைக்க வேண்டும் எனச் சொல்லப்பட்டு, அவ்வாறே இவர்கள் அழைக்கப்பட்டு வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி இவர்கள் தங்களை, 'பெண் உணர்வு கொண்ட ஆண்கள்'என அழைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

எது எப்படியோ, ஷேக்ஸ்பியர், 'ரோமியோ அண்ட் ஜூலியட்'நாடகத்தில் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது :

"A rose by any other name would smell as sweet"

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com