வந்தாள் மகாலட்சுமியே!

வந்தாள் மகாலட்சுமியே!
Published on
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

* ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், புது அக்ரஹாரத்தில் அஷ்டலக்ஷ்மி மண்டபம் உள்ளது. இதில் எட்டு திசைகளுக்கும் ஒவ்வொரு லக்ஷ்மியாக பதினாறு லக்ஷ்மிகள் சோடச லக்ஷ்மிகளாக உள்ளனர்.

* திருநெல்வேலி மாவட்டம், நெல்லையப்பர் கோயிலில் இரு வரிசையில் உள்ள அஷ்டலக்ஷ்மிகளுக்கு நடுவில் கஜலக்ஷ்மி கருடன் மீது அமர்ந்து காட்சி தருகிறாள். நெல்லை சந்திப்பில் உள்ள ஆஞ்சனேயர் கோயிலில் கனகமகாலக்ஷ்மி அருள்பாலிக்கிறாள்.

* குஜராத்தில் லக்ஷ்மியை, 'வித்யா லக்ஷ்மி' என்பர். வித்யா லக்ஷ்மியின் கையில் வீணை இருக்கும். வங்காளத்தில் வீர லக்ஷ்மியாகவும், ஒடிசாவில் சந்தானலக்ஷ்மியாகவும், பீகாரில் சித்த லக்ஷ்மியாகவும், அஸ்ஸாமில் ஆதிலக்ஷ்மியாகவும், திரிபுராவில் சௌம்யலக்ஷ்மியாகவும், மத்தியப் பிரதேசத்தில் யோகலக்ஷ்மியாகவும், அரியானா, பஞ்சாபில் தைரியலக்ஷ்மியாக வும், ராஜஸ்தானில் தான்யலக்ஷ்மியாகவும் மகாலக்ஷ்மியாகவும் வணங்குகிறார்கள். மும்பையில் உள்ள மகாலக்ஷ்மி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் தங்கமயமாக ஜொலிக்கிறாள் மகாலக்ஷ்மி.

* மைசூர், சென்னராயப்பட்டினம் நூக்கிஹல்லி என்ற இடத்திலுள்ள மகாலக்ஷ்மி எட்டுக் கரங்களுடன் நடனமாடும் கோலத்தில் காட்சி தருகிறாள்.

* வேத காலத்தில் மகாலக்ஷ்மி ஸ்ரீ வசுந்தரா, ஸ்ரீ பிருத்வி என்ற பெயர்களால் செல்வத்தின் அதிபதியாகக் குறிப்பிடப்பட்டாள்.

* மகாலக்ஷ்மிக்கு பிடித்தமான மலர்கள் செந்தாமரையும் செவ்வந்தியும் ஆகும். செல்வம் வற்றாமல் இருக்க இம்மலர்களைக் கொண்டு பூஜை செய்யலாம்.

* கிணத்துக்கடவு முப்பெருந்தேவியர் ஆலயத்தில் மிகப்பெரிய அளவில் பொம்மை கொலு வைத்து நவராத்திரியைக் கொண்டாடுகிறார்கள். மகாலக்ஷ்மியின் முன்பு உள்ள மேருவிற்கு அர்ச்சனை செய்யப்பட்ட குங்குமம், பக்தர்களுக்குப் பிரசாதமாகத் தரப்படும்.

* வலம்புரிச் சங்கில் மகாலக்ஷ்மி வாசம் செய்வதால், இதனை பூஜிப்பதால் செல்வ வளம் பெருகும்.
– ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி

—————–

மகாலெட்சுமி வழிபாடு!

வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை நினைத்து சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடுவதும், லட்சுமி ஸ்தோத்திரம் பாராயணம் செய்து வழிபடுவதும் விசேஷமானது. நீண்டகால கடன் தொல்லையில் இருந்து விடுபட மகாலட்சுமி வழிபாடு சிறந்தது.

ஒவ்வொரு வெள்ளி அன்றும் லட்சுமிதேவியை வணங்கி,கற்பூரத்தை காட்டி வர பணமும், தானியமும் குறையாத அருளை பெறலாம். துன்பங்கள் விலகும். எதிர்மறை சக்திகள் நீங்கி,நேர்மறை ஆற்றல் வீட்டிற்குள் வரும்.

வெள்ளிக்கிழமைகளில் தேன் கலந்த பாயாசம் படைத்து வணங்கி, குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். இதன்மூலம் பணப் பஞ்சம் தீரும்.

மாலை லட்சுமி ஸ்தோத்திரத்தை ஓதுவது சிறந்தது. மந்திரத்தை படிக்கும் போது வீட்டின் கதவை திறந்து வைத்திருக்க வேண்டும். விஷ்ணு புராணத்தின் கூற்றுப்படி, லட்சுமி ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வது மிகச்சிறந்த பலனை தரவல்லது.
– செளமியா சுப்ரமணியன், சென்னை

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com