வாசகர் ஜமாய்க்கிறாங்க

வாசகர் ஜமாய்க்கிறாங்க
Published on

ஆலமர விநாயகர்

* கும்பகோணம், சாக்கோட்டை கிராமம் அருகேயுள்ள மலையப்ப நல்லூர் எல்லையில் ஆலமர விநாயகர் காட்சி அளிக்கிறார். இந்த ஆலமரம் மிகவும் பழைமை வாய்ந்தது. இந்த மரம் வரிசையாகப் பிளவுபட்டிருப்பதால் இயற்கையிலேயே, குகை சன்னிதி போன்று அமைந்துள்ளது. இந்த ஆலமரம், கோயில் கோபுரம் போலவே அமைந்து, விநாயகரை மழை, வெயில் தாக்காத வகையில் காக்கிறது.

மிளகு பிள்ளையார்

* சேரன்மாதேவியில், கன்னடியன் கால்வாயில் தண்ணீர் குறைந்துபோனால், குளக்கரை விநாயகருக்கு மிளகு அரைத்துத் தடவி அபிஷேகம் செய்வார்கள். இவ்வாறு செய்தால், மழை பெய்து கால்வாயிலும் தாமிரபரணி நதியிலும் நீர் பெருகும் என்பது நம்பிக்கை. இதனாலேயே இந்தப் பிள்ளையாருக்கு மிளகுப் பிள்ளையார் என்று பெயர்.

– எஸ்.ராஜம், திருச்சி

இரட்டை பிள்ளையார்

* நெல்லை மாவட்டம், சீவலப்பேரியில் உள்ள இரட்டைப் பிள்ளையார் கோயில் கருவறையில், மாப்பிள்ளைக் கோலத்தில் இரண்டு பிள்ளையார்கள் தரிசனம் தருகின்றனர். இவர்களை வழிபட்டால் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறுகின்றன.

சங்கீத பிள்ளையார்

* செங்கல்பட்டு மாவட்டம், ஆனூரில் உள்ள அஸ்திரபுரீஸ்வரர் கோயில் மதிலில் சங்கீத விநாயகர் காட்சி தருகிறார். அமர்ந்த கோலத்தில் வலக்கையால் தொடையில் தாளம் போடும் பாவனையில் காட்சி தருகிறார். ஏழு நாட்கள் தொடர்ந்து இவரை, நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் சங்கீதக் கலையில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை.

முதல் பிள்ளையார்

* சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்தான் தமிழ்நாட்டின் முதல் பிள்ளையார். இந்த கணபதி சிலையை, செதுக்கிய சிற்பியின் பெயர், 'எக்காட்டூர் கோன் பெருபரணன். இடுப்பில் ஒரு கரம் ஊன்றி, வலக்கரத்தில் மோதகம் தாங்கி, துதிக்கை வலப்புறம் சுழித்ததாக 1.88 மீட்டர் உயரம் உள்ளவர் இந்த விநாயகர்.

நரமுக விநாயகர்

* திருவாரூர் மாவட்டம், திலதர்ப்பணபுரியில் உள்ள ஸ்ரீ சுவர்ணவல்லி அம்பிகா சமேத ஸ்ரீ முக்தீஸ்வர சுவாமி கோயிலின் தனிச் சன்னிதியில் யானை முகமோ, தும்பிக்கையோ இன்றி மனித முகத்துடன் நரமுக விநாயகர் காட்சி தருகிறார். யானை முகனாகப் பிறப்பெடுக்குமுன் அன்னை பார்வதி தேவியால் உருவாக்கப்பட்ட ரூபம் இதுவாகும்.

– ஆர்.பத்மப்ரியா, திருச்சி

சூடிக்கொடுத்த விநாயகர்

* ஸ்ரீவில்லிபுத்தூரில் வடக்கு ரதவீதியில் சூடிக்கொடுத்த விநாயகர் கோயில் கொண்டுள்ளார். ஆண்டாளுக்கு, 'சூடிக் கொடுத்த சுடர்க்கொடி'என்ற பெயர் இருப்பது போல, இந்த விநாயகருக்கு இப்பெயர் வந்ததற்கு ஒரு நிகழ்ச்சி காரணமாகிறது. திருப்பதி பிரம்மோத்ஸவத்தின் போது, ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை, வேங்கடாசலபதிக்கு சூட்டுவார்கள். அதற்காக, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மாலையைக் கொண்டு செல்லும்போது, இந்த விநாயகர் கோயிலில் வைத்து பூஜை செய்த பின்பே திருப்பதிக்கு எடுத்துச் செல்வார்கள்.

– ஆர்.ராஜலட்சுமி, ஸ்ரீரங்கம்

பொங்கல் பிள்ளையார்

* சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூர் அருகே உள்ளது வேலங்குடி. இங்கு விநாயகரை முனீஸ்வரர் அம்சமாக வழிபடுகின்றனர். தினமும் இவருக்குப் பொங்கல் வைத்து பூஜை செய்கின்றனர். எனவே இவர், 'பொங்கல் பிள்ளையார்'என அழைக்கப்படுகின்றார்.

– ஜானகி ரங்கநாதன், சென்னை

விருந்துண்ணும் பிள்ளையார்

* பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகருக்கு உச்சிகால வேளையில் பலவிதமான கறிகாய்களுடன் உணவு தயாரித்து நிவேதனம் செய்கின்றனர். மனிதர்கள் இலை போட்டுச் சாப்பிடுவதுபோல், விதவிதமான உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு, தட்டுகளில் நிரப்பி, மேளதாள வாத்தியங்கள் முழங்க, நைவேத்தியம் செய்வது விசேஷமாகும். இங்குள்ள விநாயகர் மனித உருவில் இருப்பதால் அவருக்கு மனிதர்கள் உண்ணும் உணவையே படைத்து நிவேதனம் செய்யப்படுகிறது.

விருட்சிக பிள்ளையார்

* தஞ்சாவூர் மாவட்டம், மருத்துவக்குடியில் உள்ள ஸ்ரீ ஐராவதீஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் விருச்சிக விநாயகரின் திருமேனி முழுவதும் விருச்சிகத்தின் (தேள்) செதில் போன்ற அமைப்புள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ சாட்சி கணபதி

* ஆந்திர மாநிலம், ஸ்ரீசைலம் அருள்மிகு மல்லிகார்ஜுனர் கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்பும்போது, சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு பிள்ளையார் கோயிலுக்குச் சென்று தங்களின் வருகையை பக்தர்கள் பதிவு செய்ய வேண்டுமாம். பக்தர்கள் ஸ்ரீசைலத்துக்குச் சென்று வந்ததற்கு இந்தப் பிள்ளையாரே சாட்சி என்பதால் இவரை, 'ஸ்ரீ சாட்சி கணபதி'என்கின்றனர்.

நெய்யப்ப கணபதி

* கேரள மாநிலம், கொட்டாரக்கராவில் உள்ள படிஞ்ஞாறு பகவதி கோயில் கணபதிக்கு, 'நெய்யப்ப கணபதி' என்று பெயர். இங்கு விநாயகப்பெருமான் நெய் பிரியராகக் காட்சித் தருகிறார்.

வெள்ளை விநாயகர்

* திருப்பனந்தாள், காசி திருமடத்து வளாகக் குளத்தின் நடுவில், அமிர்தசரஸ் பொற்கோயில் போல பொலிவுறக்காட்சி தருகிறது வெள்ளை விநாயகர் திருக் கோயில். இந்தக்கோயில் கோபுரம் வடநாட்டு (காசி) பாணியில் கட்டப்பட்டு இருக்கிறது. 1957ஆம் ஆண்டு காசியிலிருந்து தருவிக்கப் பட்ட சலவைக்கல்லால் (வெண்பளிங்கு) இந்தப் பிள்ளையார் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப் பிடத்தக்கது.

மங்கள ஸித்தி விநாயகர்

* பேரளம் அருகிலுள்ள கீழமாங்குடியில் அருள்பாலிக்கும் மங்களஸித்தி விநாயகரின் வயிற்றுப்பகுதி, வயதானவர்களுக்கு இருப்பதைப் போன்று, சதை மடிப்புடன் காணப்படுகிறது. இவர் அபிஷேக வேளையில் முதியவர் தோற்றத்திலும், முழு அலங்காரத்தில் இளமைத் தோற்றத்திலும் காட்சி தருகிறார். முழு அலங்காரம் செய்து முடித்ததும் இவரது திருமேனியில் வியர்வைத் துளிகள் அரும்பக் காண்பது ஓர் அதிசயம்.

திசை வென்ற விநாயகர்

* நாகர்கோவில் நகரின் ஒரு பகுதியான கோட்டாற்றில் புராண வரலாற்றுச் சிறப்புமிக்க, 'சென்ற திசை வென்ற விநாயகர்'கோயில் உள்ளது. இந்த விநாயகரை வேண்டி வழிபட்டு உயர்கல்விக்கு, வேலைக்கு என்று பிற மாவட்டங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் சென்றால் வெற்றி கிட்டும் என்பது நம்பிக்கை.

ஏலேலோ கணபதி

* காஞ்சி, காமாட்சி அம்மன் கோயில் அமைந்திருக்கும் தெருக்கோடியில் உள்ள விநாயகரின் திருப்பெயர் ஏலேலோ விநாயகர். காமாட்சி அம்மன் கோயில் ராஜகோபுரத்தை எழுப்பும் முன்னர், இவரை வழிபட்டபிறகு, 'ஏலேலோ… ஏலேலோ'என்றவாறு சாரத்தின் மீது கோபுர உச்சிக்குக் கற்களை இழுத்துச் சென்றதால் இவருக்கு இப்பெயர்.

– ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com