வாழ வழியுண்டு பூமியில்!

வாழ வழியுண்டு பூமியில்!
Published on
– ஆர்.மீனலதா, மும்பை

உலக முதியோர் தினம் (01.10.2021)

"தான் பிடிச்ச முயலுக்கு மூணு கால்னு சாதிக்கிறது!''

"அந்தக் காலத்துப் பாட்டுகளைச் சத்தமாகப் பாட வேண்டியது!''

"எப்பப் பார்த்தாலும் பழங்கதை பேசறது! அறிவுரைகளை அள்ளி விடறது!"

"அப்பப்பா! போதும்டா சாமி!"

யாரைக் குறித்து இத்தகைய விமரிசனங்கள்? முதியவர்களின் செயல்களை, இளசுகள் விமரிசிப்பதில் இருந்து சில வகைகள் இவை. இதை விட அதிகமும் உண்டு.

சமீபத்திய உலக சுகாதார நிறுவன புள்ளி விபரத்தின்படி, சர்வதேச அளவில் அறுபது வயதிற்கு மேற்பட்டவர்கள் சுமார் அறுபது கோடி பேர் உள்ளனர் எனவும், 2025ல் இது அதிகமாகி, 2050ஆம் ஆண்டில் 200 கோடியைத் தாண்டி விடும் எனக் கூறப்படுகிறது.

வளர்ச்சி அடைந்த நாடுகளில் முதியோர்களுக்கான மருத்துவம்; ஊட்டச்சத்து, சுத்தம் – சுகாதாரம் போன்ற பராமரிப்பு; பொருளாதார உயர்வு போன்றவைகள் உயர்ந்து வருவதன் காரணம், வாழ்நாள் அளவும் உயர்ந்து கொண்டு செல்கிறது. வாழ வயது ஒரு தடையில்லை.

எண்பது வயதிலும் பலர் சுறுசுறுப்பாகப் பணி செய்து வருகின்றனர். அவரவர் தேவைகளை பிறர் உதவியின்றி கவனித்துக் கொள்கிறார்கள் என்றாலும், முதுமையில் பல்வேறு உடல் நலக்கோளாறுகள் ஏற்படுவதைத் தனிப்பட்ட விதமாகப் பார்க்காமல், சமூகச் சிக்கலாகப் பார்க்க வேண்டியது தேவை. ஏனெனில், இன்றைய இளைஞர்கள் நாளைய முதியவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

முதியோர்கள் செய்யத் தேவையானவை :

* நோய்த் தடுப்புக்கான பரிசோதனைகளை வருடந்தோறும் மேற்கொள்ளுதல்.

* உணவில் பழங்கள், காய்கறிகள் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்வதோடு புரதம், உயிர்ச்சத்து நிறைந்த சமச்சீர் உணவை உண்ணுதல்.

* நல்லவற்றை நினைத்து உற்சாகமாக இருத்தல்.

* New Normal வாழ்க்கையை பழகிக்கொள்ளுதல்.

* எடை அதிகரிக்காமல் இருக்க, நடை பயிற்சி, யோகா, தியானம் ஆகியவற்றை முடிந்தவரை செய்தல்.

* புகை, புகையிலை, மது மற்றும் அரிசி, சீனி, உப்பு ஆகிய மூன்று வெள்ளைப் பொருட்களைத் தவிர்த்தல்.

* உடலுக்கும், மனதுக்கும் போதுமான ஓய்வு கொடுத்தல்.

* பிடித்த நடவடிக்கைகள்; சமூக – கலாசார ஈடுபாடுகள் மேற்கொண்டு, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்வாக இருத்தல்.

* மருத்துவர் அறிவுரைப்படி எடுத்துக்கொண்டிருக்கும் மருந்துகளை, அவரது ஆலோசனை யின்றி திடீரென நிறுத்துதல் அபாயம்.

* தேவைப்படும் நேரங்களில் குடும்ப மருத்துவர் ஆலோசனையைப் பெற சோம்பல் படாமல் இருத்தல்.

* வள வளவென பிறர்க்கு அறிவுரைகளை வழங்காமல் இருத்தல்.

* மனதை அலட்டிக்கொள்ளாமல் வாழ்தல்.

* தேவையற்ற எண்ணங்களை நீக்குதல்.

குடும்பத்தினரின் பங்களிப்பு :

குடும்பத்தினரும், வீட்டில் உள்ள இளைய சமுதாயத்தினரும் முதியோர்களுக்கு ஆதரவாக இருந்து, அவர்களை விலை மதிக்க முடியாத பொக்கிஷமாக அங்கீகரிப்பது, மரியாதை அளிப்பது, அரை மணி நேரம் செலவிட்டுப் பேசுவது போன்றவை மிக மிக அவசியம்.

முதியோர்களுக்கு புத்துணர்ச்சி ஏற்பட இத்தகைய செயல்கள் உதவும்.

முதியோர்களானாலும் சரி; இளசுகளானாலும் சரி; 'இருக்கும் உறவு இறக்கும் வரையில்!இருக்கும் பொருள் இழக்கும் வரையில்!' என்பதை நினைவு கூர்ந்து, எதற்கும் 'நான்' என்றெண்ணாமல், 'நாம்' என்று ஒற்றுமையாக இணைந்து வாழ்வது, செயல்படுவது எப்போதும் நன்மை பயக்கும்!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com