வாழ்வின் அர்த்தம்!

வாழ்வின் அர்த்தம்!
Published on

படித்ததில் பிடித்தது

ஏ.எஸ்.கோவிந்தராஜன்

போர்க்களத்தில் மகன் அபிமன்யு தனது கண் முன்னே இறப்பதைப் பார்த்து கேவிக் கேவி கண்ணீர் விட்டு அழுதான் அர்ஜுனன். அதைப் பார்த்து சாரதியாக இருந்த கண்ணனும் கேவிக் கேவி கண்ணீர் விட்டு அழுதான்.

கண்ணன் அழுவதைப் பார்த்த அர்ஜுனன், கண்ணனை இறுகப் பற்றிக் கொண்டு, "கண்ணா,  அபிமன்யு உனக்கு மருமகன் அல்லவா? அதனால்தான்  நீயும் துக்கம் தாள முடியாமல்  அழுகிறாயோ?" என்று கேட்டான்.

"இல்லை அர்ஜுனா! நான் துக்கம் தாளாமல் அழவில்லை. உனக்கு கீதையை உபதேசம் செய்ததற்காக வருத்தப்பட்டு அழுகிறேன்" என்றான் கண்ணன்.

அர்ஜுனன், "கண்ணா நீ கடவுள். உனக்கு உறவு, பற்று, பாசம், பந்தம் எதுவும் கிடையாது. ஆனால், என்னால் அப்படி இருக்க முடியாது."

அதற்கு கண்ணன், "உறவு, பற்று, பாசம் எல்லாம் உடலில் உயிர் இருக்கும் வரைதான் அர்ஜுனா" என்றார்.

"அப்படிச் சொல்லாதே கண்ணா. மானிடர்கள் மறைந்தாலும் பந்த பாசம் அவர்களை விட்டு போகாது" என்றான் அர்ஜுனன்.

"அப்படியா…? இப்பொழுதே வா என்னோடு. சொர்க்கலோகம் செல்லலாம்! அங்கேதான் இறந்த உனது மகன் அபிமன்யுவின் ஆன்மா அலைந்து கொண்டிருக்கிறது" என்று கூறி அர்ஜுனனை சொர்க்கலோகம் அழைத்துச் சென்றான் கண்ணன்.

சொர்க்கலோகத்தில் ஒளிப்பிழம்பு வடிவுடன் இருந்தான் அபிமன்யு. அவனை அடையாளம் கண்டு கொண்ட அர்ஜுனன், "என் மகனே அபிமன்யு" என்று பாசத்தோடு கட்டி அணைக்கப்போனான்.

அணைக்கப்போன அர்ஜுனனை தடுத்த அபிமன்யுவின் ஆன்மா, "ஐயா நீங்கள் யார்?  என் போன்ற ஆன்மாவுக்கு உறவு என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. தயவு கூர்ந்து என்னை விட்டு விலகிச் செல்லுங்கள்" என்றது.

அதைக் கேட்டு அதிர்ச்சியாகி நின்ற அர்ஜுனனிடம், "பார்த்திபா… பார்த்தாயா உறவு, பாசம், பந்தம், உணர்வு, கோபம், அன்பு, காமம் யாவும் உடலில் உயிர் இருக்கும் வரைதான். உடலை விட்டு உயிர் போய் விட்டால், ஏதும் அற்ற உடலுக்கும் உணர்வு இல்லை. அதை விட்டுப்போன ஆன்மாவுக்கும் உணர்வில்லை. நீ அழ வேண்டும் என்றால் அதோ பூவுலகில் போர்க்களத்தில் உன் மகன் அபிமன்யுவின் உடல் கட்டை இருக்கிறதே. அதைக் கட்டிப்பிடித்து அழு. உன் உணர்ச்சியெல்லாம் அதில் கொட்டி அழு. ஒரு உயிர் பிறப்பிற்கும் நீ காரணம் அல்ல. பிறந்த  உயிர் இறப்பிற்கும் நீ காரணம் அல்ல என்பதை நன்கு உணர்ந்துகொள். படைத்தவன் எவனோ அவனேதான் படைத்ததை ஒரு நாள் அழிக்கிறான். நடக்கும் யாவிற்கும் நீ ஒரு கருவியே. செயல்கள் யாவும் படைத்தவன் செயலே என்பதை உணர்ந்து செயல்படு. அதுவே வாழ்வின் அர்த்தமாகும்" என்று கூறி கண்ணன் புன்னகைத்தான்.

ஆடி அடங்கும் வாழ்க்கை. இதில் ஆறடி நிலம் கூட சொந்தம் இல்லை. இதைப் புரிந்துகொண்டு வாழப் பழகினால் போதும். பிறந்த இந்தப் பிறப்பில் நீ செய்ய வேண்டிய நியாயமான குடும்ப கடமையை உறுதியாக நின்று செய்.

தன்னலம் கருதாத மற்றவர்களுக்கான உனது அர்ப்பணிப்பு மட்டுமே உன் பெயர் சொல்லி நிலையாக உலகில் வாழும். இதை உணர்ந்தால் மனித வாழ்வின் துன்பங்கள் நீங்கும்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com