0,00 INR

No products in the cart.

​மன வேற்றுமை தீர்க்கும் மகேசன்!

மீனாக்ஷி ரவிசேகர்

நெல்லை மாவட்டம், தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் பச்சைப்பட்டு விரித்தாற்போல் பூத்துக் குலுங்கும் நெல்வயல்களின் மத்தியில் அமைந்த காருகுறிச்சி திருத்தலத்தில் ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ குலசேகரநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. நான்குபுறமும் உயர்ந்த திருமதில் சூழ, கிழக்கு நோக்கி இக்கோயில் உள்ளது. கிழக்கு நோக்கியே பிரதான வாயில் இருந்தபோதிலும் பக்தப் பெருமக்கள் தெற்கு வாசலையே தொன்று தொட்டு பயன்படுத்தி வருகிறார்கள். இந்த வாசல் சாலக்கோபுர அமைப்புடன் விளங்குவது சிறப்பு.

கோயிலின் உள்சுற்று முழுவதும் வாசமலர்கள் பூத்துக்குலுங்கும் பூங்காவனமாக செழித்துக் காணப்படுகிறது. வசந்த மண்டபம், முக மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்பில் பிற்காலப் பாண்டியர் கால கலை அம்சத்தில் கற்றளியாக கோயில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வசந்த மண்டபத்தில் உத்ஸவங்கள் நடைபெறுவது வழக்கம். இதனையடுத்து, முகமண்டபத்து வடபுறம் அருள்மிகு சிவகாமி அம்பாள் சன்னிதி உள்ளது. கருணையை வெளிப்படுத்தும் அழகிய தோற்றத்தில் எழிலான கருணாம்பிகையாக அம்பாள் சிவகாமி வலக்கையில் நீலோத்பவ மலர் ஏந்தியபடியும், இடக்கையை கீழே தொங்கவிட்டபடியும் சாந்த சொரூபிணியாக, சக்தி வடிவமாக திவ்யமாய் காட்சியளிக்கிறாள். அம்பாள் கருவறை விமானம் கஜப்ருஷ்ட கலை அம்சத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மகாமண்டப வடபுறம் ஆனந்தக் கூத்தனான நடராஜர், சிவகாமி அம்மன் சன்னிதி உள்ளது. அர்த்த மண்டப வாசலில் விநாயகர், சுப்பிரமணியர் விக்ரகங்கள் உள்ளன. கருவறை மூலவராக லிங்கேசுவர மூர்த்தியாக அருள்மிகு குலசேகரநாதர் சான்னித்திய மிக்க தெய்வமாக எழுந்தருளியுள்ளார். இந்தப் பரமனுக்கு, ‘வம்ச விருத்தீஸ்வரர்’ என்ற சிறப்புப் பெயரை சுற்றுவட்டார மக்கள் சூட்டி அழைக்கின்றனர். இதற்கு செவிவழிச் செய்தியாக ஒரு வரலாற்றுச் சம்பவம் பக்திபூர்வமாய் இப்பகுதி மக்களால் நம்பப்பட்டு வருகிறது.

முன்னொரு காலத்தில் இப்பகுதியை ஆண்டு வந்த சிற்றரசன் ஒருவனுக்கும், அவனது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித்தனியே பிரிந்து வாழ்ந்திருந்தனர். அவ்வேளையில் மன நிம்மதி இழந்து நீதி நிர்வாகத்தில் நாட்டமின்றி மன அமைதி வேண்டி ஓடிக்கொண்டிருந்தான் அந்த அரசன். அந்த வேளையில்தான் இத்திருக்கோயில் பரமனை தரிசித்து அகம் குளிர்ந்தான். சான்னித்திய மிக்க தெய்வம் இத்தலத்தில் எழுந்தருளியிருப்பதை மனப்பூர்வமாக உணர்ந்தான். அதேவேளையில் அவனை விட்டுப் பிரிந்து வாழ்ந்த மனைவியும் ஒரு கட்டத்தில் தன் தவறை உணர்ந்து மனம் மாறினாள்.

மறுபடியும் கணவனுடன் மகிழ்வோடு கூடினாள். இனிய இல்லறம் நடத்தியதன் பலனாக அடுத்த ஆண்டில் அம்மன்னனுக்கு வாரிசு ஒன்று பிறந்து, அவன் குலம் தழைக்க வழி ஏற்பட்டது. அதனால் நன்றிப் பெருக்கோடு குலசேகர நாதருக்கு அம்மன்னன் பல திருப்பணிகள் செய்து முடித்தான். மன்னன் வழியைப் பின்பற்றி நாட்டு மக்களும் இப்பரம் பொருளை சந்தான பாக்கியம் தந்தருளும் நாயகனாக தரிசித்து மகிழ்ந்தனர்.

ந்த வரலாற்று சம்பவத்தோடு தொடர்பு உள்ளது போல், தீர்க்க சுமங்கலி பாக்கியத்திற்காகவும், மனமொத்த தம்பதியராய் வாழவும் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் சுக்கில பட்சமும், துவாதசி, திரயோதசி திதிகளில் பக்தர்கள் சூழ, துளசி விவாக உத்ஸவம் இக்கோயிலில் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. கணவன், மனைவி மனமொத்த தம்பதியராய் வாழவும், கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்பவர்கள் மனம் மாறி ஒன்றாய் கூடி வாழவும் நடத்தப்படுகிற பரிகார விழாவாக இது நடத்தப்பட்டு வருகிறது.

இதுபோன்ற பரிகாரங்களுக்கும், இதர மனக்குறைகளுக்கும் இத்தலத்திற்கு நம்பிக்கையோடு நாடிவரும் பக்தர்கள் முதல் கட்டமாக சங்கடஹர சதுர்த்தி நாளில் யாகம் வளர்த்து கன்னி மூலை கணபதியான ஆனந்த விநாயகருக்கு சிறப்பு அலங்கார, அபிஷேகம் செய்து வணங்குகின்றனர். இதனைத் தொடர்ந்து மூலவர் குலசேகரநாதரிடம் தங்கள் கோரிக்கையை கண்ணீர் மல்க நம்பிக்கையோடு எடுத்துச் சொல்கின்றனர். சிறிது காலத்திலேயே அடியார்களின் கோரிக்கைகள் யாவும் வேண்டியது வேண்டியபடி நிறைவேறி விடுகிறது. இத்தகைய பரிகாரப் பலனுக்கு நேர்த்திக்கடனாக பக்தர்கள் இறைவனுக்கு சிறப்பு அலங்கார, அபிஷேகம் செய்து மகிழ்கின்றனர். இந்த காரணத்தாலேயே சங்கடஹர சதுர்த்தி நன்னாளில் திரளான பக்தர்கள் அதிகாலை வேளையிலேயே இக்கோயில் சன்னிதியில் கூடி நிற்கிறார்கள். எனவே, தொன்றுதொட்டு இத்தலம் பிரிந்த தம்பதியர் மீண்டும் கூடி வாழவும், சந்தான பாக்கியத்திற்கும் ஒரு பரிகாரத் தலமாக நம்பிக்கையோடு வணங்கப்பட்டு வருகிறது.

தினசரி நான்கு கால பூஜை நடைபெறும் இக்கோயில் மூலவர் விமானம் வேசர வடிவில் அமைந்துள்ளது. ஐப்பசி மாதம் உத்திர நட்சத்திர நன்னாளில் சுவாமிக்கு திருக்கல்யாண உத்ஸவம் விமரிசையாக நடைபெறும். ஐந்து நாட்கள் கொண்டாடப்படும் இந்த உத்ஸவத்தில் முதல் மூன்று நாட்கள் ஊஞ்சல் உத்ஸவமும், நான்காம் நாள் சுவாமி புறப்பாடும், ஐந்தாம் நாளில் தீர்த்தவாரியும் நடைபெறுகின்றன.

இது தவிர, சித்திரை தமிழ் வருடப் பிறப்பு, பெளர்ணமி தோறும் அம்பாள் சிவகாமிக்கு சிறப்பு அலங்கார, அபிஷேகம், மாதாந்திர சுக்கில பட்ச நன்னாளில் சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், வைகாசி விசாகம், ஆனந்தக் கூத்தருக்கு ஆண்டுக்கு ஆறு கால அபிஷேகம், ஆடிப்பூரத்தில் அம்பாளுக்கு வளைகாப்பு, ஆடி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை மகா தீபம், கார்த்திகை சோமவாரம் தோறும் சிறப்பு அலங்காரம் மகாதேவாஷ்டமி, மார்கழி முப்பது நாட்கள் திருப்பள்ளியெழுச்சி, ஆருத்ரா தரிசனம், தை மாத ரோஹிணி நட்சத்திர நன்னாளில் வருஷாபிஷேகம், மகாசிவராத்திரி, பிரதோஷம் போன்ற விழாக்கள் பக்தர்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.

அமைவிடம் : சேரன்மகாதேவி வழியாக திருநெல்வேலி பாபநாசம் செல்லும் சாலையில் 26கி.மீ. தொலைவில் உள்ளது காருகுறிச்சி திருத்தலம்.

தரிசன நேரம் : காலை 7 முதல் 9மணி வரை. மாலை 5 முதல் இரவு 7.30 மணி வரை.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

பிரார்த்தனை பரிகாரத் தலங்கள்!

0
- டி.ஜெயலட்சுமி பூர்வஜென்ம தோஷ நிவர்த்தி வழிபாடு! சென்னை, தங்கசாலையையும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலையையும் இணைக்கும் இடத்தில் உள்ளது சின்னக்கடை மாரியம்மன் என்ற ரேணுகா தேவி ஆலயம். இந்தக் கோயில் சுமார் 250 ஆண்டுகளுக்கு...

தச சாந்தி கர்மாக்கள்!

0
- ச.தண்டபாணி இந்து சமயத்தில் பிறந்த ஒவ்வொருவரும் அவர்களுடைய வாழ்க்கையில் பிறந்ததிலிருந்து வாழ்நாள் முழுவதும் (நூறு வயது வரை வாழ்கிறார்கள் என்று வைத்துக்கொண்டால்) செய்துகொள்ள வேண்டிய சாந்தி கர்மாக்கள் என்னென்ன என்பதைக் குறித்துக் காண்போம். பொதுவாக,...

பரிகாரங்கள் பத்து!

0
- அபர்ணா சுப்ரமணியம் புற்றுநோயை குணமாக்கும் தல விருட்சம்! திருப்பராய்த்துறை மூலவர் பராய்த்துறைநாதர் அமர்ந்துள்ள கருவறைக்குப் பின்புறம் பராய் மரம் உள்ளது. புற்று நோய் மற்றும் எளிதில் குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாய்க்கிழமைதோறும் இந்த...

கார்மேகவண்ணனின் கண்மலர் பூஜை!

0
- டி.எம்.இரத்தினவேல் சிவபெருமானின் பூஜைக்காக பகவான் மகாவிஷ்ணு தமது கண்ணையே தியாகம் செய்த நெகிழ்ச்சியான பக்தி வரலாறு, உள்ளத்தை உருக வைப்பதாகும். ஒரு சமயம் சலந்தரன் எனும் அரக்கன் பகவான் மகாவிஷ்ணுவின் சக்கராயுதத்தை பறித்துச்...

ஸ்ரீ லக்ஷ்மி குபேர தீப வழிபாடு!

வீட்டில் செல்வம் பெருகவும், சேர்ந்த செல்வம் கரைந்திடாமல் காக்கவும் செய்ய வேண்டிய பூஜையே, ஸ்ரீ லக்ஷ்மி குபேர தீப வழிபாடு. இந்த பூஜையினால் செல்வத்திற்கு அதிபதியான குபேரனின் அருளையும் மகாலக்ஷ்மியின் அருளையும் ஒருசேரப்...