பயண அனுபவம்: பத்மினி பட்டாபிரமன்..ஆஸ்திரேலியா நாடா அல்லது கண்டமா?.பல ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியா செல்ல தீர்மானித்த போது எனக்கு இந்த சந்தேகம் எழுந்தது… இரண்டும்தான்.. தென்கோளத்தில் இருக்கும் உலகிலேயே சிறிய கண்டம்… இந்து மகா சமுத்திரம் மற்றும் பசிஃபிக் சமுத்திரம் சூழ்ந்த தீவு கண்டம். அழகான நாடு. 65,000 வருடங்களுக்கு முன்பு இங்கே மனித இனம் வாழ்ந்திருக்கலாம் என்றும், அபாரிஜின்ஸ் அனப்படும் ஆஸ்திரேலிய பழங்குடியினர் ஆப்பிரிக்காவிலிருந்து பல்லாயிரம் வருடங்களுக்கு முன் இங்கே இடம் பெயர்ந்து வந்திருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது..1606 ல் டச்சுக்காரர்கள் கடல் வழி வந்து இந்த மண்ணில் இறங்கிய முதல் ஐரோப்பியர்கள் என்றும் அவர்கள்தான் கடற்கரை வரைபடத்தை (Coastline Map) உருவாக்கினார்கள் என்றும் ஒரு வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது. 1770 ல் பிரபல ஆங்கிலேய மாலுமி, ஜேம்ஸ் குக்தான் இங்கே குடியிருப்பை நிறுவினார் என்றும் சொல்லப்படுகிறது. இவர் 1770களில் மூன்று முறை பசிஃபிக் மகா சமுத்திரத்தில் கப்பல் பயணம் செய்திருக்கிறார என்றும், குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு வந்திருக்கிறார் என்றும் பயணக் குறிப்புக்கள் மூலம் தெரிய வருகிறது..அடிலெய்ட், மெல்பர்ன், சிட்னி, க்வீன்ஸ்லாண்ட்,பெர்த், ப்ரிஸ்பேன். இந்த ஆஸ்திரேலிய நகரங்கள் கிரிக்கெட் பிரியர்களான நமக்கு மிகவும் பரிச்சயமான பெயர்கள். பூமி சுற்றலில் நம்மை விட நான்கரை மணி நேரம் முன்னதாக செல்லும் நாடு..நமக்கு மதியம் 12 ஆகும் போது அவர்களுக்கு மாலை நான்கரையாக இருக்கும்..விமானம் வரவே இல்லை.இண்டியன் ஏர்லைன்ஸில் சிங்கப்பூர் சென்று, அங்கிருந்து க்வான்டாஸ் ஏர்வேஸ் (Qantas Airways) விமானத்தில் சிட்னி செல்வதாக பயணத் திட்டம். சிங்கப்பூர் சென்று இறங்கியாயிற்று. க்வான்டாஸ் ஏற மூன்று மணி நேரம் இருந்தது. அந்த நேரம் நீண்டுகொண்டே இருக்க, நாங்கள் தவிக்க, ஒரு இனிய ஆச்சரியம்.. எதிர்பாராத விதமாக விமானம் தாமதப்படுவதால் சிங்கப்பூரின் உள்ளே சென்று சுற்றிப் பார்க்கவும், அன்றிரவு அங்கே ஹோட்டலில் தங்கவும் க்வான்டாஸ் நிறுவனமே தக்க ஏற்பாடுகளைச் செய்திருப்பதாகவும் க்வான்டாஸ் அறிவிப்பு வந்தது..நம்மைப் போல சுற்றுலாவாசிகளுக்கு இந்தச் செய்தி உற்சாகம் ஊட்டியிருக்கலாம்; ஆனால் எத்தனை பேர் அவசரமாக சிட்னி செல்ல வேண்டியிருந்ததோ… இருந்தாலும் (ஏற்கனவே நாம் இரண்டு முறை கண்டு களித்திருந்த) சென்டோசா ஐலேண்ட்,அண்டர்வாட்டர் வோர்ல்ட் என்று சில இடங்களை சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்ததோடு, சிங்கப்பூரின் க்ராண்ட் பார்க் ஹோட்டலில் தங்கவும் ரூம் தந்திருந்தார்கள். ஆஹா… ஓஹோதான்..அடுத்த நாள் காலை க்வான்டாஸ் காத்திருக்க, வாழ்த்தியபடியே சிட்னிக்கு கிளம்பினோம்..சிங்கப்பூரிலிருந்து சிட்னி.சிங்கப்பூரிலிருந்து சுமார் 8 மணி நேரப் பயணம். பொதுவாக ஆஸ்திரேலியா ஒரு வறட்சியான இடம் . ஏனென்றால் நாட்டின் 35 சதவீதப் பகுதியில் மழைப் பொழிவு மிக மிகக் குறைவு. அனேகமாக மழையே இல்லை எனலாம். அதன் பரப்பளவில் 20 சதவீதத்துக்கு மேல், பாலைவனமும், சற்றே வறட்சியான பகுதிகளையும் கொண்டது என்று படித்திருக்கிறோம். விமானப் பயணத்தில் அதை அப்படியே காண முடிந்தது..எப்படி தெரியுமா?.சிங்கப்பூரிலிருந்து சுமார் 5 மணி நேரம் கடல்களைக் கடந்து, இந்தோனேஷியாவின் ஓரம் பறந்து, எரிமலை தெரிகிறதா என்று எட்டி பார்த்து, (கண்தான் எரிந்தது) சில குட்டித் தீவுகளைக் கடந்த பின், "ஆஸ்திரேலியாவின் முதல் நிலப்பரப்பை அடைந்திருக்கிறோம்" என்றது விமான கேப்டனின் குரல். வட எல்லைப் பகுதியின் டார்வின் நகரம் தான் முதல் நிலப் பரப்பாக வெகு கீழே விரிந்தது பகல் நேரப் பயணம் தெளிவான வானம் என்பதால் கீழே தெரிந்த டார்வினை ஆவலோடு பார்த்தோம். விரைவில் டார்வின் மறைந்தது..அதன் பிறகு… .சுமார் மூன்று மணி நேரம். பெரும்பாலும் பாலைவனங்கள். மணல் பூமி. வறண்ட பிரதேசங்கள். எங்காவது சிறிய புள்ளிகளாய்த் தெரியும் மனிதர் உருவாக்கிய அமைப்புக்கள்.தவிர மனித சஞ்சாரமே இல்லாத பகுதி. இங்கே உயிருடன் இருக்கும் எரிமலைகள் (active volcano) இல்லை..இந்த நாட்டில் பெரும்பாலான மக்கள் அதாவது 90 சதவீதம் பேர் கடற் பகுதியை ஒட்டியே வசிக்கிறார்கள். பாலைவனங்கள், வறண்ட பூமி ஒரு காரணமாக இருந்தாலும், உலகின் மூன்று மிகப் பெரிய சமுத்திரங்களான பசிஃபிக், இண்டியன் ஓஷன் மற்றும் சதர்ன் ஓஷன் இவற்றின் கடற்கரைகள் (coastline) ஆஸ்திரேலியாவைச் சுற்றி இருக்கின்றன..எனவே கடலைச் சார்ந்த வாழ்வு அவர்களுக்கு பல நூறு ஆண்டுகளாகவே அமைந்து விட்டது..பரபரப்பான சிட்னி.சிட்னியின் ஏர்போர்ட் (Sydney Kings ford Smith International Airport) படு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்க, எல்லா ஃபார்மாலிட்டிகளியும் முடித்து விட்டு வெளியே வந்த போது மாலை வெயிலில் இதமான காற்று. கேபிடல் ஸ்கொயர் என்ற இடத்தில் நாங்கள் தங்க வேண்டிய ஆர்.ஜி ஹோட்டலை அடைந்தோம்..சென்னையிலிருந்து 8750 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் சிட்னி.. ஆஸ்திரேலியாவின் வர்த்தக நகரம். உலகின் மிகப் பெரிய இயற்கைத் துறைமுகம் அமைந்த நகரம். ஆசிய பசிஃபிக் பகுதிக்கான ஒரு முக்கியமான பண பரிவர்த்தனை நகரம். (Financial hub of Asia Pacific region) இங்கிருக்கும் உலகப் புகழ் பெற்ற ஒபேரா ஹவுஸ் (Sydney Opera House) முதலில் பார்க்க வேண்டுமே. பின்னர் பிரம்மாண்டமான அழகான துறைமுகப் பாலம் (Sydney Harbour Bridge), சுற்றுலாப் பயணிகளைக் கவரும் டார்லிங் ஹார்பர் (Darling Harbor) என்று திட்டமிட்டோம்..சிட்னி ஒபேரா ஹவுஸ்.முதலில் ஒபேரா ஹவுஸ்க்கு செல்லலாமா? ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில், துறைமுகப் பாலத்தின் அருகே இருப்பது. பல நுண்கலைகளை திறம்மிகு கலைஞர்கள் நிகழ்த்திக் காட்டும் multi-venue performing arts centre..இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற நவீன கட்டிடக் கலையின் அடையாளம். சரி சமமாக இல்லாத (Unparallel) டிசைனில் ஆனால் அடுக்கடுக்காக தெரியும்படி கட்டப்பட்ட, உலகின் அற்புதமான, புதுமையான கட்டிடக் கலையின் வடிவம்..பாய்மரக் கப்பல்களின் அடுக்கடுக்கான செயில்களின்' (Sails) அமைப்பைப் போல கட்டப்பட்டுள்ளது. இதை ஷெல் என்கிறார்கள். ஒவ்வொரு ஷெல்லும் சுமார் 250 அடி ஆரம் கொண்ட ஒரு கோளத்தின் பகுதியாக அமைத் திருக்கிறார்கள். 4.4 ஏக்கர் பரப்பில் 600 அடி உயரத்தில் 394 அடி அகலத்தில் இது கட்டப்பட்டிருப்பதாக ஒரு புள்ளி விபரம் கூறுகிறது. இதன் வெளிப்புற ஃபாயர் என்ற பகுதியில் இளம் பிங்க் வண்ண கிரானைட் கற்களால் கட்டப்பட்டு, கண்ணாடியால் திரை போல அமைக்கப்பட்டுள்ளது. இதன் உள்ளே, டிராமா தியேட்டர், ப்ளே ஹவுஸ், கான்சர்ட் ஹால், பார்ட்டிகளுக்கான கூடம் என்று பல பகுதிகள் இருக்க, வருடத்திற்கு 1500 நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றனவாம்!.12 லட்சம் ரசிகர்கள் வருகிறார்கள் என்றார் கைடு..'சரி, வாருங்கள், துறைமுகப் பாலம் பார்த்து விட்டு டார்லிங் ஹார்பர் செல்வோம்…'என்று அவர் அழைக்க… அவரைப் பின் தொடர்ந்தோம்….(பயணிப்போம்).