அல்லாவுமாகி அருளியவர்!

அல்லாவுமாகி அருளியவர்!
Published on

வாசகர் ஜமாய்க்கிறாங்க!

– சுந்தரி காந்தி, பூந்தமல்லி

ஸ்ரீ பெரியவாள் ஹைதராபாத் ஏ.ஸி.ஸி. சிமெண்ட் ஆலையினுடைய காக்னா நதிக்கரையிலுள்ள பம்பிங் ஸ்டேஷனில் தங்கியிருந்தார்கள். அந்தப் பிரதேசம் பழைய ஹைதராபாத் சமஸ்தானத்தைச் சேர்ந்தது. இப்போது, கர்நாடகாவினுள் அடங்கியுள்ளது. அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் பீம்சேனப்பா கிட்டப்பா என்பவருடைய தோட்டம் இருக்கிறது.

அவர் நவாப் ஆட்சியின்போது ரஸாக்கர்களுடைய அட்டூழியத்தை எதிர்த்து வெற்றி கண்டவர். அவர் தன்னுடைய இடத்திற்குப் பெரியவாள் வரவேண்டுமென்று அழைத்ததற்கு இணங்க, ஒரு நாள் அங்கு சென்றார் மஹா பெரியவாள்.

அன்று மத்தியான வேளையில் ஒரு முஸ்லிம் அன்பர் பெரியவாள் தரிசனத்திற்கு வந்தார். அவரிடம் ஸ்ரீ பெரியவாள், "உன் மனைவி காலையிலேயே பழங்களுடன் வந்து தரிசனம் செய்துகொண்டு போனாளே?" என்றதும் அவருக்கு ஆச்சர்யம்.
அவர் சொன்னார், "நான் ஒரு கடையில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறேன். காலையில் நான் ரிக்‌ஷாவைப் பிடித்துக்கொண்டு போனபோது, 'பாபா' என்னைப் பார்த்தீர்கள். எனக்கு அல்லாவையே நேரில் பார்த்தது போன்ற ஒரு உணர்வு தோன்றியது. மேலும், என்னுடைய தாய் பாஷையான உருது மொழியில் ஏதோ பேசிய மாதிரி தோன்றியது. வேலை முடித்து இப்போதுதான் வரமுடிந்தது. வீட்டில் என் மனைவியும் தரிசனம் செய்த விஷயத்தைச் சொன்னாள்."

இவ்விதம் சொல்லி வணங்கி எழுந்த அவருக்கு, பழங்கள் கொடுத்து அனுக்ரஹித்தார். எல்லாவுமாகவுள்ள மஹா பெரியவாள், அல்லாவுமாகக் காட்சி தந்ததில் ஆச்சர்யமில்லை!

தீர்க்கதரிசி மஹா பெரியவா!
சதாராவில் வாசம் செய்தபோது, ஸ்ரீ மஹா பெரியவா ஒரு நாள் சாலையில் சென்றுக் கொண்டிருந்தார். ஸ்ரீ மஹா பெரியவாளுக்கோ, கூட வந்த நாலைந்து கைங்கர்ய அன்பர்களுக்கோ அந்த ஊரே பரிச்சயமில்லாதது. அப்படியிருக்க, சாலையில் சென்றுக் கொண்டிருந்த பெரியவா, ஒரு இடத்தில் உட்கார்ந்து விட்டார்.

எதிரே இருந்த ஒரு பெரிய அந்தக்கால பங்களாவைக் காட்டி, "அங்கே போய் ஒரு பெரிய படம் இருக்கும். நான் கேட்டேன்னு சொல்லி அதை எடுத்துண்டு வாங்கோ" என்றார். கைங்கர்ய அன்பர்களுக்கு ஒன்றும் புரியாத புதிராய் இருந்தது.

அவர்கள் அந்த வீட்டுக் காவலாளியிடம் விபரம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, உள்ளேயிருந்து ஒரு மாது வந்தாள். அவள் விபரம் கேட்டு சந்தேகத்துடன் ஸ்ரீபெரியவா அருகில் வந்தவள், அந்த க்ஷண நேர தரிசனத்தால் உற்சாகமானாள். உடனே உள்ளே ஓடிப்போய், குறிப்பிட்ட அந்தப் படத்தை கைங்கர்ய அன்பர்கள் எடுக்க அனுமதித்து, கூடவே வந்து நின்றாள்.

சத்ரபதி சிவாஜி
சத்ரபதி சிவாஜி

தூசு படிந்த அந்தப் படத்தை சுத்தம் செய்யச் சொல்ல, அதைப் பார்த்தவர்களுக்கு அது சத்ரபதி சிவாஜியின் திரு உருவம் என்று தெரிந்தது. அதற்கு ஒரு சந்தன மாலையை பெரியவா போடச் சொன்னார். ஒரு சால்வையையும் சாற்றச் சொன்னார். இந்த சால்வையை புறப்படும்போதே எடுத்து வர முன்னேற்பாடாக பெரியவா சொல்லியிருந்தாராம்.

"இவர் சிவ அவதாரம். உத்ரபாரதத்தில் சனாதன வைதீக சம்பிரதாயங்களும் தர்மங்களும் காப்பாத்த அவதாரம் எடுத்தவர். இவராலேதான் இன்னும் தர்மங்கள் அழியாமலிருக்கு" என்றார் மஹா பெரியவா."

பிறகு, அவர்கள் சிவாஜி வம்சத்திலே வந்தவர்கள் என்பதும் அந்த மாது 13வது மகாராணி என்பதையும், ஒன்றும் அறியாதவர் போல் விசாரித்து அன்பர்கள் தெரிந்துகொள்ள, திருநாடகம் புரிந்தார்.

மகாராணிக்கு மஹா பெரியவா, பழங்களையும் நல்லாசியையும் வழங்கி அருளினார்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com