0,00 INR

No products in the cart.

தேசம் கொண்டாடும் தீபாவளி!

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

பஞ்சாபில் தீபாவளி
சீதையை சிறை எடுத்த ராவணனை அழித்து, ஸ்ரீராமன் அயோத்திக்கு வெற்றியுடன் திரும்பிய நாளாக பஞ்சாப் மாநிலத்தில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. ‘நரக சதுர்த்தி’ என்று இவர்கள் இதை அழைக்கிறார்கள். தீபாவளியன்று வீட்டைச் சுத்தம் செய்து, மாலையில் பூஜை நடைபெறும். லட்சுமி தேவியின் படத்தின் முன் உலர்ந்த பழங்கள், வீட்டில் பரம்பரை பரம்பரையாக வரும் நகைகள், பாத்திரங்கள் இவற்றை வைத்து விளக்கேற்றுவார்கள். படம் இருக்கும் அறையில் இரவு முழுவதும் ஒரு விளக்கு எரிய விடப்படும். இந்த ஒளியைக் கண்டு லட்சுமி தேவி வீடு தேடி வருவாள் என்பது நம்பிக்கை. தீபாவளியன்று வியாபாரிகள் புதுக் கணக்கை ஆரம்பிப்பார்கள். அமாவாசைக்கு அடுத்த நாளன்று பெண்கள் தங்கள் சகோதரர்களுக்கு வீரத் திலகமிட்டு, ‘பையாதூத்’ என்ற பண்டிகையைக் கொண்டாடுவார்கள்.

ஆந்திராவில் தீபாவளி
ஆந்திராவில் நரக சதுர்த்தி, தீபாவளி என இரண்டு தினங்கள் கொண்டாடுகிறார்கள். நரக சதுர்த்தி அன்று எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை அணிகிறார்கள். அன்று மாலை பெண்கள் வீடு முழுவதும் அகல் விளக்கேற்றி அலங்காரம் செய்வார்கள். இனிப்பு மற்றும் இதர பலகார வகைகள், பழங்கள் வைத்து பூஜை செய்வார்கள். அமாவாசையன்று மாலையில் ஆமணக்குச் செடியின் கிளைகளைக் கொண்டு வந்து அதன் மீது எண்ணெயில் தோய்த்த திரியை வைத்து தீபமேற்றுவது வழக்கம்.

கர்நாடகத்தில் தீபாவளி
தீபாவளி பண்டிகையை கர்நாடக மக்கள் மூன்று நாட்கள் கொண்டாடுகிறார்கள். முதல் நாள் நரக சதுர்த்தி அன்று விடியலில் எழுந்து எண்ணெய் முழுக்காடி விட்டு, புத்தாடைகள் அணிந்து இறை வழிபாடு நடத்தி, விருந்துண்டு மகிழ்வார்கள். மறுநாள் அமாவாசை. இன்று ஒன்றும் கிடையாது. மூன்றாம் நாள் பலி பிரதமை. இது முக்கியமான நாள். பூமிக்கு அடியில் போய்விட்ட மகாபலிச் சக்கரவர்த்தி தன் வாக்குப்படி மக்கள் நலமுடன் வாழ்வதைப் பார்க்க அன்று பூமிக்கு மேலே வருகிறார் என்பது நம்பிக்கை. ஒரு மணை போட்டு, அதன் மீது பசுவின் சாணம் கொண்டு பலிக் கோட்டையைக் கட்டுவார்கள். இதில் நெல், ராகி, சோளம் போன்றவற்றின் இளம் குருத்துக்களை வைப்பார்கள். எள்ளுப் பூவை (ஹிச்செள்ளு) முக்கியமாக வைப்பார்கள். இதை மகாபலிக்குப் படையலாக்கி, வெடி போட்டு விருந்துண்டு மகிழ்வார்கள்.

மேற்கு வங்கத்தில் தீபாவளி
வங்காளிகள் தீபாவளியை, ‘மகாநிசா’ என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். அழிவுத் தொழிலை காளி தீவிரமாக மேற்கொண்டாள். அவளது உக்கிரத்தைச் சங்கர பகவான் தணித்தார். அவ்விதம் உக்கிரத்தைத் தணித்த நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. அன்று இளம் பெண்கள் தீபங்களை ஏற்றி ஆற்றில் மிதக்க விடுவார்கள்.

ஒடிசாவில் தீபாவளி
ஒடிசாவில் தீபாவளி அன்று மாலையில் லட்சுமி பூஜை செய்து, வீடு முழுவதும் விளக்குகளை ஏற்றி பூஜை முடிந்ததும், ‘காரியா கமிட்டி’ என்ற குச்சியை ஏற்றி, ‘எங்கள் வீட்டிலுள்ள இருளைப் போக்கி, ஒளியை வீசச் செய்’ என்று சொல்லி வணங்குவார்கள். அரிசா பீட்டா, மொண்டா பீட்டா பாயசம் செய்து நைவேத்தியம் செய்வார்கள். தீபாவளிக்கு மறுநாள் எம தீபாவளி. அன்று இரண்டே தீபங்களை ஏற்றி வழிபடுவார்கள்.

மகாராஷ்டிரத்தில் தீபாவளி
தீபாவளியன்று வாசலில் ஸ்டார் மாதிரி விளக்கைக் கட்டித் தொங்க விட்டு, ஆகாஷ் தீப் மாட்டி விடுவர். அன்றிலிருந்து தீபாவளி தொடங்கி விடும். இந்த ஆகாஷ் தீப்பை பதினைந்து நாட்கள் கழித்து துவாதசி அன்று எடுப்பார்கள். துளசிக்கு கல்யாணம் செய்து முடிப்பார்கள். தீபாவளி அன்று பெண்கள் எண்ணெய் தேய்த்துக் குளித்து. ‘சங்கர்பலை’ என்ற இனிப்பை நைவேத்தியம் செய்து உண்டு மகிழ்வார்கள். மாலை லட்சுமி பூஜை நடைபெறும். மூன்றாவது நாள், ‘பலிபாடல்’ என நரகாசுரனுக்கு பலி கொடுக்கும் படலம். பிரதமை அன்று ஆண்கள் எண்ணெய் தேய்த்துக் குளித்துக் கொண்டாடுவார்கள். அதற்கு அடுத்த நாள், ‘பாவு டீஜ்’ சகோதர சகோதரிகளுக்கான பண்டிகை.

மத்தியப் பிரதேசத்தில் தீபாவளி
புதுப்புது பாத்திரங்கள், நகை, வெள்ளி வாங்கி இனிப்பு செய்து கொண்டாடுவர். தந்தரேஸுக்கு மறுநாள் சின்ன தீபாவளி. அன்று வெடி வெடித்து நண்பர்களை அழைத்துக் கொண்டாடுவர். அன்று கோதுமை பொரியில் சின்னச் சின்ன சர்க்கரைப் பொம்மை செய்வர். தீபாவளிக்கு மறுநாள் கோவர்த்தன பூஜை என்று கிருஷ்ணரை பூஜை செய்து இனிப்புகள், பழங்கள் என எல்லாம் ஐம்பத்தாறு வகை செய்து படைத்து உண்டு மகிழ்வார். தந்தரேஸுவிலிருந்து மூன்று நாட்களுக்கு வீடு முழுவதும் விளக்கை ஏற்றி வைப்பார்கள். மாநிலமே ஜகஜ்ஜோதியாக ஒளியில் பிரகாசிக்கும்.

இமாச்சலப் பிரதேசத்தில் தீபாவளி
இங்கு வசிக்கும் மக்கள் பலவித மண் பாண்டங்களில், பலவித வர்ணங்கள் பூசி அழகுப்படுத்துகின்றனர். பின் ஒரு இடத்தில் அமர்ந்து பிரார்த்தனை செய்கின்றனர். தொடர்ந்து அந்த மண் பாண்டங்களை பிறருக்குப் பரிசாகக் கொடுக்கின்றனர். அரிசி மாவினால் அழகான கோலங்கள் வரைந்து இரவில் அந்தக் கோலத்தில் தங்கள் தெய்வத்தை பூஜிப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அப்போது ஒரு தாமிரத் தட்டில் சந்தனத்தால் ஆன லட்சுமி தேவி உருவத்தை வைத்து வழிபடுகின்றனர். இதனால் திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் கூடிவிடும் என்று நம்புகிறார்கள்.

அஸ்ஸாமில் தீபாவளி
அஸ்ஸாமில் தீபாவளி அன்று மகாலட்சுமியை வழிபாடு செய்கிறார்கள். புதுக் கணக்கும் ஆரம்பிக்கிறார்கள். புதிய தொழில் தொடங்கும் நாளாகவும் இதைக் கருதுகின்றனர். எங்கும் மாவிலைத் தோரணங்கள் பளிச்சிடுகின்றன. அழகாகப் பலவித அமைப்புகளில் தயாரிக்கப்பட்ட சிமிழ் விளக்குகள், மாலை வேளையில் ஒவ்வொரு வீட்டையும் அலங்கரிக்கின்றன.

குஜராத்தில் தீபாவளி
குஜராத் மாநில மக்களோ, ஐந்து நாட்கள் தீபாவளியைக் கொண்டாடுவர். முதல் நாள் லட்சுமி பூஜை, இரண்டாம் நாள் ‘காளி சௌதாஸ்’ எனப்படும் நோன்புத் திருவிழா, மூன்றாம் நாள்தான் அங்கு தீபாவளி பண்டிகை, நான்காம் நாளை புத்தாண்டுப் பிறப்பாகக் கொண்டாடுவர். ஐந்தாம் நாள் தன் உடன் பிறந்த சகோதர, சகோதரிகள் நலமாகவும் வளமாகவும் வாழ விசேஷ பூஜைகள் செய்கின்றனர். தீபாவளியை கொண்டாடும் வேளையில் புது துளசிச் செடி வைத்தோ அல்லது வீட்டுத் துளசி மாடத்தில் சாளக்ராமம் வைத்தோ துளசி பூஜையுடன் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி, இறைவனை வழிபடுகிறார்கள். குஜராத்தில் தீபாவளி அன்று சிறுவர் முதல் பெரியவர் வரை விதவிதமான பட்டங்கள் செய்து வானில் பறக்க விட்டு மகிழ்கின்றனர்.

காஷ்மீரில் தீபாவளி
காஷ்மீர் பகுதிகளில் தீபாவளியன்று கால்நடைகளை அலங்கரித்துக் கொண்டாடுவார்கள்.

பீகாரில் தீபாவளி
பீகார் மாநிலத்தில் தீபாவளியின்போது பழையனவற்றை எல்லாம் சுத்தம் செய்வார்கள். பிறகு துடைப்பத்தைக் கொளுத்தி, வீட்டுக்கு வெளியே போடுவார்கள். இப்படிச் செய்தால் மூதேவி வீட்டை விட்டு வெளியேறி, லட்சுமி வீட்டுக்கு வருவாள் என்பது அவர்களின் நம்பிக்கை.

ராஜஸ்தானில் தீபாவளி
ராஜஸ்தானியருக்கு அமாவாசை என்றால் மாதம் முடிந்தது என்று பொருள். மறுநாள் புது மாதம் தொடங்கிவிடும். தீபாவளியன்று ஆண்டு முடிந்து விடும். மறுநாள் அவர்களுக்குப் புத்தாண்டு தினமாகும்.
– ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி

பார் போற்றும் தீபாவளி!

சீனாவில் தீபாவளி
சீனாவில் தீபாவளி அன்று விளக்குகளை வரிசையாக ஏற்றி வைப்பதோடு, வீட்டுக் கதவுகளில் ‘நன்கு வாழ்க’, ‘வளமை பெருகட்டும்’ என்பது போன்ற வாசகங்களையும் எழுதி வைத்துக் கொண்டாடுகிறார்கள். புது வருடக் கணக்கையும் இந்தத் தீபாவளி நாளன்று துவக்குகிறார்கள்.

ஜப்பானில் தீபாவளி
தீபாவளி அன்று முன்னோர்கள் எல்லாம் வந்து ஆசி கூறுவதாக ஜப்பானில் ஒரு ஐதீகம் நிலவுகிறது. அன்று விளக்குகளை ஏற்றி வைத்து முன்னோர்களை வரவேற்கும் வழிபாடாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. ஏறத்தாழ முந்நூறு வருடங்களுக்கும் மேலாக இப்படிப்பட்ட தீபாவளி ஜப்பானில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜப்பானிய மொழியில், ‘டோ ரோனாகாஷி’ என்று தீபாவளி அழைக்கப்படுகிறது.

தாய்லாந்தில் தீபாவளி
தீபாவளி அன்று வாழை இலைக் கிண்ணத்தில் ஒரு மெழுகுவர்த்தியையும் ஊதுபத்தியையும் ஏற்றி வைத்து, அத்துடன் காசையும் போட்டு நீரில் மிதக்க விடுவார்கள். தாய்லாந்தில் தீபாவளிக்குப் பெயர், ‘லாய் காடாங்க்.’

அமெரிக்காவில் தீபாவளி
பார்லின் என்ற இடத்தில் துவார காபூரேஸ்வரர் ஆலயத்தில் தீபாவளி அன்று பட்டாசு வெடித்து, மத்தாப்பு, புஸ்வாணம் கொளுத்தி வண்ண வண்ண தீப்பொறிகள் வானில் பறக்கக் கண்டு மகிழலாம். இந்த இடம் இதற்கென்றே அமைக்கப்பட்டுள்ளது. பட்டாசு மற்றவற்றை அங்கேயே வாங்க வேண்டும். அங்கு ரங்கோலி என்ற பலவித வடிவங்களில் பெரிய பெரிய கோலங்களைப் போட்டு, போட்டிகள் வைத்து பரிசும் தருகிறார்கள். ஒரே இடத்தில் பல குடும்பங்கள் கூட்டமாக வந்து, பட்டாசுகளை வெடித்து ஒருவருக்கொருவர் தீபாவளி வாழ்த்துகளைக் கூறி, தீபாவளி பண்டிகையை விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள்.

விதவிதமான தீபாவளி!

வாமன தீபாவளி
பிரகலாதனின் பேரன் மகாபலி முடிசூட்டிக் கொண்ட நாள் தீபாவளி திருநாள்தான். அன்று ஏற்றப்படும் தீபம், ‘எம தீபம்’ என்று அழைக்கப்படும். வாமன அவதாரம் எடுத்த மஹாவிஷ்ணு மகாபலி சக்கரவர்த்திக்கு அருள்புரிந்து, தனது ஞானத் திருவடியை அவர் தலையில் சூட்டிய நாளே தீபாவளி பண்டிகை.

ராமாயண தீபாவளி
ராவண வதம் முடிந்து, அந்த வெற்றியை ஈட்டிய ஸ்ரீராமன், சீதா ராமனாக அயோத்திக்குத் திரும்பினார். அப்போது நேரம் அதிகாலை மூன்று மணி. பதினான்கு ஆண்டுகளாக ஸ்ரீராமரை தரிசிக்காமல் ஏங்கிக் கிடந்த அயோத்தி மக்கள், அவர் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்து, அந்த இரவு நேரத்திலும் ஏராளமான விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து, ஸ்ரீராமரை வரவேற்று மகிழ்ந்தார்கள். சீதையுடன் ஸ்ரீராமர் அரண்மனைக்குள் நுழைந்தார். அப்போது ராமபிரானின் அன்னை கௌசல்யா தேவி, ”சீதா! விளக்கேற்ற வந்த திருமகளே! நீ இல்லாமல் இந்த அரண்மனையே இருள் சூழ்ந்துவிட்டது. உன் கையால் விளக்கேற்று. அந்தகாரம் விலகி, அருள் ஒளி பரவட்டும்’’ என்றாள். மாமியார் உத்தரவிட்டபடி, தீபங்களை ஏற்றி வரிசையாக வைத்து வழிபாடு செய்தாள் சீதை. அந்த நாளே தீபாவளி திருநாளாகும் என்று ஆன்றோர்கள் கூறுகின்றனர்.

விக்கிரமாதித்த தீபாவளி
உஜ்ஜையினி என்ற நாட்டை ஆண்டுவந்த விக்கிரமாதித்த மன்னன் தனது பகைவர்களான சாகாஸ் என்பவர்களை வென்று, முடிசூட்டிக்கொண்ட நாளே தீபாவளி.

தயானந்த தீபாவளி
ஆரிய சமாஜத்தை தோற்றுவித்த சுவாமி தயானந்த சரஸ்வதி தீபாவளி அன்றுதான் முக்தி அடைந்தார்.

ஜைன தீபாவளி
ஜைனர்களின் குருவான வர்த்தமான மஹாவீரர் முக்தி அடைந்த நாளை ஜைனர்கள் தீபாவளி திருநாளாகக் கொண்டாடுகிறார்கள். மகான் மறைந்தாலும் அந்த ஞான ஒளி மறைந்த தினத்தில் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் கொண்டாடப்படுவதே ஜைன தீபாவளி.

அசோக தீபாவளி
சாம்ராட் அசோகன் தன்னுடைய திக் விஜய யாத்திரையை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய நாளை தீபாவளி தீபத் திருவிழாவாகக் கொண்டாடினார்கள்.

சிவாஜி தீபாவளி
‘சத்ரபதி’ என்று அழைக்கப்பட்ட மராட்டிய மன்னர் சிவாஜி, தீபாவளி அன்றுதான் தன்னுடைய விரோதிகளின் கோட்டையை தாக்கிக் கைப்பற்றினார். அதை நினைவுபடுத்தும் விதமாக பொதுமக்களே தங்கள் வீடுகளின் வாயிலில் மண்ணாலான ஒரு சிறிய கோட்டையை கட்டுகிறார்கள். இந்தக் கோட்டை கட்டும் நிகழ்ச்சியில் சிறுவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொள்கிறார்கள். தீபாவளியன்று மும்பையில் இவ்வாறு மண் கோட்டைகள் கட்டப்படுவதை இன்றும் காணலாம்.

சீக்கிய தீபாவளி
மொகலாய மன்னனான ஜஹாங்கீர் ஐம்பத்திரண்டு ராஜபுத்திர அரசர்களையும் சீக்கியர்களின் ஆறாவது குருவான குரு கோவிந்த் சிங் என்பவரையும் சிறையில் அடைத்து வைத்திருந்தான். குரு கோவிந்த் சிங் தனது திறமையால் சிறையில் இருந்து தப்பினார். தன்னுடன் சிறைபட்டிருந்த ஐம்பத்திரண்டு ராஜபுத்திர அரசர்களையும் தப்பவைத்துக் காப்பாற்றினார். அவ்வாறு தப்பி வந்த அவர்களுக்குப் பொற்கோயிலில் ஏராளமான விளக்குகளை ஏற்றி வைத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த விடுதலையைக் கொண்டாடும் வகையில் மக்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் தீபங்களை ஏற்றி வைத்தார்கள். அந்த நாளே தீபாவளி பண்டிகையாயிற்று.
– பிரேமாவதி, திருவனந்தபுரம்.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

கவிதைத் தூறல்!

0
-பி.சி. ரகு, விழுப்புரம்   விலைவாசி! எவரெஸ்ட் சிகரத்தை விட எல்.ஐ.சி., பில்டிங்கை விட அரசியல்வாதிகளின் கட்-அவுட்களை விட உயர்ந்து நிற்கிறது விலைவாசி! **************************************** முதிர்கன்னியின் வேண்டுகோள்! தென்றலே என் மீது வீசாதே! தேதிகளே என் வயதை நினைவுபடுத்தாதே! பூக்களே எனக்கு மட்டும் வாசம் தராதீர்கள் புதுமணத் தம்பதிகளே என் கண்ணுக்குள் சிக்காதீர்கள்... குறைந்த விலையில் எனக்கொரு மாப்பிள்ளை கிடைக்கும் வரை. **************************************** பாவம்! வீடு கட்ட மரம்...

பலவித பச்சடி ; பலரகப் பொடி!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! ரெசிபிஸ்!   முருங்கைப் பூ பச்சடி தேவை: முருங்கைப் பூ – 2 கப், துவரம் பருப்பு – 100 கிராம், தேங்காய் – 1, காய்ந்த மிளகாய் – 4, உளுந்தம் பருப்பு –...

ஐகோர்ட்டில் முதல் முறையாக பெண் தபேதார் நியமனம்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! சென்னை ஐகோர்ட் வரலாற்றில் முதல்முறையாக பெண் தபேதார் நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதிகள் தங்கள் அறையில் இருந்து கோர்ட் அறைக்கு வரும்போது அவர்களுக்கு முன் தபேதார் என்பவர் கையில் செங்கோலுடன் வருவது காலம் காலமாக...

மலர் மருத்துவம்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! மங்கையர் மலர்  வாசகீஸ் FB பகிர்வு!  மல்லிகைப் பூக்களை இரவில் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து காலையில் அந்த நீரால் முகம் கழுவினால் முகம் எந்த மாசும் இ‌ல்லாம‌ல் முகம் பொலிவு பெறும். எருக்கன்...

ஜோக்ஸ்!

0
 -வி. ரேவதி, தஞ்சை படங்கள்; பிள்ளை   "மொய் வசூல் முடிந்த கையோடு தலைவரை பேசச் சொல்லிட்டாங்க...! "    " கூட்டத்தை விரட்டி அடிக்க அருமையான ஏற்பாடா இருக்கே!   *******************************           ...