டயட்! வாரியர் டயட்!

டயட்! வாரியர் டயட்!
Published on

னித வாழ்க்கையில் சமீப காலமாக, 'டயட்' என்கிற வார்த்தை நுழைந்துள்ளது.

'நான் டயட்டில் இருக்கிறேன். இந்த முறுக்கு, தட்டை எல்லாம் வேண்டாம்!'
'வெயிட்டைக் குறைக்க டயட்டில் இருக்கிறேன்!'

நினைத்த நேரத்தில் பிடித்த உணவுகளையெல்லாம் இஷ்டத்திற்குச் சாப்பிட்டுக் கொண்டிருந்த காலம் மலையேறி வருகிறது, இந்த டயட் கண்ட்ரோலால். காய்கறி டயட்; பழ டயட்; திரவ உணவு டயட் என இருக்கும் பல வகை டயட்டுகளுக்கிடையே வருகை தந்துள்ள, 'வாரியர் டயட்'ஐ தற்சமயம் அநேகர் கடைப்பிடித்து வருகிறார்கள். இது குறித்து சிலரிடம் கேட்கையில் கிடைத்த விவரங்கள்…

அதென்ன வாரியர் டயட்?
பண்டைய காலத்தில் போர் வீரர்கள் போர் செய்யும் பகல் நேரங்களில் மிகக் குறைவாகச் சாப்பிடுவது அல்லது தவிர்ப்பது உண்டு. சூரியன் மறைகையில் போர் முடிய, இரவில் சத்தான உணவை அதிகம் உட்கொள்வதுண்டு.
போர் வீரர்கள் பின்பற்றிய உணவு முறை என்பதால், 'வாரியர் டயட்' எனக் கூறப்பட்டது.

இதேபோல, காட்டுவாசிகள் காலை நேரத்தில் பேருக்கு ஏதோ சாப்பிட்டோ, கஞ்சி குடித்தோ, காட்டுக்குள் வேட்டையாடச் செல்வர். தனது குடும்பத்திற்காக பகல் முழுவதும் வேட்டையாடிச் சேகரித்த உணவை வீட்டிற்குக் கொண்டு வந்து, இரவில் அனைவரும் சேர்ந்து சாப்பிடுவார்கள்.
உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ளவும், சுறுசுறுப்பாக இயங்கவும் இது உதவுகிறதென நம்பினார்கள்.

வாரியர் டயட்டிற்கு பிள்ளையார் சுழி :
இஸ்ரேலிய சிறப்புப் படையில் பணிபுரிந்த ஓரி ஹோஃப்மெக்லர் (Ori Hofmekler) என்பவர் சுதாகார உடற்பயிற்சி எழுத்தாளர். 2001ஆம் ஆண்டு வாரியர் டயட்டிற்கு பிள்ளையார் சுழி போட்டவர் இவரே.
இது, ரோம் மற்றும் பிற ராணுவத்தினரிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள்கூட இம்முறையைப் பின்பற்றினால் உற்பத்தி அதிகமாக வாய்ப்பு உள்ளதெனக் கூறும் ஓரி, காலை உணவைத் தவிர்ப்பது நல்லதெனச் சொல்கிறார்.

வாரியர் டயட் பலன்கள் :
இரவில் புரத உணவுகளை காய்கறிகளோடு சேர்த்து சாப்பிடுவது எடை இழப்பு மற்றும் உடல் உறுதித் தன்மைக்கு வழிவகுக்கும். ரத்தத்திலுள்ள சர்க்கரையைக் கட்டுப்படுத்தும். மூளை ஆரோக்கியமாகச் செயல்படும்.
பகல் நேரத்தில் சுறுசுறுப்பாக இருப்பதன் மூலம், உடலில் ஆங்காங்கே உட்கார ஆரம்பிக்கும் கொழுப்பு தவிர்க்கப்படும்.

வாரியர் டயட்டின் விதிமுறைகள் :
காலையில் ஒரு தம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன், சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
பகல் நேரங்களில் தண்ணீர் குடிப்பதோடு, வெள்ளரி, புதினா மற்றும் லெமன் கிராஸ் சாறு போன்றவற்றையும் சேர்த்து, ஒன்பதிலிருந்து பத்து தம்ளர்கள் அருந்த, ஊட்டச்சத்து கிடைக்கும். காய்கறி சாலட், கலோரி இல்லாத திரவம், பழங்கள் சாப்பிடுகையில் உடல் தசைகள் இறுக்கமாகும்.

உணவுக் கட்டுப்பாட்டுடன் கடுமையான உடற்பயிற்சியும் அவசியம். இவ்விரண்டும் சமமாக இருந்தால்தான் உடலமைப்பு சீராக இயங்கும்.

குளிர் பானங்கள், பர்கர், பீட்சா, பதப்படுத்திய உணவுகளைத் தவிர்ப்பது அவசியமாகும். நொறுக்குத் தீனிகளை பகல் நேரங்களில் இஷ்டத்திற்கு சாப்பிடுதல் கூடாது. இரவில் சப்பாத்தி, காய்கறிகள், முட்டை, சாதம், பருப்பு, பழங்கள் என ஹெவியாக உண்ணலாம்.

அவரவர் உடல் நிலையைப் பொறுத்து கழுத்து, கை, கால், தோள்பட்டை ஆகியவற்றுக்கு பகலில் சுமார் ஒரு மணி நேரம் பயிற்சி கொடுப்பது முக்கியம். குறைந்த பட்சம் ஒன்றிலிருந்து இரண்டு மாதங்களாவது இதைக் கடைப்பிடித்தால்தான் பலன் தெரியும்.
மருத்துவரின் அறிவுரைப்படி இந்த வாரியர் டயட்டை மேற்கொள்வது நல்லது.
– ஆர்.மீனலதா, மும்பை

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com