
சமீபத்தில், அனுஷா வருத்தப்பட்ட விஷயம் எது?
-மஞ்சு வாசுதேவ், பெங்களூரு
தமிழ்நாட்டுல பள்ளி மாணவர்களுக்கு இலவச காலை உணவு தரப்படுகின்றதல்லவா? அதுல பெரும்பாலும் ரவை, சேமியா, சோளக்கிச்சடிதான் இடம் பெற்றுள்ளது. சில குழந்தைகள், “பூரி, இடியாப்பம் தர மாட்டீங்களா?” என்று ஏக்கத்துடன் கேட்டதாகச் செய்தித்தாளில் படிச்சேன். காமராஜர் காலம் ஓ.கே! அது கடந்து எத்தனையோ ஆட்சிகள் மாறினாலும், இன்னும் ஏழைக் குழந்தைகள் சுவையான உணவுக்கு கையேந்தி நிற்பது வருந்த வைக்கிறது. பொறுப்பற்ற பெற்றோர்களை நோவதா? பொன்னான ஆட்சியாளர்களை நோவதா? காய்ந்த வயிற்றில் எந்தப் பாடம்தான் ஏறும்? மனம் கனத்துப் போகிறது.
*************************************
‘பொன்னியின் செல்வன்’ படத்தில் உறுத்தலாக இருப்பது யார்? அல்லது எது?
-வீணாகுமாரி, திருப்பதி
அது படம் பார்த்த பிறகுதான் தெரிய வரும்... ஆனால், வெளியான புகைப்படங்களைப் பார்க்கும்போது, கண்களை உறுத்துவது, கார்த்தி முதல் த்ரிஷா வரை தோள்களில் பெரியப் பெரிய அம்மைத் தடுப்பூசித் தழும்புகளுடன் காட்சி அளிப்பதுதான்!
சோழர் காலத்தில் அம்மைத் தழும்புக்கு இடமேது? காஸ்ட்யூமரோ, மேக்கப் யூனிட்டோ கவனித்திருக்கலாம். சின்ன ஸ்டிக்கர் ஒட்டிகூட மறைத்திருக்கலாம். அல்லது இருக்கவே இருக்கு, கிராபிக்ஸில் நீக்கியிருக்கலாம். சின்ன விஷயம்தான்! ஆனால் ‘பளிச்’ எனத் தெரிகிறதே!
*************************************
70S நடிகைகளில் தங்களைக் கவர்ந்தவர் யார்?
-கஜலட்சமி ராஜேந்திரன்
ஸ்ரீதேவி, ஜெயப்ரதா போல நிறமோ, அழகோ இல்லை! ராதா, அம்பிகா போல கவர்ச்சியும் இல்லை! மாதவி, அமலா போல வனப்பும் இல்லை! அவரிடம் இருந்தது எல்லாம் உணர்ச்சிக்குளமாக இரண்டு கண்களும் பட்டு கத்தரித்தது போல வசன உச்சரிப்பும் மட்டுமே! அதை வைத்துக்கொண்டு, சும்மா ஒற்றை ஆளாக கே.பாலசந்தர் படங்களில் சிலம்பம் ஆடியிருப்பார் படம் முழுக்க. (‘அச்சமில்லை... அச்சமில்லை’, ‘தண்ணீர் தண்ணீர்’, ‘நூல்வேலி’, ‘தப்புத்தாளங்கள்’, ‘அக்னிசாட்சி’...) இறுகப் பின்னிய ஜடை, பெரிய பொட்டு… இதற்கு மேல் காஸ்ட்யூமே கிடையாது. ‘மரோ-சரித்ரா’வில் கமலுடன் டீனேஜ் பெண்ணாகக் காதல் காட்சிகளில் நடித்ததுதான் முதலும் கடைசியும். அப்புறம் எல்லாமே ஹெவி பர்ஃபாமென்ஸ்தான்! இல்லாவிட்டால் கே.பி.யின் ஆஸ்தான நடிகையாக ஆகியிருக்க முடியுமா? அது மட்டுமா? விஜயசாந்தி, நக்மா, செளந்தர்யா, மாதவி என பலருக்கும் டப்பிங் வாய்ஸ் இவருடையதுதான்! அவங்க சுமாராக நடித்தாலும், குரலில் சரி கட்டி விடுவார். சரிதா... நல்ல திறமையான நடிகை.
*************************************
நவராத்திரிக்கு எங்க வீட்டுக்கு வருவீங்களா?
-சியாமளா சுவாமிநாதன், கொரட்டூர்
எங்க சியாமளா? ஊர் முழுக்க மெட்ரோ ரயில் பணி + கால்வாய் தூர் வாரும் பணிகளும் நடப்பதால், அடுத்த தெருவுக்கே நாலு கிலோ மீட்டர் சுற்றிக்கொண்டுதான் போக வேண்டியிருக்கு!
வழக்கம் போல, ‘வாட்ஸ் அப்’ல் ‘அழைப்பிதழ்’ அனுப்பி ஆன்-லைன்ல லைவ் வீடியோ காட்டி, ‘ஸ்விக்கில சுண்டலோ புட்டோ அனுப்பி, டன்ஸோல தாம்பூலம் அனுப்பிடுங்க! நானும் ஃபேஸ்புக்ல ஸ்டேடஸ் போட்டுடறேன். ‘தாங்க்ஸ்... வெரிநைஸ்!’னு.