ஒரு வார்த்தை!

ஒரு வார்த்தை!

வின் பொருள்களின் விலை எல்லாம் ‘விண்ணைத் தாண்டி வருவாயா?’ என ஏறிவிட்ட நிலையில் ஒரு மில்க் ஸ்டோரி எழுத நேர்ந்தது. ரியல்லி ஸாரி... ‘என்ன கொடுமை சரவணா’தான்!

 ன்னுடைய உறவினரின்  மகன் அவன்! பாலிவுட் ஹீரோ போல. செம ஹேன்ட்ஸம்! ஆனால், நிலையான உத்யோகம் இல்லை. ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ல வர்ற ஆர்யா கேரக்டர் இவனை வெச்சு எழுதணதுதான்! சோம்பேறி, பொழுதுபோக்கு விரும்பி, செலவாணி...!

அவனுடைய ஜாதகத்தில் கல்யாண யோகம் கூடி வரவே, பக்கத்து ஊர் பெண்ணைத் திருமணம் செய்து வைத்தார்கள்.

“மாப்பிள்ளை ஒரே பையன்! நல்ல வசதி இருக்கு. அவன் வேலைக்குப் போக வேண்டிய அவசியமில்லை. இப்போ ஒரு தாற்காலிக வேலையில பதினைஞ்சாயிரம்தான் சம்பாதிக்கிறான்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லித்தான் கல்யாணமே செய்து வைத்தார்கள்.

பெண் வீட்டாரும், பையன் அழகிலும், ஸ்டேடஸிலும் மயங்கி ஒப்புக் கொண்டுவிட்டனர்.

ஆனால், கல்யாணமாகி மூன்று வருஷம் ஆகியும், வீட்டுல நிம்மதி இல்லை! மருமகள் ஒட்ட மாட்டேங்கிறாள். எதையோ பறிகொடுத்தது போல சோக சித்திரம் போல இருக்கிறாள். “ஒழுங்கா வேலைக்குப் போக துப்பு இல்ல’’ என்று  கணவனைக் கண்டபடி திட்டுகிறாள்.

“உன் புருஷன் வேலைக்குப் போகாததால, உனக்கு இங்க என்ன செளகரியம் குறைஞ்சுருக்கு? இரண்டு கார், இரண்டு பைக், நாலு ஏஸி, இரண்டு பீரோ துணிமணி, வகை வகையா சாப்பாடு, பால், பழம், தினமும் புது சினிமா, டூர்னு ஜாலியாதானே இருக்கே?”ன்னு பெரியவங்க விசாரிச்சா,

“எனக்குக் கேவலமா இருக்கு? உன் புருஷன் எங்க வேலைக்குப் போறான்னு யாராவது கேட்டா நாக்கைப் பிடுங்கிக்கலாம்போல இருக்கு! என்னைப் பாழுங்கிணத்துல தள்ளிட்டீங்க!” என்று மருமகள் சண்டை போடுகிறாள்.

அப்பாவி மாமனார், சாது மாமியார் இருவரையும், “வளர்க்கத் தெரியாம, செல்லம் கொடுத்து குட்டிச் சுவர் ஆக்கிட்டீங்க?” என்று குற்றம் சாட்டுகிறாள்.

கணவனை “வாடா ... போடா... ”என்று வறுத்துக் கொட்டுகிறாள். பாவம், அவளுடைய கல்யாண எதிர்ப்பார்ப்புகள், கனவுகள் என்னவாக இருந்தனவோ? பெற்றோர் கன்வின்ஸ் செஞ்சு, அறைகுறை மனதோடு மணவறையில் உட்கார்ந்தாளோ? மொத்தத்தில் யாருக்கும் நிம்மதியில்லை! வீடு முழுக்க செல்வம் நிறைந்திருந்தும், ஓர் இறுக்கமான சூழ்நிலை. அதிருப்தி அலை!

இது மகளிர் பத்திரிகைங்கிறதால, இனி வரும் பாரா முழுக்க பெண்கள்னு எழுதியிருப்பேன். அதை உங்க செளகரியப்படி, ஆண்கள்னு திருத்தி வாசிக்கலாம். தப்பில்லை! விஷயம் என்னவோ ஸேம் ஸேம்தான்.

ஏன்னா, ஒரு காலத்துல, ‘அவங்க’ ஆடாததா?

ப்ப ஒப்பனிங்ல குறிப்பிட்ட ‘மில்க் ஸ்டோரி’க்கு வர்றேன்.

சில பெண்களுக்கு அதிகாலையிலேயே நல்ல சுண்டக் காய்ச்சிய கெட்டிப்பாலே கிடைச்சுடும். அவங்க அதை குடிக்கலாம். அதுல பாயசம், ஸ்வீட்னு என்னவேணா செஞ்சு ஜமாய்க்கலாம்.

ஆனா, சில பெண்களுக்கு ஆவின்பால் அரைலிட்டர்தான் கிடைக்கும். அதுல நாலு பேர் டீ/காபி மட்டுமே சாப்பிடலாம்.

ஒரு சில பெண்களுக்கு முந்தாநாள் தேதி போட்ட பால் கிடைக்கும். என்ன பண்றது? அதுல அரை சிட்டிகை சமையல் சோடா மாவு சேர்த்துக் காய்ச்சி, கெட்டுப் போகாமல் பயன்படுத்தலாம்.

வேறு சில பெண்களுக்கோ, வரும்போதே திரிஞ்சு போய்தான் இருக்கும்... அப்ப அதுல ஒரு துளி எலுமிச்சை சாறு பிழிஞ்சு, பன்னீராவோ, ரசகுல்லாவோ தயாரிக்கலாம்.

சில பொண்ணுங்களுக்கு பாலுக்கு பதிலா தயிர்தான் கிடைக்கும். அவங்க மோர் குழம்பு, லஸ்ஸின்னு போயிடணும்.

பாலே கிடைக்காம ‘கட்டைச் சாயா’ குடிச்சு சந்தோஷமா இருக்குற பெண் குட்டிகளும் ஈ லோகத்திலே உண்டு சாரே!

நல்ல ஃப்ரெஷ் பால் கிடைச்ச பெண்கள்கூட சில சமயம் காய்ச்சும்போது, அஜாக்கிரதையாக பொங்க விட்டு விடலாம்! (பால் பாத்திரம் சுத்தம் இல்லாததால் கெட்டும் போகலாம்.)

l இன்றைக்கு பல இளைய தம்பதியர், தங்களுக்குக் கிடைத்த வாழ்க்கையில் திருப்தி அடையாமல், ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகளை வளர்த்துக்கொண்டு, அவை நிறைவேறாமல், தானும் வேதனைப்பட்டு, எந்த எல்லைக்கும் போய், ஏடாகூட முடிவுகள் எடுத்து குடும்பத்தினரையும் கஷ்டப்படுத்துகின்றனர்.

ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு.

“Count Your BLESSINGS…”

நமக்குக் கிடைச்ச வாழ்க்கையில் என்னவெல்லாம் ப்ளஸ் இருக்கு என புரிஞ்சு, மகிழ்ச்சி அடைவதே புத்திசாலித்தனம். ஏனெனில் நமக்கு சாதாரணமாகத் தோன்றும் வாழ்க்கை, இங்கு பலருக்குக் கனவாக இருக்கிறது.

ஒருவேளை, உங்களுக்கு வாய்த்த ஜோடியுடன் வாழ்நாள் முழுவதும் பயணிக்க முடியாதுன்னு தோணுகிறதா? ப்ளீஸ்... யாருக்கும் இடைஞ்சல் பண்ணாமல் ‘குட்பை’ சொல்லிட்டுப் போயிடுங்க! கூடவே இருந்து, தினம் தினம் சண்டை போட்டு, கழுத்தறுக்காதீங்க... நான் அறிவுரையா சொன்னா ‘மில்க் ஃபார்முலா’வையும் ட்ரை பண்ணாதீங்க.

ஏன்னா... உங்களுக்கு ‘மில்க்’ அலர்ஜி! ஐ அன்டர்ஸ்டேன்ட்!

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com