அந்த 21 நாட்கள்

தீபாவளி தகவல்கள்!
அந்த 21 நாட்கள்
Published on

தென்ன 21 நாட்கள்? ஆவணி அவிட்டம் கழிந்து எட்டாம் நாளன்று கோகுலாஷ்டமி வருவதைப் போல, தசரா முடிந்த 21 ஆம் நாள் தீபாவளிப் பண்டிகை வருகிறது.

லூனார் கேலண்டர்படி ஒன்றிரண்டு நாள்கள் வேறுபட்டாலும், பெரும்பாலும் 21 ஆம் நாள்தான் தீபாவளி வருகிறது. பல பண்டிகைகள் த்ரேதாயுகத்திலிருந்து கொண்டாடப்பட்டு வருகின்றன.

ஸ்ரீராமபிரான் ராவணனுடன் யுத்தம் செய்து வெற்றி பெற்ற தினம் தசராவாக கொண்டாடப்பட்டு வருகிறது. பின்னர் ஸ்ரீலங்காவிலிருந்து அயோத்திக்கு, தனது படைகளுடன் ஸ்ரீராமர் நடந்து வருவதற்கு 504 மணி நேரங்கள் பிடித்தன.

ஒரு நாளுக்கு 24 மணி நேரங்கள் என்ற கணக்கில், 504 ஐ 24ஆல் வகுக்கையில் கிடைப்பது 21 நாட்கள்.

ஸ்ரீலங்கா – அயோத்தி இரண்டிற்குமிடையே உள்ள 3145 கி.மீ. தூரத்தினை 504 மணி நேரங்களில் கடந்து வந்தது போற்றத் தகுந்தச் செயலாகும்.

ஸ்ரீராமர் அயோத்திக்குத் திரும்பியபோது, மக்கள் தீப விளக்குகளை ஏற்றி மகிழ்ந்தனர். இது பிற்காலத்தில் தீபாவளியெனப்பட்டது என்கிற கருத்து நிலவுகிறது.

அஞ்ஞான இருளை அகற்றி, மெய்ஞானம் பெற வேண்டுமென்பதுதான் தீபாவளிப் பண்டிகையின் முக்கியத்தவமும், உட்பொருளுமாகும்.

- ஆர். மீனலதா, மும்பை

-------------------------------------------------------------------------

 தீபாவளி தகவல்கள்: வழிபாடுகள்

* கேரளாவில் பொதுவாக தீபாவளி கொண்டாடப் படுவதில்லை. ஆனால், திருவாங்கூர் அருகே உள்ள வெங்கடாஜலபதி கோவிலில் உள்ள பூதேவிக்கு தீபாவளி அன்று சிறப்பு வழிபாடு செய்து 'குமட்டி'யை கோயிலுக்கு காணிக்கையாக அளிக்கின்றனர். விவசாயம் சிறப்பாக நடந்து, ஊர்மக்கள் செழிப்பாக வாழத்தான் இந்த வழிபாடாம்.

* வடநாட்டில் சில பகுதிகளில் தீபாவளியை முன்னிட்டு வண்ண ரங்கோலி கோலங்கள் போட்டுக் கொண்டாடு வார்கள். இது வெள்ளை, மஞ்சள், பழுப்பு நிறங்களைக் கொண்டு திகழும். கோலத்தின் நடுவில் குத்து விளக்கு ஏற்றி வைப்பார்கள். லட்சுமி தேவியை தமது இல்லத்திற்கு வரவேற்பதாகவும், ஏற்கனவே வீட்டில் அருள் புரியவும் ஐஸ்வர்யம் வெளியே போகாமல் இருக்கவும் இவ்வாறு வண்ணக் கோலம் இடுவது அங்கே வழக்கம்.

* கர்நாடகா மாநிலம் சூலூர் கணேஷ் கோவிலுக்கு பிருகு முனிவர் வந்தபோது, பிள்ளையாரை மண்ணில் செய்து வழிபட்டாராம்‌. அந்த நாள் தீபாவளியாம். இதனால் சூலூர் மக்கள் தீபாவளிக்கு முதல் நாள், இங்குள்ள மூன்று குளங்களில் இருந்து மண்ணெடுத்து வந்து 8 முதல் 10 அடி உயரத்தில் பிரம்மாண்ட பிள்ளையார் செய்து, அதற்கு தீபாவளி அன்று சிறப்பு அபிஷேகம் செய்கின்றனர்.- - - பி. -மஹதி ஸ்ரீரங்கம்

-------------------------------------------------------------------------

 தீபாவளி தகவல்கள்: மலைப் பிரதேசங்களில் தீபாவளி

மலைவாழ் மக்கள் தீபாவளியை வித்தியாசமான முறையில் கொண்டாடி மகிழ்கின்றனர்.

ஜார்கண்ட் மலைவாழ் மக்கள் தீபாவளியை சொக்ராய் எனக் கொண்டாடுகின்றனர். இவர்கள் அறுவடை மற்றும் தங்களின் கால்நடைகளைக் கவுரவிக்கும் விதமாகக் கொண்டாடுகிறார்கள்.

மண்ணால் ஆன தங்கள் வீடுகளை நன்றாகக் கழுவி, அதில் வண்ணப்பூச்சு அடித்து, தங்களால் தயார் செய்யப்பட்ட தானியங்களை வைத்து வழிபடுவதுடன், கால்நடைகளை அலங்கரித்து, லட்சுமிக்கு பூஜை செய்கின்றனர். தங்கள் குடும்பத்தை ஆரோக்யமாகவும், வளமாகவும் வைக்க தேவியை வேண்டி பூஜிக்கின்றனர்.

ஒடிசாவில் மலைவாழ் மக்கள் தங்கள் மூதாதையரை அழைத்து ஆசிர்வாதம் பெற்று மகிழ்வர். இதுசமயம் ஒவ்வொரு வரும் தங்கள் வீட்டின் முன் தீ மூட்டி எங்களை ஆசிர்வதித்துக் காப்பாற்றுங்கள் என வேண்டுவர்.

சிந்தி இன மக்கள் தீபாவளியைத் தியாரி என அழைக்கின்றனர். இதுசமயம் தங்களிடமுள்ள வெள்ளி, தங்கக் காசுகளை பாலில் கழுவி, தங்கள் பற்களுக்கு இடையே வைத்துக்கொண்டு 'லட்சுமி ஆயி', தண்ட் வாயி'  எனக் குரல் கொடுப்பர். இதன் பொருள் லட்சுமி வரும்போது, எங்கள் பஞ்ச நிலைமை பறந்தோடி விடுகிறது என்பதாகும்.

குஜராத்தில் நர்மதா, ப்ரூஃப் பகுதி ஜாதியினர் தனிவிதமாகக் கொண்டாடுகின்றனர். இவர்கள் விளக்குகளை ஏற்றி நல்ல ஆரோக்யத்தைத் தா என்று வேண்டுகின்றனர். பதினைந்து நாள் விழாவாகக் கொண்டாடி மகிழ்கின்றனர். வெடி வெடிப்பதுபோல் மரங்களை எரிக்கின்றனர். நல்ல வாசனையுடன் எரியும் மரங்களிலிருந்து வரும் புகை நன்மையேத் தரும் என நினைக்கின்றனர். ஆட்டம், பாட்டம் எனத் திருவிழா கொண்டாட்டமாக தீபாவளியை ஆடி களிக்கின்றனர். 

சத்தீஸ்கர் மாநிலத்தில் பசார் மலைவாழ் மக்கள் தீபாவளியை தியாரி என அழைத்து தம் வீட்டில் விளைந்த தானியங்களை ஒருவருக்கொருவர் பரிமாறி ஆரோக்யம், செல்வ வளம் பெருக வாழ்த்துவர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தாக்குர் இன மக்கள் நாட்டுப்புற பாடல்கள், ஆடல்களுடன் தீபாவளியைச் சிறப்பாக கொண்டாடுவர். உலர்ந்த பழத்தில் விளக்கு செய்து, பசுஞ்சாணத்தால் அமைக்கப்பட்ட குட்டி மேடையில் வைத்து, விளக்கேற்றி தானியங்களைப் பரப்பி, லட்சுமிக்கு படைத்து வேண்டி, பின் விருந்து உண்கின்றனர்.

வடகர்நாடகா, தும்கூரு பகுதி மற்றும் மல்நாடு பகுதியில் கொண்டாடப்படும் தீபாவளி வித்தியாசமாக இருக்கும். பாலபாதயாமி அன்று கையில் பெரிய விளக்கேற்றி வைத்து கொண்டு வீடு வீடாகச் சென்று விளக்கேற்று கின்றனர்.

இரவு விஜயம் செய்யும் விளக்குடன் வருபவர் முதலில் கோயிலிலிருந்து கிளம்பி ஒவ்வொரு வீடாகச் சென்று அழைத்து ஆடிப் பாடி தங்கள் விளக்கைக் கொடுத்து வீட்டில் உள்ள விளக்கை ஏற்றச் சொல்வர். பின் வேண்டுதல் வைத்து விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

கலியுக வைகுண்டம் எனப்படும் திருப்பதி ஸ்ரீவேங்கடேஸ்வர ஆலயத்தில் தீபாவளியன்று மாலையில் அஸ்தரதானம் என்ற சிறப்பு வழிபாடு நடக்கிறது. முதலில் மலையப்ப சுவாமி தங்கபல்லக்கில் உள்பிரகாரம் சுற்றி வருகிறார். பிறகு கருடாழ்வார் சன்னிதிக்கு எதிராக இறக்கி வைக்கப்படுகிறார். அடுத்து 'விசூஷபாடி' என்ற நிகழ்ச்சி நடைபெறும். அதுசமயம் மூலவருக்கு அணிய பட்டு வஸ்திரங்கள் புதிதாக வழங்கப்படுகின்றன.

குமாவோன் மலையில் தீபாவளியன்று வீடுகளில் ரங்கோலிகள் போடப்படுகின்றன. பெண்கள் அரிசி மாவு, வண்ணங்கள் கலந்து போடப்படும் கோலங்களைக் கற்பூரம் ஏற்றி வழிபடுகிறார்கள். சந்தனத்தால் செய்யப்பட்ட லட்சுமி திருவுருவச் சிலையைத் தாமிரத்தட்டில் வைத்து, கரும்புச் சாறால்  அபிஷேகிக்கிறார்கள்.

- மகாலட்சுமி சுப்பிரமணியன்,  காரைக்கால்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com